Published : 14 Oct 2017 10:41 AM
Last Updated : 14 Oct 2017 10:41 AM

தொழில் ரகசியம்: லாபத்தை விட, நஷ்டத்தை யோசிக்கும் மனித மனம்

பொ

ருளாதார சித்தாந்தத்தில் பிரதானமானது மனித சுபாவமும், நடத்தையும். மனிதன் எதையும் அறிவுசார்ந்து சிந்தித்து செயல்படும் ரேஷனல் பேர்வழி என்றே பொருளாதார சித்தாந்தம் நம்பி வந்தது. தங்கள் பயன்பாட்டிற்கு தேவையானதை அறிவார்ந்த கோணத்தில் சிந்தித்தே மனித முடிவுகள் அமையும் என்று பொருளாதார அறிஞர்கள் ஆணித்தரமாக நம்பினர். இந்த எண்ணமும் நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக எழுபதுகளிலிருந்து மாறத் துவங்கியது.

மனித நடத்தையும் அதைச் சுற்றிய பொருளாதார சித்தாந்தம் என்ற சிலபஸில் எந்த மாற்றமுமில்லை. ஆனால் முன்பு நினைத்தது போல் மனிதன் அப்படி ஒன்றும் ரேஷனல் அல்ல, அறிவாற்றல் சார்புநிலையால் (Cognitive bias) அலைக்கழிக்கப்படும் மனித மனம் அறிவு சார்ந்து மட்டுமே பொருளாதார முடிவெடுப்பதில்லை என்பதை ஆய்வுகள் மூலம் உணர்த்தினார்கள் சில பொருளாதார அறிஞர்கள். உளவியல் கோட்பாடுகளை உள்ளடக்கிய இந்த புதிய பொருளாதார சிந்தனைதான் பிஹேவியரல் எகனாமிக்ஸ் என்ற பெயரெடுத்து வளர்ந்திருக்கிறது!

சிந்திக்கத் தெரிந்தாலும் மனித முடிவுகள் மன பிரமைகளாலும் அவனுக்கே உரித்தான சார்பு நிலைகளாலும் பாதிக்கப்பட்டு பொருளாதாரம் குறித்த முடிவுகளில் கூட தவறு செய்கிறான் என்றனர் பிஹேவியரல் பொருளாதார நிபுணர்கள். ஒரு பொருளை பத்து ரூபாய்க்கு வாங்க தயாராய் இருக்கும் மனிதன் அதையே தான் வைந்திருக்கும் போது பதினைந்து ரூபாய்க்கு விற்க மறுக்கிறான். மழைக் காலத்தில் குடைக்கு பத்து ரூபாய் அதிகம் விலை தர மறுத்து மழையில் நனைந்தபடி வீட்டிற்கு சென்று ஜுரம் வந்து டாக்டருக்கு ஆயிரக்கணக்கில் தண்டம் அழுகிறான். இந்த லட்சணத்தில் எதை வைத்து உங்களையும் என்னையும் ரேஷனலாக முடிவெடுப்பவர்கள் என்றழைக்க முடியும்!

இன்று பொருளாதாரத்தின் ஹாட் டாபிக் பிஹேவியரல் எகனாமிக்ஸ். பொருளாதார உலகை புரட்டிப் போட்டு பழைய கோட்பாடுகளை பீஸ் பீஸாக்கி மனித முடிவுகளை இன்னமும் தெளிவாக புரிந்துகொள்ள இந்த இயல் பயன்படுகிறது. பாமரன் நடத்தை முதல், முதலீட்டாளர் நடத்தை , வாடிக்கையாளர் நடத்தை, ஊழியர் நடத்தை வரை உள்ள உண்மைகளை உணர உதவியிருக்கிறது. அப்படி உணர்த்திய பிஹேவியரல் பொருளாதார வல்லுனர்களில் ஒருவர் ‘ரிச்சர்ட் தேலர்’. யார் இவர், இப்பகுதியில் அவரைப் பற்றி பேசும் அளவிற்கு அவருக்கு என்ன வந்தது?

வந்திருக்கிறது. இந்த வருடத்திற்கான நோபல் பரிசு. பொருளாதார சித்தாந்தத்தை, மனித நடத்தையை உள்ளது உள்ளபடி யதார்த்தமாக புரிந்துகொள்ளும் வகையில் செய்ததற்கும் தன் ஆராய்ச்சிகளில் பெற்ற நுண்ணறிவு மூலம் உலகெங்கும் அரசாங்க பொதுக் கொள்கையை மேம்படுத்த உதவியதற்கும் தான் இந்த நோபல் பரிசு. 1968-லிருந்து தான் பொருளாதாரத்திற்கு நோபல் பரிசு தரப்படுகிறது. தேலர் அதை பெறும் எண்பதாவது நபர். நாற்பத்தி ஒன்பது வருடங்களில் எழுபத்தி ஒன்பது பேருக்கு எப்படி, கணக்கு இடிக்கிறதே என்று நினைப்பவர்களுக்கு, நோபல் விருது பல நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கும் தரப்பட்டது. இம்முறை யாரோடும் பகிராமல் தனியாய் வாங்கியிருக்கிறார் தேலர்.

தேர்வு செய்து தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை மறுத்து கட்டாயப்படுத்தாமல் மக்களை அவர்களுக்கு எது நல்லதோ அதை அவர்களே தேர்ந்தெடுக்கும் வகையில் தூண்ட முடியும் என்பதை பல முறை விளக்கியிருக்கிறார். பொதுவாகவே மக்கள் தங்கள் ஓய்வு காலத்திற்கென்று பெரியதாக எதையும் சேமிப்பதில்லை. சேமியுங்கள் என்று அவர்களை கட்டாயப்படுத்தவும் வேண்டாம், தயவு செய்து சேருங்கள் என்று கெஞ்சவும் வேண்டாம் என்றார் தேலர். ஓய்வு ஊதிய திட்டத்தை துவங்கி அதில் ஆட்டோமேடிக்காக அவர்களை சேருங்கள். யாருக்கு விருப்பமில்லையோ அவர்கள் எழுதித் தந்து சேமிப்பு திட்டத்திலிருந்து விலகிக்கொள்ளும் வாய்ப்பை தாருங்கள் என்றார். முடிவெடுக்க முடியாத போது மனிதன் எது இருக்கிறதோ அது அப்படியே இருந்து தொலைக்கட்டும் என்று சோம்பேறித்தனமாய் விடுபவன் என்று தேலர் ஏற்கெனவே கண்டுபிடித்திருந்தார். உலகின் பல அரசாங்கங்கள் இம்முறையை பயன்படுத்தி ஊழியர்களை ஓய்வு ஊதிய திட்டங்களில் சேர்த்து கட்டாயப்படுத்தாமல் அவர்களை சேமிக்க வைத்து அவர்களின் ஓய்வு காலம் நிம்மதியாக இருக்க வழி செய்திருக்கின்றன. சர்வம் தேலர் உபயம்!

மனித மனதின் இன்னொரு சுபாவம் விசித்திரமானது. வரப்போகும் லாபத்தை விட அடையப் போகும் நஷ்டம் தான் அவனுக்கு பெரியதாகத் தெரியும். இதற்கு லாஸ் அவர்ஷன் என்று பெயர். பத்து ரூபாய் கிடைக்கும் மகிழ்ச்சியை விட பத்து ரூபாய் நஷ்டம் அடையும் வலியைத் தான் அவன் பெரியதாக உணர்வான் என்றார் தேலர். இதை யார் உணர்கிறார்களோ இல்லையோ திரு நரேந்திர மோடி உணர்ந்தால் நல்லது. ‘சுத்தமான இந்தியா’ திட்டத்தில் சுத்தமாய் இருப்பதால் ஏற்படும் நல்லதை மக்களிடம் கூறுவதை விட அசுத்தத்தால் ஏற்படும் நஷ்டத்தை விளக்கினால் மக்கள் ஆர்வமுடன் இந்த இயக்கத்தில் பங்குபெறுவார்கள். நாமும் மூத்திர சந்துகள் இல்லாத ஒரு இந்தியாவை பார்த்துவிட்டு நிம்மதியாக கண்ணை மூட முடியும்!

தேலர் அறிவுரையை கேட்டு பயனடைந்த நாடுகளில் ஒன்று இங்கிலாந்து. அந்நாட்டு அரசாங்கம் மக்களுக்கு ‘அய்யா தர்ம பிரபு ப்ளீஸ் வரி கட்டுங்கள் என்று கெஞ்சிப் பார்த்தது. ஒழுங்கு மரியாதையாய் கட்டுகிறாயா, கட்டி வைத்து உதைக்கட்டுமா’ என்று மிரட்டியும் பார்த்தது. ஒரு எழவும் ஆகவில்லை. தேலரை உதவிக்கு கூப்பிட்டது. தானாய் செய்யாவிட்டாலும் மற்றவர்கள் செய்தால் அதைப் பார்த்து அது போல் தானும் செய்யவே மனித மனம் விரும்பும் என்று இங்கிலாந்து அரசாங்கத்திற்கு கூறி அவர்கள் அடுத்த முறை மக்களுக்கு கடிதம் எழுதும் போது `உங்கள் நண்பர்கள், அண்டைவீட்டுக்காரர்கள் கட்டிவிட்டார்கள். நீங்களும் கட்டுங்களேன்’ என்ற தொனியில் கடிதம் எழுத வைத்தார் தேலர். பலர் மனமுவந்து வரி கட்ட கோடிக்கணக்கான புதிய பணம் கஜானாவில் சேர்ந்தது!

நல்ல பொருளாதார சிந்தனைக்கு முதல் படி மக்கள் ஆஃப்டர் ஆல் மனிதர்கள் என்பதை புரிந்துகொள்வதே என்பார் தேலர். செய்யும் தவறுகளை குறைத்துக்கொள்ளும் வழியை மனிதர்களுக்கு கற்றுத் தர முயல்கிறேன் என்பார். மனிதனுக்கு ஆயிரம் வேலை இருந்தாலும் அவன் உள்ளபடி சோம்பேறி, மறதிக்காரன், அவனுக்கு ஈசியாக முடிவெடுக்கும்படி பொருளாதார கோட்பாடுகள் சிந்தனைகள் இருக்கவேண்டும் என்பார்.

இன்று அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை, உலக வங்கி முதல் ஐக்கிய நாடுகள் சபை வரை பல அமைப்புகள் தேலரின் அறிவுரையை ஏற்று பொருளாதார திட்டங்கள், பொது கொள்கைகளை தீட்டி வெற்றி பெற்று வருகின்றன. நாம் இன்னமும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா கூடாதா என்று பேசிக்கொண்டிருக்கிறோம்!

பொருளாதார நிபுணர் என்பதால் தேலர் கோலி சோடா புட்டியும் கலைந்த தலையுடன் புத்தகங்களுக்கு மத்தியில் அமர்ந்து புரியாத கோட்பாடுகளை திவச மந்திரம் போல் சொல்பவராக இருப்பார் என்று நினைக்காதீர்கள். தேலர் ஒரு மகா ஜாலி பேர்வழி. இவர் எழுத்துகளில் கிண்டலும் நகைச்சுவையும் கொட்டிக் கிடக்கும். ஹாலிவுட் படம் ஒன்றில் கூட நடித்திருக்கிறார் இந்த குறும்புக்கார மனிதர். ’The Big Short’ என்ற படத்தில் ஒரு சீனில் தோன்றி நாட்டில் நிதி நெருக்கடி எப்படி ஏற்படுகிறது என்பதை பிஹேவியரல் எகனாமிக்ஸ் கோட்பாடு மூலம் விளக்குவார். நோபல் பரிசு கிடைத்த விஷயத்தை இவரிடம் சொன்ன போது ‘ம்ஹூம், என் நடிப்புக்கு ஆஸ்கார் விருது எதிர்பார்த்தேன், நோபல் தான் கிடைத்திருக்கிறது’ என்று கிண்டலத்தார்!

இவரோடு சீனில் தோன்றிய நடிகை செலீனா கோமெஸ் என்பவரின் ரசிகைகள் தேலரின் பேத்திகள். பேத்திகளிடம் நோபல் பரிசு வாங்கியதை கூறிவிட்டீர்களா என்று கேட்ட போது ‘கூறி என்ன ஆக போகிறது. என்ன இருந்தாலும் தன் தாத்தா செலீனாவுடன் நடித்ததை தான் பெருமையாக கருதுவார்கள் என்றார்!

மனிதன் எப்பொழுதும் அறிவுசார்ந்து ரேஷனலாக முடிவெடுக்காமல் இர்ரெஷனலாக நடக்கிறான் என்பதை ஆய்வுகள் மூலம் விளக்கியவரிடம் நோபல் பரிசுடன் வரும் சுமார் ஒரு மில்லியன் டாலர் பணத்தை எப்படி செலவழிக்கப் போகிறீர்கள் என்று கேட்ட போது ‘எல்லாம் இர்ரேஷனலாக தான்’ என்று சிரித்தார் தேலர்!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x