Published : 21 Oct 2017 10:15 AM
Last Updated : 21 Oct 2017 10:15 AM

தொழில் ரகசியம்: `தொழிலை வழிநடத்திச் செல்லும் இன்ஜின் மார்க்கெட்டிங்’

சி

ல வாரங்களுக்கு முன் நான் உங்களை இரண்டு கேள்விகள் கேட்டதும் சிலருக்கு கோபம் வந்ததும் நினைவிருக்கும். `அக்கேள்விகள் என்றில்லை, நீ எதை எழுதினாலும் கோபம் வருகிறது’ என்று கூட நீங்கள் நினைக்கலாம். அதற்கெல்லாம் அஞ்சுபவன் நான் கிடையாது. நான் எங்கிருக்கிறேன் என்பதை யாருக்கும் எந்த காரணம் கொண்டும் கூற கூடாது என்று கட் அண்ட் ரைட்டாக `இந்து’ ஆசிரியரிடம் கூறி போதாக் குறைக்கு என் தலையிலடித்து சத்தியம் வாங்கியிருக்கிறேன். எனக்கென்ன பயம். மறைந்திருந்து என் எழுத்து பணியை அஞ்சாமல் தொடர்வேன். இதோ என் மூன்றாவது கேள்வி…

‘தலைவலி, காய்ச்சல் என்றால் யாரிடம் செல்கிறீர்கள், இன்ஜினியரிடமா அல்லது கார்ப்பரேஷன் கவுன்சிலரிடமா?’ ஏன் தலையில் அடித்துக்கொள்கிறீர்கள்? நான் அப்படி என்ன தப்பாய் கேட்டுவிட்டேன். தொழிலதிபர்கள் பலர் செய்வதைத் தானே கேட்டேன். `நான் எப்பொழுது இன்ஜினியரிடம், கொத்தனாரிடம் வைத்தியம் பார்தேன், ஏன் இப்படி அர்த்தமில்லாத கேள்வி கேட்டு என்னை பாடாய் படுத்துகிறாய்’ என்று நீங்கள் முனுமுனுப்பது கேட்கிறது.

ஜுரத்திற்கு டாக்டரிடம் செல்லாமல் மற்றவரிடம் செல்லக்கூடாதுதான். பிறகு ஏன் பலர் தங்கள் கம்பெனி மார்க்கெட்டிங் சம்பந்தப்பட்ட விஷயங்களை அவர்கள் ஆடிட்டர் அல்லது மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் என்று மார்க்கெட்டிங்கிற்கு சம்பந்தமே இல்லாதவர்களிடம் அறிவுரை கேட்டு அதன்படி செயல்படுகிறார்கள்? பெரும்பாலும் புடவை மற்றும் நகை கடைகள் இப்படி செய்வதை பரவலாய் பார்த்திருக்கிறேன். இது ஏன் என்று எனக்குப் புரிவதே இல்லை.

கம்பெனிகளுக்கு ஆடிட்டர் அவசியம். திறமையான ஆடிட்டிங் கம்பெனியை அமர்த்திக் கொள்ளவேண்டியதுதான். அதே போல் பல நூறு பேர் பணி புரியும் பெரிய கடைகளிலும் கம்பெனிகளிலும் மனித வள மேலாளர் அல்லது ஆலோசகர் அவசியம்தான். இன்னும் சொல்லப் போனால் ஊழியர்கள் ஊக்கத்துடன் பணி புரிய மோடிவேஷனல் பேச்சாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு அறிவும் அறிவுரையும் தருவதும் கூட வரவேற்க வேண்டிய முயற்சியே. இன்னமும் கூட துறை சார்ந்த விஷய ஞானிகளை அழைத்து வரலாம். வரவேண்டும். நிற்க.

வியாபாரம் என்ன பாவம் செய்தது?

இருக்கிறார் என்பதற்காக ஆடிட்டரிடம் மார்க்கெட்டிங் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கேட்பது சரியா? அமர்த்தியிருக்கிறோம் என்பதற்காக மனித வள துறை நிபுணரிடம் விற்பனை மேம்பாட்டு செயல்கள் பற்றிய அறிவுரை கேட்டு நடப்பது தகுமா? இதை கூறுவதால் ஆடிட்டர்களும், மனித வள நிபுணர்களும் என்னுடன் சண்டைக்கு வராதீர்கள். மார்க்கெட்டிங் நிபுணரிடம் நிதி மேட்டரை பற்றியும் மனித வள உத்தியமைக்கச் சொல்வது போல் தானே இதுவும்!

அருகில் இருக்கிறார் என்பதற்காக தொண்டை எரிச்சலுக்கு கண் டாக்டரிடம் செல்வீர்களா? எல்லாரும் டாக்டர்கள் தானே என்பதால் மகப்பேறு மருத்துவரிடம் முழங்கால் வலிக்கு மருந்து கேட்பீர்களா? யாருக்கு என்ன திறமை இருக்கிறதோ அதை மட்டும்தான் பெற முயலவேண்டும். அப்படித் தானே வாழ்க்கையில் மற்ற விஷயங்களுக்கும் பின்பற்றுகிறோம். வியாபாரம் மட்டும் என்ன பாவம் செய்தது?

இதைக் கேட்டால் பலர் கூறும் பதில், ‘கம்பெனி பற்றி அதிகம் தெரிந்தவர் என்பதால் அவரிடமே எல்லா பொறுப்பையும் தருகிறோம்’. இல்லை, தெரியாமல்தான் கேட்கிறேன். உங்கள் டிரைவர் உங்களுடன் பல ஆண்டு காலம் பணி புரிகிறார் என்று வைத்துக்கொள்வோம். உங்களை பற்றி அதிகம் புரிந்தவராகவும் இருக்கிறார் என்றும் வைத்துக்கொள்வோம். உங்களிடம் ஊழியம் புரிகிறார் என்பதற்காக அவரையே சமைக்கவும் சொல்வீர்களா? ஒரு வேளை அவர் நன்றாக சமைப்பவராக அமைத்தால் சந்தோஷமே. ஆனால் எல்லாருக்கும் அப்படி அமையுமா? ஒரு வேளை அவர் சமையல் பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவராக இருந்து தொலைத்து தோசைக்கு நல்லெண்ணெய்க்குப் பதில் இன்ஜின் ஆயிலை ஊற்ற மாட்டார் என்று என்ன நிச்சயம்!

மற்ற துறைகளை விட மார்க்கெட்டிங் துறை சார்ந்த பணிகளில் தான் இதை அதிகம் பார்க்கிறேன். ஏன்? ஆஃப்டர் ஆல் மார்க்கெட்டிங் தானே, எனக்குத் தெரியாதா என்று பலர் இளக்காரமாய் நினைப்பது தான் இதற்குக் காரணம். விளம்பரம் உருவாக்குவது எனக்கு விளையாட்டு மேட்டர் என்று என்று பலர் அசால்டாய் அணுகுவதால் தான் இந்த விபரீதம்.

நிர்வாக உலக தந்தை ‘பீட்டர் ட்ரக்கரின்’ கூற்றுகளை இப்பகுதியில் நான் பல முறை குறிப்பிட்டிருப்பது நல்ல உள்ளங்களுக்கு நினைவிருக்கும். தொழில் பிழைக்கவும், தழைக்கவும் இவர் கூறிய நல்ல விஷயங்களை பலர் படித்து மறக்கிறார்கள். பலர் படிக்கவே மறுக்கிறார்கள். ஒரு தொழிலின் பிரதான நோக்கம் வாடிக்கையாளரை உருவாக்குவதே என்கிறார் ட்ரக்கர். அதனால் ஒரு கம்பெனியின் முக்கிய வணிக செயல்பாடுகள் இரண்டு மட்டுமே தான் இருக்கமுடியும். அவை மார்க்கெட்டிங் மற்றும் புதிய சிந்தனைகள் என்கிறார். இந்த இரண்டு மட்டுமே கம்பெனிக்கு வருவாய் ஈட்டி தருபவை. மற்ற செயல்பாடுகள் அனைத்தும் செலவுகளே என்கிறார்.

இது இப்படி இருக்க பல கம்பெனி நிர்வாகங்களிடம் பேசினால் தங்கள் கம்பெனியில் எந்த துறைக்கு அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள் என்பது கண்கூடாகவே தெரிகிறது. நிதித் துறையை பிரதானமாகக் கூறுவார்கள். அதன் பின் தயாரிப்பு. பிறகு விற்பனைத் துறை என்று ஒரு சிறிய பட்டியலை படிப்பார்கள். இதில் ட்ரக்கர் சொன்ன மார்க்கெட்டிங் வருவதே இல்லை. வடிவேலு ஒரு படத்தில் கூறுவது போல் ‘டேய், இவன் இந்த லிஸ்டிலேயே இல்லையேடா’!

மாற்றாந்தாய் மனப்பாண்மை வேண்டாம்

போட்டி நெருக்கும் இன்றைய பிசினஸ் யுகத்தில் சிக்கித் தவித்து வளர்ச்சிக்கு வழி தெரியாமல் பெரிய கம்பெனிகள் கூட பெரிய சைஸ் பிரச்சனையில் தவிப்பதைப் பார்க்கும் போது தொழிலதிபர்கள் மார்க்கெட்டிங்கிற்கு அதற்குரிய மரியாதை தந்தால்தான் அவர்களுக்கு விமோசனம். அவர்கள் தொழிலுக்கு புண்ணியம். இதை எவ்வளவு சீக்கிரம் அவர்கள் புரிந்துகொள்கிறார்களோ அவ்வளவு நல்லது.

இனியாவது உடம்பு சரியில்லை என்றால் இன்ஜினியரிடம், கவுன்சிலரிடமும் சென்று வைத்தியம் பார்த்துக்கொள்ளாதீர்கள். தொழிலை வழிநடத்திச் செல்லும் இன்ஜின் தான் மார்க்கெட்டிங். அதை மாற்றான் தாய் மகளாக மாற்றாதீர்கள். மக்கர் செய்யும் கம்பெனிகளுக்கு வழிகாட்டியிருக்கும் ட்ரக்கர் கூற்றை மறக்காதீர்கள்.

ஒரு சைஸ் சட்டை அனைவருக்கும் சரியாக இருக்காது. ஒருவரிடமே அனைத்து துறை சம்பந்தப்பட்ட விஷயங்களை ஒதுக்கினால் சௌகரியம், பணம் மிச்சம் என்று நினைப்பது தப்பாட்டம். கிரிக்கெட் அணியின் கோச்சை ஃபுட்பால் டீமுக்கும் கோச்சாய் இருக்க சொன்னால் பணம் மிச்சமாகும். பேஷாக செய்யலாம். என்ன, ஜெயிக்க முடியாது. பரவாயில்லையா?

ஒவ்வொரு துறைக்கும் வெவ்வேறு தன்மைகள், விதவிதமான பிரச்சனைகள் உண்டு. ஒவ்வொரு துறைக்கும் தேவை அத்துறைக்கேற்ற அணுகுமுறை. அதன் தன்மைகளுக்கும், சவால்களுக்குமான வித்தியாசமான தீர்வுகள். அதற்குத் தான் தேவை துறை சார்ந்த நிபுணர்கள். இன்று விளம்பர ஏஜென்சிகளே எந்த மீடியாவில் விளம்பரம் செய்வது என்பதை அறுதியிடும் மீடியா பிளானை தங்கள் திறமைக்கு அப்பாற்றப்பட்ட விஷயம் என்று கருதி அதற்கென்றே பிரத்யேகமாக செயல்படும் மீடியா கம்பெனிகளிடம் அப்பணியை அளிக்கின்றன. அவர்கள் சொன்னபடி விளம்பரம் செய்கின்றன. வளர்ந்து வரும் டிஜிடல் மீடியா சமாச்சாரங்களான ஃபேஸ்புக் போன்ற விஷயங்கள் அனுபவம் வாய்ந்த பழைய மார்க்கெட்டர்களுக்கே புரியமாட்டேன் என்கிறது. இந்த லட்சணத்தில் அந்த துறைக்கு சம்பந்தமே இல்லாதவர்களிடம் அப்பொறுப்புக்களை கொடுப்பது பொறுப்பான செயலா? புரிந்துகொள்ளுங்கள்.

ஒவ்வொரு துறை சார்ந்த விஷய ஞானிகளை தேடிப் பிடியுங்கள். யாருக்கு எதில் திறமையோ அவருக்கு அத்துறையின் பொறுப்பை கொடுங்கள். பலர் செய்வது போல் காய்ச்சலுக்கு கவுன்சிலரிடம் செல்லாதீர்கள். பிறகு மூட்டு வலிக்கு முதலமைச்சரிடம் தான் செல்லவேண்டியிருக்கும்!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x