Published : 20 Jan 2018 09:58 AM
Last Updated : 20 Jan 2018 09:58 AM

தொழில் ரகசியம்: தவறுகளை குறைக்கும் கண்ணாடி!

பிடிக்கிறதோ இல்லையோ தினம் நம் முகத்தை நாமே பார்க்க வேண்டியிருக்கிறது. கடனே என்று சிலர் பார்க்க, காதலியை பார்ப்பது போல் சிலர் கண்ணாடியே கதி என்று கிடக்கிறோம். கண்ணாடி நம் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் பிரதிபலிக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள். நாம் எப்பேற்பட்டவர், நம்மை மற்றவர்களுக்கு எப்படி காட்ட விரும்புகிறோம் என்பதைக் கூட கண்ணாடி கூறுமாம். முகம் பார்க்கும் கண்ணாடியில் மனம் பார்க்கும் விதம் பற்றி கொஞ்சம் பேசுவோம்.

சமூக உளவியலாளர் `ஆர்தர் பீமென்’ மற்றும் அவர் சகாக்கள் அமெரிக்க ஹாலோவீன் பண்டிகையின்போது செய்த ஆய்விலிருந்து துவங்குவோம். அந்த ஆய்வு பற்றி கூறும் முன் ஹாலோவீன் பற்றி கூற வேண்டியிருக்கிறது. ஹாலோவீன் இறந்தவர்களை நினைத்து பார்க்கும் வித்தியாசமான அமெரிக்க பண்டிகை. அன்றைய தினம் குழந்தைகள் பேய், பிசாசு போல் உடையணிந்து அக்கம்பக்கத்து வீடுகளுக்கு சென்று ‘ட்ரிக் ஆர் ட்ரீட்?’ என்று கேட்பார்கள். ‘சாக்லெட் தரியா இல்லை உன்னை பயமுறுத்தட்டுமா’ என்று அர்த்தம். வீட்டிலுள்ளவர்கள் ஹாலோவீன் அன்று வரும் குழந்தைகளுக்கு தருவதற்கென்றே சாக்லெட்டை ரெடியாய் வைத்திருப்பார்கள்.

ஒரு ஹாலோவீன் தினத்தில் பல வீடுகளை தேர்ந்தெடுத்தனர் ஆய்வாளர்கள். கதவை தட்டி `ட்ரிக் ஆர் ட்ரீட்’ என்று கேட்ட குழந்தையை வீட்டுக்காரர் வரவேற்று `டேபிளில் சாக்லெட் வைத்திருக்கிறேன், அதிலிருந்து ஒன்றை எடுத்துக்கொள் எனக்கு வேலை இருக்கிறது’ என்று கூறி வீட்டிற்குள் செல்லுமாறு கூறப்பட்டனர். இது குழந்தைகளுக்கு ட்ரீட் என்றாலும் அவர்களுக்கு தெரியாமல் அதில் ஒரு ட்ரிக் இருந்தது. உள்ளே நுழைந்த குழந்தை சொன்னது போல் ஒரு சாக்லெட் தான் எடுக்கிறதா இல்லை அதிகம் எடுக்கிறதா என்று ஆராய்ச்சியாளர்கள் மறைந்திருந்து கண்காணித்தனர். குழந்தைகள் ஒரு சாக்லெட் தான் எடுத்தார்களா?

யாரும் அருகிலில்லை என்ற தைரியத்தில் 33% குழந்தைகள் ஒன்றுக்கு மேல் சாக்லெட் எடுத்தனர். என்ன தான் ஹாலோவீன், குழந்தை, சாக்லெட் என்றாலும் திருட்டு திருட்டு தானே. இதை தடுக்க முடியுமா என்று பார்க்க அடுத்த கட்டமாக சாக்லெட் வைக்கப்பட்டிருந்த டேபிளுக்கு எதிரே முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்தனர். சாக்லெட் எடுக்க வரும் குழந்தை அக்கண்ணாடியில் தன்னை பார்த்துவிட்டு தான் சாக்லெட் எடுக்க முடியும் என்னும்படியாக கண்ணாடியை வைத்தனர் ஆய்வாளர்கள். முன்னாடி இருந்த கண்ணாடி பின்னாடி எதாவது செய்ததா?

பேஷாக. இம்முறை ஒன்றுக்கு மேல் சாக்லெட் எடுத்த குழந்தைகளின் எண்ணிக்கை 8% ஆக குறைந்தது. இது ஏதோ ஒரு குழந்தை, அல்லது இரண்டு குழந்தைகள் செய்வதைப் பார்த்து பெறப்பட்ட முடிவு அல்ல. 1,300 குழந்தைகளை கண்காணித்து பெறப்பட்ட முடிவு என்பதை நினைவில் கொள்க. கவனம் நம் மீது விழும் போது நாம் சமூக பார்வைக்கு ஏற்ப சரியாய் நடந்துகொள்ள முயல்கிறோம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தங்கள் ஆய்வு முடிவுகளை `Journal of Personality and Social Psychology’யில் ‘Self-awareness and transgression in children’ என்ற ஆராய்ச்சி கட்டுரையாக வெளியிட்டனர்.

கண்ணாடியை வைத்து குழந்தைகளை வேண்டுமானால் பயமுறுத்த முடியும், பெரியவர்களிடம் இந்த பாச்சா பலிக்காது என்று தானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. இதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளக்க இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை நடத்தப்பட்ட சில ஆய்வுகளை விளக்குகிறேன்.

அப்படி ஒரு ஆய்வு கல்லூரி ஒன்றில் நடத்தப்பட்டது. மாணவர்கள் ஆய்விற்காக ஒரு அறைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் கையில் ஜெல் போன்ற ஒன்றை தடவி அவர்கள் இதயத் துடிப்பை கணக்கிடும் ஆய்வு என்று அவர்களுக்கு கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அதுவல்ல ஆய்வு. அவர்கள் வெளியேறும் போது தான் ஆய்வு செய்யப்படப்போகிறார்கள் என்பது மாணவர்களுக்கு தெரியாது. கையில் ஜெல் தடவி இதய துடிப்பு கணக்கிடப்படுவது போன்ற பாவ்லா முடிந்தவுடன் அவர்கள் கையை துடைத்துக்கொள்ள பேப்பர் டிஷ்யூ தரப்பட்டு அவர்கள் கிளம்பிச் செல்லலாம் என்று கூறப்பட்டது. கையை துடைத்தவாரே கதவை திறந்து வெளியே சென்றவர்களில் சுமார் 46% பேர் டிஷ்யூவை கதவோரம் தரையில் போட்டுச் சென்றனர்.

ஆய்வின் அடுத்த கட்டமாக கதவுக்கு முன் ஆளுயர முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டது. வெளியே செல்பவர்கள் தங்கள் உருவத்தை பார்துவிட்டுத்தான் செல்லமுடியும் என்பது போன்ற ஏற்பாடு. இப்பொழுது கையை துடைத்துக்கொண்டே டிஷ்யூவை கதவோரம் அப்படியே தரையில் போட்டுச் சென்றவர்களின் எண்ணிக்கை 24% மட்டுமே. கண்ணாடியில் தங்களை பார்க்காத போது தரையை குப்பை ஆக்கியவர்கள் கிட்டத்தட்ட இரண்டில் ஒருவர் என்றால் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்துவிட்டு தரையை குப்பையாக்கியவர்கள் நான்கில் ஒருவர் மட்டுமே.

நம்மை நாமே கண்ணாடியில் பார்க்கும்போது நாம் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ அது போல் இருக்கவேண்டும் என்ற பிரக்ஞை அதிகரிக்கிறது என்கிறார்கள் உளவியலாளர்கள். கண்ணாடி முன்னால் நிற்கும்போது நாம் ஏன் நகம் கடிப்பதில்லை, அசிங்கமாக சொரிந்து கொள்வதில்லை என்பது புரிகிறதா!

அல்ப கண்ணாடி கொண்டு பல விதங்களில் மக்களை திருத்த முடியும், திருட்டுகள் நடக்காமல் கூட தடுக்க முடியும் என்று பல ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. ஒரு கம்பெனி கோடவுனில் சாமான் தொலைந்து கொண்டே இருந்தது. வெளியிலிருந்து திருடன் வரவில்லை, கம்பெனியில் வேலை செய்பவர்கள் தான் திருடுகிறார்கள் என்பதை உணர்ந்தார் மானேஜர். வீடியோ கேமிராக்கள் நிறுவலாம் என்றால் அதில் இரண்டு பிரச்சினைகள். ஒன்று, அவருடைய கம்பெனி ஏகத்திற்கும் பெரிசு. எல்லா இடங்களிலும் கேமிரா பொருத்த அதிகம் செலவு ஆகும். மேலும் கம்பெனி முழுவதும் கேமிரா பொருத்தினால் நாணயமான ஊழியர்கள் ‘கம்பெனிக்கு மாடாய் உழைக்கும் என்னை திருடனைப் போல் பார்க்கிறார்களே’ என்று வருத்தப்படுவதோடு வேலை செய்யும் ஆர்வம் குறையுமே என்கிற பயம்.

பார்த்தார் மானேஜர். கம்பெனியில் எங்கெல்லாம் திருட்டு அதிகம் நடக்கிறதோ அங்கெல்லாம் முகம் பார்க்கும் கண்ணாடிகளை பொருத்தினார். திருடுபவன் தன் முகத்தை பார்க்காமல் திருட முடியாதபடி கண்ணாடிகளை வைத்தார். இதனால் பெருமளவுக்கு திருட்டு குறைந்தது!

நம்மூர் அலுவலகங்கள் பலவற்றின் படிக்கட்டுகளில் வெற்றிலை துப்பி நாறடித்திருப்பதை பார்த்திருப்பீர்கள். அது போன்ற இடங்களில் எல்லாம் கண்ணாடி வைத்து பார்க்கலாம். தன் முகத்தை பார்த்துக்கொண்டே எவன் துப்புகிறான் என்று. சில தெருக்கள் அல்பசங்கை கழிப்பதற்கென்றே பிரத்யேகமாக கட்டப்பட்டதோ என்று நினைக்கும் அளவிற்கு பலர் அவைகளை பாத்ரூமாக பயன்படுத்துகின்றனர். அங்கெல்லாம் கண்ணாடியை வைத்து ‘எங்கே, உன் முகத்தை பார்த்துக்கொண்டே ஸிப்பை கழட்டு பார்க்கலாம்’ என்று சவால் விடலாம்!

கண்ணாடிகளைக் கொண்டு வாடிக்கையாளர் சேவையை கூட்டும் வழிகளையும் ஆராயலாம். எங்கெல்லாம் வாடிக்கையாளர்கள் விற்பனையாளர்களிடம் வாக்குவாதம் அதிகம் செய்யும் சூழ்நிலைகள் இருக்கிறதோ அந்த இடங்களில் கண்ணாடி வைக்கலாம். தங்கள் முகத்தைப் பார்த்துவிட்டு மரியாதை குறைவாக பேசுவர் எண்ணிக்கை குறையும். அதனால் ஏற்படும் சண்டை சச்சரவுகளும் குறையும். ஆபீஸிற்கு வருபவர்கள் ஒழுங்கு மரியாதையாய் ஷேவ் செய்து, டீக்காக டிப்டாப்பாய் உடையணிந்து வரும் வகையாக ஆபீஸ் எங்கும் கண்ணாடிகளை பொருத்தலாம்.

தவறு செய்பவர்களிடம் ‘அது எப்படி தப்பு செஞ்சுட்டு உன் முகத்தை கண்ணாடியில் பார்க்க முடியுது’ என்று சிலர் கூறுவதை கேட்டிருப்பீர்கள். தவறு செய்த பின் பார்க்கிறார்களோ என்னவோ தவறு செய்யும்போது தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்ப்பதில்லை. அப்படி பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தினால் அவர்கள் தவறு செய்வதை குறைக்கலாம் என்பது மட்டும் கண்ணாடி போல் நிதர்சனம்!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x