Published : 18 Nov 2017 09:59 AM
Last Updated : 18 Nov 2017 09:59 AM

தொழில் ரகசியம்: “நீங்கள் இல்லாமலேயே உங்கள் தொழில் நடக்கவேண்டும்”

கா

ருக்கு டிரைவர் வைத்திருக்கிறீர்களா? அவருக்கு காரை ஓட்ட தெரிந்தால் மட்டும் போதும் என்று தேடினீர்களா அல்லது கார் பற்றி ஆழ்ந்த அறிவும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தீர்களா? காரில் ஏற்படும் சின்ன பிரச்சனைகளைக் கண்டுபிடிப்பது முதல் அதை சரி செய்வது வரை, டயர் பஞ்சரானால் மாற்றுவது முதல் காரை மெயிண்டெயின் செய்வது வரை சகலமும் தெரியவேண்டும் என்று பார்த்துத்தானே டிரைவரை அமர்த்தினீர்கள்.

அதே காரில் ஏறி ஆபீஸ் போன பிறகு இதை ஏன் மறக்கிறார்கள் தொழிலதிபர்கள்? பணம் போட்டு துவங்கிய கம்பெனி. வாழ்க்கையை வளமிடும் தொழில். வருங்காலத்தை நிர்ணயிக்கும் பிராண்ட். இதை பற்றிய ஆழ்ந்த அறிவு இருக்கவேண்டுமல்லவா? நிர்வாகம் பற்றி தெளிவாக புரிந்திருக்க வேண்டுமல்லவா? மார்க்கெட்டிங் முதல் மனித வள மேம்பாடு வரை தொழிலின் பிரதான அம்சங்கள் அனைத்தையும் அத்துபடியாக அறிந்திருக்க வேண்டுமல்லவா? சிறிய பிரச்சினை முதல் பெரிய பிரச்சினை வரை சமாளித்து சக்சஸாக்கும் சாகசம் பெற்றிருக்க வேண்டுமல்லவா?

காரை பற்றி முழுவதும் தெரிந்தவர்தான் டிரைவராக முடியுமென்றால் கம்பெனி பற்றி முழுவதும் தெரிந்தவர் தான் அதை முறையாக நிர்வகிக்கவேண்டும். முழுமையாக நிர்ணயிக்க முடியும். தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆக முடியாதென்றால் தொழில் துவங்கியவரெல்லாம் நிர்வாகியாக முடியாதே. கூடாதே!

ஓனர்ஷிப்பும் நிர்வாகமும் வேறு. அவை ஒன்றாக இருக்கவேண்டும் என்ற அவசியமல்ல. தொழிலை திறம்பட நிர்வகிக்க தேவை ஒரு ப்ரொஃபெஷனல். ஒரு மானேஜிங் டைரக்டர் (எம்.டி). ஓனரே நல்ல நிர்வாகியாகவும் அமைந்தால் நல்லது. ஆனால் அனைவருக்கும் அத்திறன் வாய்ப்பதில்லை. எனக்கு வாய்த்திருக்கிறதாக்கும் என்று நீங்களே முடிவு செய்து நானே ஓனர், நானே எம்டி என்று உங்களை நீங்களே ஏமாற்றாதீர்கள். மாப்பிள்ள நல்லவர், அவரே சொன்னார் என்பது போல் இருக்கும்!

அது என்னவோ தெரியவில்லை, தொழில் துவங்க பணமும், தைரியமும் இருந்தால் போதும் ஏதோ மேஜிக் போல் தாங்களும் எம்.டியாய் மாறிவிடலாம், தொழிலை திறம்பட தாங்களே நிர்வகித்துவிடலாம் என்று பலர் நினைக்கின்றனர். நிர்வாகம் என்பது ஏசி ஆபீசில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கட்டளைகள் இடுவதல்ல. தொழிலின் நெளிவுசுளிவுகள் தெரிந்திருக்கவேண்டும். பிசினஸ் சந்து பொந்துகள் புரிந்திருக்கவேண்டும். பிராண்ட் வளர்ப்பு சூட்சுமங்கள் அறிந்திருக்கவேண்டும்.

பல தொழிலதிபர்கள் அநியாயத்திற்கு நல்லவர்கள். கம்பெனியின் ஓனராய் லட்சணமாய் நிர்வாகத்தின் முழு பொறுப்பையும் ஏற்று, அத்தனை அம்சங்களையும் தலையில் சுமந்து எழும் எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பது தங்கள் கடமை என்று நினைக்கின்றனர். தொழில் அவர்களுடையது என்றாலும் தொழில் பற்றிய அனைத்து விஷயங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவு அவர்களுக்கு அமைந்திருக்கவேண்டும் என்று அவசியமில்லை. பொருளை திறம்பட வடிவமைக்கும் திறமையோ, தரமாய் தயாரிக்கும் திறனோ இருந்ததால் தொழிலை துவங்கினார்கள். இல்லை, கொடுப்பினை இருந்தது தந்தை ஆரம்பித்த தொழில் என்பதால் அவர் தயவில் தொழிலில் இறங்கினார்கள். அதற்காக தொழிலையும் அவர்களே நிர்வகிக்கவேண்டும் என்றில்லை. தொழிலை திறம்பட நிர்வகிக்கத் தெரிந்த ஒரு எம்.டியை அமர்த்துவதுதான் அவர்களுக்கும் அவர்கள் தொழிலுக்கும் நல்லது.

தொழிலின் ஓனராய் அவருக்கு தெரிந்த விஷயத்தை அவர் தொடர்ந்து கம்பெனியில் இருந்து செய்யட்டும். செய்யவேண்டும். நிர்வாகத்தை எம்.டி பார்த்துக்கொள்ளட்டும். சொந்த தொழிலில் ஒரு எம்.டி யை அமர்த்துவதால் குடி மூழ்கிவிடாது. இன்னும் சொல்லப் போனால் நிர்வாகம் தெரியாத ஓனரே நிர்வகிப்பதால்தான் பல தொழில்கள் நீர்த்துப் போய் நிர்கதியற்று நிர்மூலமாகின்றன. வராத நிர்வாகத் திறனை வற்புறுத்தி வரவழைத்து வக்கனையாய் வம்பில் விழுந்து வீணாய் போகிறார்கள்.

நிர்வாக ஸ்டீயரிங்

நிர்வாகம் என்பது லேசுபட்டதல்ல. அதற்கு அறிவு வேண்டும், அனுபவம் வேண்டும், ஆழ்ந்த திறமை வேண்டும். அனைவருக்கும் அது அப்படியே அமைவதில்லை. ‘இல்லை, நான் தான் ஓனர், எனக்கு தெரியுமாக்கும், நான் கற்றுக்கொண்டு விடுவேனாக்கும்’ என்பது கார் ஓட்ட தெரியாமல் கார் வாங்கி ஷோ ரூமிலிருந்து தானே ஓட்டிக்கொண்டு வீடு சென்று சேர முயற்சிப்பது போல. முடியுமென்றால் செய்துதான் பாருங்களேன்!

தொழில் எங்கு செல்லவேண்டும், எதை நோக்கி பயணிக்கவேண்டும் என்று அதன் உரிமையாளராய் கம்பெனி தொலைநோக்கு திட்டத்தை நிர்ணயுங்கள். அதை அடையும் பொறுப்பை தேர்ந்த விஷய ஞானியுடன் விடுங்கள். தொழிலை நேர்படுத்தி, நடத்தி இலக்கை அடைய தேவையானதை செய்யும் முழு சுதந்திரத்தை அவருக்கு அளியுங்கள். உங்கள் திறமை எதுவோ அதை மட்டும் செய்யுங்கள். உங்கள் தொழிலின் வருங்கால வளர்சிக்கு வழிகாணும் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

நல்ல எம்.டி ஒருவரை அமர்த்திய பின் அவர் வேலையில் குறுக்கிடாதீர்கள். அவருக்கு முழு சுதந்திரம் கொடுங்கள். உங்கள் இலக்கை அடையும் பாதையில் கம்பெனியை தெளிவாக செலுத்துகிறாரா என்று கண்காணியுங்கள். அது போதும். கம்பெனி என்கிற காரை அவர் ஓட்டும் போது பின் சீட்டில் அமர்ந்து கியர் மாத்து, ஹார்ன் அடி, ஓவர்டேக் பண்ணு என்று அவரை பாடாய் படுத்தாதீர்கள். பொறுத்துப் பார்த்து, வெறுத்துப் போய் இது தனக்கு பொருந்தாது என்று பொங்கி எழுந்து பாதி வழியில் காரை நிறுத்தி சாவியை தூக்கியெறிந்து விட்டு போய்விடுவார்.

அதிகாரம் செய்ய ஆசையா..

என் கம்பெனி, நானல்லவா அதிகாரம் செலுத்தவேண்டும் என்று அநியாயத்திற்கு ஆசைப்படாதீர்கள். உங்களுக்குத் தேவை கம்பெனி வளர்ச்சியா இல்லை அதிகார கிளர்ச்சியா என்பதை முடிவுசெய்யுங்கள். வேண்டுமென்றால் ஆபிசில் உங்களுக்கென்று ஒரு பெரிய ரூமாய் கட்டிக்கொண்டு கதவில் ரூபாய் நோட்டில் இருப்பது போல் பதினான்கு மொழிகளில் `ஓனர் அண்டு சிஇஓ’ என்று எழுதி உள்ளே கம்ப்யூட்டர் முன் காலாட்டிக்கொண்டு சாலிடேர் ஆடுங்கள். `மாப்பிள்ள அவரு தான் ஆனா அவரு போட்டிருக்கர சட்டை என்னுதில்ல’ என்று எல்லாரிடமும் கூறிக்கொள்ளுங்கள். எவன் வேண்டாம் என்றான்!

நிர்வாகம் என்பது சரியான பணியை மற்றவர் கொண்டு தெளிவாக முடிப்பது. வரும், வராத, தெரிந்த தெரியாத வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு கம்பெனியை இழுத்துக்கொண்டு கிடக்கும் நிலைக்கு தள்ளுவதல்ல. தொழில் எங்கு செல்லவேண்டும் என்று சொல்வது ஓனர். அங்கு எப்படி செல்லவேண்டும் என்று நிர்ணயிப்பவர் எம்டி. அங்கு செல்ல முடியாது என்று நினைத்து மலைப்பவர்களை முடியும் என்று அழைத்துச் செல்பவன் தலைவன். நீங்கள் தலைவனாக இருந்தால் சூப்பர். உங்களுக்கு இக்கட்டுரை தேவையில்லை. ஆனால் மற்றவர்கள் எம்.டியிடம் போவதா இல்லை empty ஆக போவதா என்று முடிவு செய்துகொள்வது உசிதம்.

போட்டி நெருக்கித் தள்ளும் இன்றைய பிசினஸ் யுகத்தில் தொழில் என்னும் தேரை இழுத்து வெற்றி என்னும் ஊர் போய் சேர பலர் உதவி தேவை. பலவித திறமைகள் தேவை. இன்றைய உலகில் விஷயம் தெரிந்த எம்.டி மட்டுமே பத்தமாட்டேன் என்கிறது. மார்க்கெட்டிங், நிதி, மனித வளம், ஆபரேஷன்ஸ் என்று துறை சார்ந்த பணிகளில் அவருக்கு உதவ ஏகப்பட்ட திறமையாளர்கள் தேவைப்படுகிறது. இந்த லட்சணத்தில் ஓனர் ஒருவரே தனக்கு அனைத்தும் செய்யத் தெரியும், அனைத்தையும் செய்ய முடியும் என்று கூறுவது கொஞ்சம் ஓவராய் தெரியவில்லை?

தொழிலுக்கு தேவை சரியான கட்டமைப்பு. தெளிவான சிஸ்டம்ஸ். நீங்கள் இல்லாமல் கூட உங்கள் தொழில் நடக்கவேண்டும். உங்களை தாண்டியும் அது தழைக்கவேண்டும். அதற்குத் தான் தேவை திறமையான தலைமை. அதை தேடிப் பிடித்து அமர்த்துவது தான் ஓனரின் பணி. கடமையும் கூட.

இத்தனை சொல்லியும் உங்களுக்கு இன்னமும் கூட சபலம் தட்டலாம். `நான் நல்ல நிர்வாகி தானே’ என்று நீங்களே நினைக்கலாம். அப்படி ஒரு நினைப்பு மிச்சம் மீதி இன்னமும் இருந்தால் உங்களையே ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள். `உங்கள் கம்பெனி என்பதால் ‘சேர்மன் அண்டு எம்டி’ என்று வாசலில் போர்டு தொங்க அமர்ந்திருக்கிறீர்களே. உங்களுடையது போல் இருக்கும் வேறு கம்பெனி ஒன்றில் இது போல் எம்டி வேலை கிடைக்குமா?’

பொய் சொல்லாமல் மனச்சாட்சிக்கு பயந்து பதில் கூறுங்கள். என்னிடமல்ல. உங்களிடமே!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x