Published : 01 Feb 2018 01:51 PM
Last Updated : 01 Feb 2018 01:51 PM

குடியரசுத் தலைவர் ஊதியம் ரூ.5 லட்சம்; ஆளுநர்கள், எம்.பி.க்களுக்கும் இரு மடங்கு சம்பள உயர்வு

குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு மிகப் பெரிய ஊதிய உயர்வை பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் 2018-19ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

குடியரசுத் தலைவரின் மாத ஊதியம் தற்போது ரூ.1.50 லட்சமாக இருந்தது, இது ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. அதேபோல் துணை குடியரசுத் தலைவருக்கு மாதத்துக்கு ரூ.1.25 லட்சம் ஊதியம் தரப்பட்டு வருகிறது, அது இனி ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படுகிறது. மாநில ஆளுநர்களின் ஊதியம் ரூ.1.10 லட்சத்தில் இருந்து ரூ. 3.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

எம்.பி.க்களைப் பொறுத்தவரை, நாட்டில் நிலவும் பணவீக்கத்துக்கு ஏற்ப, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியத்தை மாற்றிக்கொள்ளும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது என அறிவித்தார்.

7-வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டபின் அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. அப்போது, மத்திய அரசின் உயரிய பதவியான அமைச்சரவைச் செயலாளருக்கு அதிகபட்சமாக ரூ.2.50 லட்சமாக ஊதியம் உயர்ந்தது. செயலாளருக்கு ரூ.2.25 லட்சமாக அதிகரிக்கப்பட்டது.

மும்படைத் தளபதிகளுக்கும் தலைவர் குடியரசுத் தலைவர்தான். ஆனால், 7-வது ஊதியக்குழுவுக்கு பின் இவர்கள் அனைவரும் பெறும் ஊதியம், குடியரசுத் தலைவரைக் காட்டிலும் அதிகரித்தது. அனைத்து பிடித்தங்களும் போக வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஊதியம் அளவு நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரைக் காட்டிலும் அதிகமாக இருந்தது.

ஊதிய உயர்வு குறித்து பரிசீலிக்க அமைக்கப்பட்ட எம்.பி.க்கள் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x