Last Updated : 10 Dec, 2017 09:29 AM

 

Published : 10 Dec 2017 09:29 AM
Last Updated : 10 Dec 2017 09:29 AM

யுனிடெக் நிறுவன இயக்குநர் குழு கலைப்பு: நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் அதிரடி

நிதி மோசடிகளில் ஈடுபட்டதன் காரணமாக யுனிடெக் நிறுவனத்தின் ஒட்டுமொத்தமான இயக்குநர் குழுவையும் கலைத்து தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கலைக்கப்பட்ட இயக்குநர் குழுவுக்கு பதிலாக புதிதாக 10 நபர்களை நியமிக்க அரசுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

யுனிடெக் நிர்வாகத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்வதன் மூலம் யுனிடெக் நிறுவனத்தில் வீடு வாங்க பண செலுத்திய 20,000 வாடிக்கையாளர்கள் மற்றும் 51,000 முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டிய ரூ.723 கோடியும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நிதி மோசடி காரணமாக ஐடி நிறுவனமான சத்யம் நிறுவனத்தை அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அதற்கு பிறகு தற்போது யுனிடெக் நிறுவனம் அரசின் வசம் வந்துள்ளது. சத்யம் நிறுவனத்தை பின்னர் மஹிந்திரா நிறுவனத்துக்கு அரசு விற்பனை செய்தது. அடுத்த விசாரணை டிசம்பர் 20-ம் தேதி நடைபெற உள்ளது. அப்போது புதிய இயக்குநர்கள் குறித்த விவரத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும் என தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் கூறியுள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள இயக்குநர்கள் தங்களது சொந்த சொத்துகள் மற்றும் நிறுவனத்தின் சொத்துகளை விற்கவும் தடை செய்துள்ளது.

மத்திய அரசின் மேல்முறையீட்டின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யுனிடெக் நிர்வாகத்தை கலைத்து விடலாம். ஆனால் ஆயிரக்கணக்கான சிறு முதலீட்டாளர்கள் மற்றும் வீடு வாங்க பணம் கட்டியவர்களின் நலன் அடிப்படையில் நிர்வாகத்தை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு வாதிட்டது. நீதிபதி எம். எம். குமார் தலைமையிலான இரண்டு நபர்கள் அமர்வு இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.

யுனிடெக் நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் சந்த்ரா மற்றும் இரண்டு நிர்வாக இயக்குநர்களான சஞ்சய் சந்த்ரா, அஜய் சந்த்ரா உள்ளிட்ட 8 இயக்குநர் கள் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் நிறுவனத்தின் நிர்வாகத்தை அரசு மேற்கொள்ளவும், 10 இயக்குநர்களை பரிந்துரை செய்யவும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று கூறியுள்ளது. யுனிடெக் இயக்குநர்களை பதவி நீக்கம் செய்யும் தங்களது உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மறுத்த தீர்பாயம், அரசு நியமனம் செய்யும் இயக்குநர்கள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்படவேண்டும் என்றும் குறிப் பிட்டுள்ளது.

புதிதாக நியமனம் செய்யப்படும் இயக்குநர்கள் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் நடைமுறைப்படுத்துவது மற்றும் இந்த வழக்கில் அனைத்து தரப்புடனும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினர். பதவி நீக்கம் செய்யப்பட்ட இயக்குநர்கள் தங்களது பதில் மனுவை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள யுனிடெக் நிறுவனம், தற்போதைய நிர்வாக குழுவின் செயல்பாடுகளின் குறுக்கீடுகள் இருந்தால் அது அனைத்து முதலீட்டாளர்களையும் பாதிக்கும். தங்களது இரண்டு நிர்வாக இயக்குநர்கள் நீதிமன்ற காவலில் உள்ள நிலையில், நிறுவனத்தின் நிதி நிலையிலும், பல்வேறு திட்டங்களையும் சிறப்பாக முடிக்கவும் கவனம் செலுத்துகிறோம் என்றனர். நிறுவனம் தற்போது ரூ.6,000 கோடி கடனில் உள்ளது. 70 திட்டங்களில் 16,000 வீடுகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்காமல் உள்ளது.

யுனிடெக் நிறுவனத்தின் இயக்குநர்கள் சஞ்சய் சந்த்ரா, அஜய் சந்த்ராவுக்கு ஜாமின் வழங்குவதற்கான மேல் முறையீட்டில், ரூ. 750 கோடியை டிசம்பர் இறுதிக்குள் டெபாசிட் செய்ய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறியிருந்தது. இவர்கள் இருவரையும் புதுடெல்லி பொருளாதார குற்றப் பிரிவினர் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x