Last Updated : 01 Feb, 2018 11:13 AM

 

Published : 01 Feb 2018 11:13 AM
Last Updated : 01 Feb 2018 11:13 AM

சரக்கு வாகன ஓட்டிகளே மறந்துவிடாதீர்கள்...இன்று முதல் இ-வே பில் கட்டாயம்

தமிழகம் உட்பட 14 மாநிலங்களில் இ-வே பில் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

சரக்கு வாகனங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கோ அல்லது ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கோ பொருட்களை எடுத்துச் செல்லும் போது சரக்கு வாகன ஓட்டிகள் இ-வே பில் வைத்திருப்பது கட்டாயமாகும்.

கடந்த 15 நாட்களாக சோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இ-வே பில் முறை நேற்றுடன் முடிந்துவிட்டது. இன்று முதல் முறைப்படி இ-வே பில் வைத்திருப்பது கட்டாயமாகிறது.

இ-வே பில் என்றால் என்ன?

மாநிலங்களுக்கு இடையே சரக்குகளை எடுத்துச் செல்லும்போது எந்த விதமான இடையூறும் இன்றி எடுத்துச் செல்ல இ-வே பில் நடைமுறை உதவும். அதாவது, ஜிஎஸ்டியில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகர் ஒருவர் ரூ.50 ஆயிரம் மதிப்புக்கு அதிகமான பொருட்களை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு அனுப்பினாலோ அல்லது 10 கி.மீ தொலைவுகூட அனுப்பினாலோ, ஜிஎஸ்டிஎன் போர்டலில் சென்று இ-வே பில்லை உருவாக்க வேண்டும்.

அதாவது பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தால், ஜிஎஸ்டி வர்த்தகரின் பெயர், எந்த இடத்துக்கு பொருட்கள் செல்கிறது, இன்வாய்ஸ் எண், தேதி, பொருட்களின் மதிப்பு, எச்எஸ்என் கோட், வாகனத்தின் எண், அல்லது ரயில்வே, விமானம் குறித்த விவரம், காரணம், வாகன எண் ஆகியவற்றை அந்த இ-வே பில்லில் குறிப்பிட வேண்டும். ரூ. 50 ஆயிரம் மதிப்புக்கு அதிகமான பொருட்களை 10கி.மீ தொலைவு அனுப்பினால்கூட இந்த பில் கட்டாயம். ஒரு பொருள் பலரிடம் கைமாறி 3 பில்கள் போட்டிருந்து அதன் கூட்டு மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தாலும் இ-வே பில் கட்டாயமாகும்

இ-வே பில் இல்லாவிட்டால் என்ன ?

இ-வே பில் இல்லாமல் சரக்குகளை அனுப்பி, அது வருவாய் துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டால், சரக்குகளின் மதிப்பைக் காட்டிலும் இரு மடங்கு அபராதம் சரக்கின் உரிமையாளருக்கு விதிக்கப்படும்

எந்த மாநிலங்களில் அமலாகிறது ?

தமிழகம், ஆந்திரா, பிஹார், கர்நாடகம், புதுச்சேரி, சிக்கிம், தெலங்கானா, கேரளா, உத்தரப் பிரதேசம் உட்பட 14 மாநிலங்களில் அமலாகிறது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு சரக்குகளை வேகமாக கொண்டு செல்லவும், சுங்கச்சாவடிகளில் லாரிகள் காத்திருப்பை தவிர்க்கவும் இந்த நடைமுறை பயன்படும்.

எங்கு தேவையில்லை

துறைமுகம், விமான நிலையம், ஏர் கார்கோ நிலையம், சுங்கவரி அலுவலகம் ஆகிய இடங்களில் இருந்து பொருட்களை கொண்டு செல்லும் போது பொருட்களின் மதிப்பு ரூ. 50 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால், இ-வே பில் தேவையில்லை.

எத்தனை மணிநேரம் செல்லுபடியாகும் ?

சரக்குகளை கொண்டு செல்லும் தொலைவைப் பொறுத்து இ-வே பில் செல்லுபடியாகும். 100 கி.மீ தொலைவுக்கு உள்ளாக ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமான பொருட்களைக் கொண்டு சென்றால், அந்த இ-வே பில்லின் காலக்கெடு பில் போடப்பட்ட நேரத்தில் இருந்து 24 மணி நேரம் மட்டும் செல்லுபடியாகும். 100 கி.மீ மேலாக இருந்தால், ஒவ்வொரு 100 கி.மீட்டருக்கும் கூடுதாலாக ஒருநாள் செல்லுபடியாகும். இ-வே பில் காலக்கெடு முடிந்துவிட்டால், புதிய இ-வே பில் சரக்குகளின் உரிமையாளரால் உருவாக்கப்பட்டு அதன்பின்புதான் சரக்குகள் கொண்டு செல்லப்பட வேண்டும் . இல்லாவிட்டால்,அபராதம் விதிக்கப்படும். இந்த இ-வே பில் லாரிகள் மட்டுமின்றி, விமானம், ரயில் மூலம் அனுப்பப்படும் சரக்குகளுக்கும் கட்டாயமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x