Published : 06 Jan 2018 10:12 AM
Last Updated : 06 Jan 2018 10:12 AM

தொழில் ரகசியம்: புத்தாண்டு சபதம் வாழ்க்கைக்கு மட்டும்தானா...

ரு புத்தாண்டு பிறக்கக் கூடாதே, உடனேயே பலருக்கும் நல்ல எண்ணங்கள் பீறிட்டு அடிக்கும். புது வருடத்திலிருந்து அதை செய்யப் போகிறேன், இதை விடப் போகிறேன், ஜனவரி ஒன்று முதல் நான் புது மனிதனாக்கும் என்று தீர்மானங்களுக்கு குறைவே கிடையாது. இதில் எத்தனை பேர் ஜனவரி 2-ம் தேதி அதை கடைபிடிக்கிறார்கள்?

என் நண்பர் 2017-ம் வருடம் தினம் படிக்கப் போகிறேன் என்று ஏகப்பட்ட புக்ஸ் வாங்கி ஷெல்ஃபில் அடுக்கி `இவை என்னை மேம்படுத்தபோகும் செல்ஃப் இம்ப்ரூவ்மெண்ட் புக்ஸ்’ என்றார். சென்ற மாதம் அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அத்தனையும் அடுக்கப்பட்டபோது எப்படி இருந்ததோ அப்படியே இருந்தது. ஒன்றை கூட அவர் படிக்கவில்லை. அழகாய் அடுக்கப்பட்டு `ஷெல்ஃப் இம்ப்ரூவ்மெண்ட்’ புத்தகங்களாக மாறியிருந்தன!

இன்னொரு நண்பர் சற்று ரெட்டை நாடி. டபுள் எக்ஸல் சட்டையே டைட்டா இருக்கு என்பார். 2017 முதல் டெயில் போட் ஹவுஸ் ரோடில் வாக்கிங் போக போகிறேன் என்று வரலாறு காணாத தன் வயிற்றின் மீது சத்தியம் செய்தார். போன வாரம் அவரோடு போனில் பேசும்போது `வாக்கிங் போக போறேன்னீங்களே’ என்றேன். அவர் ‘நானே உங்கள கேட்கனும்னு இருந்தேன், போட் ஹவுஸ் ரோடு எங்க இருக்கு சார்’ என்று கேட்டார். ராங் நம்பர் என்று போனை வைத்துவிட்டேன்.

புத்தாண்டு தீர்மானங்கள் பத்தாண்டுகள் ஆனாலும் செய்யப்படுவதில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். அது என்ன ‘உடலை குறைக்கிறேன்’, ‘புத்தகம் படிக்கிறேன்’ என்றுதான் தீர்மானம் போடவேண்டுமா? வாழ்க்கையில் தான் தவறு செய்கிறோமா? வியாபாரத்தில் மட்டும் என்ன வாழ்கிறதாம்? இந்த வருடம் வியாபாரத்தில் செய்யும் தவறுகள் சிலவற்றை திருத்த முடியுமா என்று பாருங்களேன்.

காலை எழுந்து வாக்கிங் சென்று மில்லட்ஸ் கஞ்சி குடித்து ஆபீஸ் போகிறீர்கள். இந்த வழக்கம் வாழ்க்கைக்கு ஓகே. வியாபாரத்தில் இந்த வருடம் கொஞ்சத்துக்கு கொஞ்சம் ஏதாவது புதுமை செய்யுங்களேன். பிராண்டில் புதுமை புகுத்த முடியுமா என்று யோசியுங்கள். இதுவரை விற்காத கடை பிரிவில் விற்கும் வழியை தேடுங்கள். புதிய வகையில் விளம்பரம் தாருங்கள். பேக்கிங்கில் புதுமை புகுத்துங்கள். செய்ததையே செய்துகொண்டிருந்தால் கிடைத்ததே தான் கிடைத்துக்கொண்டிருக்கும். புதியதை முயன்றால் தான் புதிய பரிசுகள் கிடைக்கும். புதிய வழிகள் பிறக்கும்!

புதுமை செய்கிறேன் என்று பிராண்டின் பொசிஷனிங்கை அதன் ஆதார தன்மையை மாற்றித் தொலைக்காதீர்கள். பொசிஷனிங் என்பது அடிக்கடி மாற்ற நீங்கள் போடும் சட்டை இல்லை. அது உங்கள் பெயர் போன்றது. மாற்றினால் வில்லங்கம். அருகில் இருந்து அழைத்தாலும் யாரையோ அழைக்கிறார்கள் என்று அசையமாட்டீர்கள். பிராண்ட் பொசிஷனிங்கும் அது போல. காலத்திற்கும் நிலைக்கவேண்டியது. அதன் ஆதார தன்மை மாறாமல் புதுமை புகுத்துங்கள்.

இவ்வருடம் விலை குறைப்பு, ஆஃபர் போன்ற அல்பதனங்களை செய்ய மாட்டேன் என்று சாமி முன்னால் சத்தியம் செய்யுங்கள். உங்களுக்கும் உங்கள் தொழிலுக்கும் புண்ணியமாக போகும். விலை குறைத்து என்ன கண்டீர்கள். ஆஃபர் தந்து என்ன சாதித்தீர்கள். இதை நம்புவதை விட வாடிக்கையாளருக்கு என்ன தேவையோ அதை மற்றவர்களை விட பெட்டராய் தாருங்கள். விலை பார்க்காமல் வாடிக்கையாளர் உங்கள் பிராண்டை வாங்குவார். ஆடி மாதம் மட்டுமல்ல, அத்தனை மாதங்களும்!

வாடிக்கையாளர் என்றதும் ஞாபகத்திற்கு வருகிறது. அவரை புரிந்துகொள்ள, அவர் வாங்கும் முறையை, அவர் எண்ணங்களை அறிந்துகொள்ள மார்க்கெட் ரிசர்ச் செய்கிறீர்களா? ஒரு புரஃபெஷனல் ரிசர்ச் நிறுவனம் கொண்டு பிராண்ட் ஆடிட் செய்யுங்கள். இதுவரை செய்யவில்லையே என்று கூறாதீர்கள். இனியாவது செய்யுங்கள். பொருள் பிரிவு அறிய, வாடிக்கையாளர் புரிய, போட்டியாளர்கள் வியூகம் தெரிய, உங்கள் பிராண்டை முழுமையாக உணர மார்க்கெட் ரிசர்ச் அவசியம். அவசரமும் கூட. தேர்ந்த ஆலோசகர் உதவியுடன் இந்த வருடமாவது செய்யுங்கள்.

என்னுடையது சின்ன கம்பெனி, எனக்கு இது தேவையா என்று சால்ஜாப்பு கூறி தட்டிக் கழிக்காதீர்கள். மார்க்கெட் ஆச்சரியங்களுக்கும், பொருள் பிரிவு அதிர்ச்சிகளுக்கும் சின்னது பெரியது தெரியாது. எல்லா பிராண்டுகளையும் ஒருசேர சரமாரியாய் சகட்டுமேனிக்கு தாக்கும். அவைகளை வருமுன் அறிவது உங்கள் பிராண்ட் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடம்பை மட்டும் ரெகுலராக செக்கப் செய்கிறீர்களே, உங்கள் பிராண்ட் மட்டும் என்ன பாவம் பண்ணியது சார்!

கம்பெனிக்கு ஆடிட்டர் வைத்திருக்கிறீர்கள். ஓகே. மனித வள மேலாளர் இருக்கிறார், பலே. இந்த மார்க்கெட்டிங், மார்க்கெட்டிங் என்கிறார்களே. உங்களில் சிலர் கூட ‘அதில் நான் கிங்காக்கும், நானே பார்த்துக்கொள்வேன்’ என்று அழிச்சாட்டியம் செய்து தனி ஆவர்தனம் செய்து அபஸ்வர கச்சேரி நடத்துகிறார்களே, அதை கொஞ்சம் கவனித்தால் தேவலை. இந்த வருடம் மார்க்கெட்டிங் அனுபவம் உள்ள ஒருவரை அமர்த்தி கம்பெனியையும் பிராண்டுகளையும் நேர்படுத்துங்கள்.

பல பிராண்டுகள் வாய் இருந்தால் அழும். வராத மார்க்கெட்டிங்கை வற்புறுத்தி வரவழைத்து பலர் தங்கள் பிராண்டை பாடாய் படுத்துகிறார்கள். இந்த வருடம் அந்த இயலுக்கு கொஞ்சமேனும் விமோசனம் தந்தால் தேவலை. எந்தத் தொழிலுக்கும் ஆதாரம் மார்க்கெட்டிங் மற்றும் புதுமையான சிந்தனைகள் என்று ‘பீட்டர் ட்ரக்கர்’ கூறியதை பல முறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். மார்க்கெட்டிங்கை பலர் படுத்தும் பாட்டைப் பார்த்து ட்ரக்கர் சவப்பெட்டிக்குள்ளேயே புரண்டு மீண்டும் ஒரு முறை இறந்து போகலாமா என்று யோசிப்பதாக கேள்வி!

மார்க்கெட்டிங் என்பது ஒரு கலை. வாடிக்கையாளர் மனதை புரிந்து, அவர்கள் நடந்துகொள்ளும் விதம் அறிந்து, மார்க்கெட்டிங் ட்ரெண்ட்ஸ் தெரிந்து, போட்டியாளர் வியூகம் புரிந்து காய்களை நகர்த்தவேண்டிய செஸ் ஆட்டம். அதை ஆட நல்ல ஆட்டக்காரரை அமர்த்துங்கள். உங்களுக்கு உதவ மார்க்கெட்டிங் ஆலோசகரை கோச் போல நியமித்தாலும் தப்பில்லை. தெரிந்தவரிடம் ஆலோசனை கேட்டு அதன்படி நடப்பதால் ஒன்றும் குறைந்து போக மாட்டீர்கள்.

உங்களுக்கு மட்டும் மார்க்கெட்டிங் தெரிந்தால் போதாது. ஊழியர்களுக்கும் தெரிய வேண்டும். உங்கள் பாஷை அவர்களுக்கு புரியவேண்டும். மார்க்கெட்டிங் ஆட்டத்தை முன்னால் நின்றாடும் போர் வீரர்கள் அவர்கள். அவர்களுக்கு மார்க்கெட்டிங் சூட்சுமம் தெரியவேண்டும். உங்கள் மார்கெட்டிங் திட்டம் அவர்களுக்கு புரிந்தால் தான் அதை சரியாய் நிறைவேற்றுவார்கள். தேர்ந்த மார்க்கெட்டிங் நிபுணரை கொண்டு அவர்களுக்கு மார்க்கெட்டிங் பயிற்சி வகுப்புகள் நடத்தி அவர்களையும் உங்கள் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த ஆண்டு மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும்!

பிராண்டிற்கு விளம்பரம் செய்கிறீர்களா? அதை நீங்களே டிசைன் செய்கிறீர்களா என்று கேட்டேன். ஆமாம் என்று பெருமையாக கூறினால் முதல் காரியமாக அந்த கண்றாவியை நிறுத்துங்கள். கையில் க்ரேயானும் பேப்பரும் இருக்கிறது என்று டிசைன் செய்ய விளம்பரம் சல்லிசான விஷயமல்ல. பிராண்ட் செய்தியை வாடிக்கையாளருக்கு கொண்டு சேர்த்து அவர் மனம் கவர்ந்து பிராண்டை வாங்க வற்புறுத்தும் வகையில் அமையவேண்டிய உண்மையும் உளவியலும் கலந்த க்ரியேடிவிடி சமாச்சாரம். எல்லோருக்கும் இத்திறமை வாய்ப்பதில்லை. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் அல்ல. க்ரேயான் கிடைத்தவனெல்லாம் க்ரியேடிவும் அல்ல. புது வருடத்திலாவது இந்த விளையாட்டை நிறுத்துங்கள். தேர்ந்தவர்களிடம் இந்த வேலையை தாருங்கள். உங்கள் பிரண்டிற்குற்கும் நல்லது. விளம்பரத்திற்கும் விமோசனம்.

வந்த பாதையில் திரும்பிச் சென்று மீண்டும் புதியதாய் துவங்க முடியாது. ஆனால் புதியதாய் துவங்கி செல்லும் பாதையை வெற்றிகரமாக மாற்ற முடியும். நடந்த பாதையும் செய்த தவறுகளையும் விடுங்கள். புதிய வருடம். புதிய பாதை. புதிய முயற்சிகளை புதியதாய் துவங்குங்கள். A year from now you will wish you had started today என்பார்கள். ஒரு வருடம் கழித்து அன்றே ஆரம்பித்திருக்கலாமே என்று தோன்றும். அன்று அப்படி நினைப்பதற்கு பதில் இன்றே ஆரம்பியுங்களேன்!

புதிய வருடம் புதிய புத்தகமாய் உங்கள் முன் விரிந்திருக்கிறது. 12 அத்தியாயங்கள். 365 பக்கங்கள். ஒவ்வொன்றிலும் உங்கள் வெற்றி எழுதப்பட என் வாழ்த்துக்கள்!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x