Published : 10 Dec 2017 09:29 AM
Last Updated : 10 Dec 2017 09:29 AM

வரி விலக்குகளை ரத்து செய்ய வேண்டும்: பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் பிபேக் தேப்ராய் கருத்து

தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரி விலக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் பிபேக் தேப்ராய் தெரி வித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: வரி விலக்குகளை நீக்கினால் வரி-ஜிடிபி விகிதம் அதிகரிக்கும். இதன் அடிப்படையில் வருமான வரிச் சட்டத்தை அரசு மறு ஆய்வு செய்யும் என்று நம்புகிறேன். ஆனால் இது தொடர்பாக எந்த வொரு முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. அடுத்த பட்ஜெட்டில் இது தொடர்பாக எந்தஅறிவிப்பும் இருக்காது.

தற்போது அளித்து வரும் வருமான வரி விலக்குகளால் மொத்த ஜிடிபியில் 5 சதவீதம் அளவுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்த விலக்குகளை நீக்கினால் வரி-ஜிடிபி விகிதம் 22 சதவீதமாக அதிகரிக்கும். வரி விலக்குகளை குறைக்காத வரை வரி-ஜிடிபி விகிதம் அதிகரிக்காது.

வரி ஏய்ப்பு நடைபெறுகிறது. ஆனால் வரி ஏய்ப்பை விட வரி செலுத்தாமல் எப்படி வருமானத்தை சரிசெய்வது என்பதுதான் அதிக அளவில் நடைபெறுகிறது. வரி ஏய்ப்பு என்பது சட்டவிரோதமானது. ஆனால் வரி செலுத்தாமல் வருமான கணக்கை சரி செய்வது முழுவதும் நேர்மையானதாக இருக்கிறது. ஏனெனில் வருமான வரியில் ஏராளமான விலக்குகள் உள்ளன.

50 ஆண்டு பழமையான வருமான வரிச் சட்டத்தை மறு ஆய்வு செய்வதற்கு தற்போது ஆறு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழு வருமான வரி விலக்குகள் தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுக்கும். ஆனால் இந்த விலக்குகள் தொடர்பாக எந்த முடிவும் அடுத்த பட்ஜெட்டில் எடுக்கப்பட வாய்ப்பில்லை.

வரி விலக்கு தொடர்பான தகவலை முதன் முதலில் 2016-ம் ஆண்டில் நிதியமைச்சர் ஜேட்லி முன்வைத்தார். அதனுடன் கார்ப்பரேட் வரியை பல கட்ட அடிப்படையில் குறைப்பதாகவும் அறிவித்தார். நேரடி வரி விலக்குகளை நீக்குவதை பொறுத்தவரை அரசியல்வாதிகளையோ அரசு அதிகாரிகளையோ நாம் குறை செல்ல முடியாது. யாரையாவது குறை சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் தொழில்துறையைதான் குறை சொல்ல வேண்டும். ஏனெனில் வரி விலக்கு தொடர்பான லாபியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தற்போது நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி முழுமையானது அல்ல. ஏனெனில் அதில் பல்வேறு வரி விகிதங்கள் மற்றும் விலக்குகள் உள்ளன. ஆனால் சரியான வழியில் செல்வதற்கு ஜிஎஸ்டி உதவி வருகிறது. பல வரி விகிதங்கள் இருந்தாலும் ஏற்கெனவே ஜிஎஸ்டிக்கு முன் நடைமுறையில் இருந்த வரி விகிதங்களை விட சிறப்பாக இருக்கிறது. ஜிஎஸ்டியில் வரி விலக்கும் இருக்கிறது. ஆனால் முன்பிருந்த விலக்குகளை விட குறைவாக இருக்கிறது.

சமூக கட்டமைப்பில் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் ஒரு தேக்க நிலையில் தற்போது இருக்கிறது. உதாரணமாக ஜன் தன் வங்கி கணக்கு திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது எப்படி அந்த வங்கி கணக்குகள் பயன்படுத்தப்படுகிறது, நிதி திட்டங்கள் எப்படி அவர்களுக்கு வழங்கப்படுகிறது, இந்த வங்கிக் கணக்குகள் அவர்களுக்கு பொறுத்தமானதாக இருக்கிறதா? என்பது குறித்து தற்போது விவாதிக்க வேண்டும்.

மேலும் தகவல்களை சேகரிக்கும் முறையில் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. உதாரணமாக நாட்டில் வேலைவாய்ப்பின்மை குறித்து எந்தவொரு நபரும் சரியான கணக்கை எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல் திறன் இடைவெளி குறித்து உடனடியாக ஆலோசிக்க வேண்டிய நிலை உள்ளது என்று பிபேக் தேப்ராய் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x