Published : 03 Jul 2017 10:22 AM
Last Updated : 03 Jul 2017 10:22 AM

18 ஆயிரம் மணி நேர உழைப்பே ஜிஎஸ்டி

நாட்டின் மிகப் பெரிய வரிச் சீர்த் திருத்தமான ஜிஎஸ்டி கடந்த ஜுன் மாதம் 30-ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. நாடாளுமன்றத் தில் மைய மண்டபத்தில் ஜிஎஸ்டி அறிமுக விழா நடைபெற்றது. ஆனால் பல அதிகாரிகளின் தூக்கமற்ற உழைப்பினால்தான் ஜிஎஸ்டி அமலாகியுள்ளது.

சுதந்திரத்துக்குப் பின் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய வரிச் சீர்திருத்தம் ஜிஎஸ்டி. 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி சட்டத்திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 175 முறை அதிகாரிகள் சந்திப்பு, 18 முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றுள்ளது. கிட்டத்தட்ட 18,000 மணி நேரம் உழைத்ததன் விளைவாகத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

30 துணை குழுக்கள்

2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. காலம் குறைவாக இருந்த காரணத் தால் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர். மேலும் அதிகரிகாரிகள் 30 துணை குழுக்க ளாக பிரிக்கப்பட்டு வேலைகளைப் பிரித்து பணியாற்றியுள்ளனர். மேலும் 1,200 பொருட்களுக்கு வரி விகிதம் நிர்ணயம் செய்வது மற்றும் ஜிஎஸ்டிக்கான சட்டங்களை கமிட்டிகள் மூலம் செயல்படுத்தியுள்ளனர். வரி விகிதத்துக்கான இறுதி முடிவை நிதியமைச்சர் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்துள்ளது. கடந்த ஒன்பது மாதங்களாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மாதத்துக்கு இருமுறையும், கமிட்டிகள் மூன்று அல்லது நான்கு முறையும் கூடியும் முடிவெடுத்துள்ளனர்.

வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா, சிபிஇசி தலைவர் வனஜா சர்னா, ஜிஎஸ்டி கமிஷனர் உபேந்திர குப்தா, வருவாய் துறை ஆலோசகர் பிகே மொஹந்தி, இணை செயலாளர் அலோக் சுக்லா, சிபிஇசி தலைமை கமிஷனர் பிகே ஜெயின், சிபிஇசி மனிஷ் சின்ஹா ஆகிய அதிகாரிகள் ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் முக்கிய பங்காற்றியுள்ளனர். இவர்களுடன் பல மத்திய அரசு ஊழியர்களும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

மாநில அரசு அதிகாரிகளில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வணிக வரி ஆணையர் ரித்விக் பாண்டே, குஜராத் வணிக வரி ஆணையர் பிடி வகிலா, மஹாராஷ்டிரா வணிக வரி ஆணையர் ராஜி ஜெலோட்டா, பீகாரைச் சேர்ந்த கூடுதல் செயலர் அருண் மிஷ்ரா ஆகியோர் ஜிஎஸ்டிக்கு பல்வேறு முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

மத்திய வருவாய்த்துறை இணைச் செயலாளர் உதய் குமவாத் ஜிஎஸ்டி சட்டத்திருத்த மசோதாவையும் மாநிலங் களுக்கான இழப்பீடு சட்டத்தையும் வடிவமைத்துள்ளார். ஜிஎஸ்டியை மத்தியிலும் மாநிலங்களிலும் அமல்படுத்துவதற்கு இதுவரை 55,000 அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x