Last Updated : 22 Jul, 2016 10:48 AM

 

Published : 22 Jul 2016 10:48 AM
Last Updated : 22 Jul 2016 10:48 AM

வணிக நூலகம்: வானமே எல்லை

ஜிம் காலின்ஸ் (JIM COLLINS) என்ற நூலாசிரியர் உச்சம் தொடுவது எப்படி என்று தன்னுடைய முதல் நூலில் கூறியிருந்தார். ஒழுக்கமான நபர்கள், எண்ணம், நடத்தை மற்றும் தொலைநோக்கு பயன்பாடு ஆகியவைகளை காரணிகளாக எடுத்து கூறியிருந்தார். உச்சம் தொட்ட நிறுவனங்கள் அதே அலைவரிசையில் பயணம் செய்யாத காரணத்தால் எவ்வாறு பாதாளத்தில் விழுகின்றன என்றும், வேறு சில நிறுவனங்கள் விழுவதற்கு மறுத்து தொடர்ந்து முன்னேறுவதையும் அடுத்த புத்தகமான பெரு நிறுவனங்கள் எவ்வாறு வீழ்ச்சி அடைக்கின்றன என்ற புத்தகத்தில் விளக்கமாகக் கூறியுள்ளார்.

நிறுவன தலைவர்கள் வழிமுறைகளை பின்பற்றினால் வீழ்ச்சியின் வேகத்தை குறைக்கவோ, வீழ்ச்சியை தவிர்க்கவோ முடியும். ஐந்து நிலைகளில் அவைகளை எடுத்து கூறுகிறார்.

* வெற்றியால் அடையும் உச்சகட்ட பெருமிதம்.

* ஒழுங்கு இல்லாத, ஆதிக்கத்தை தேடும் வளர்ச்சி முறைகள்.

*முயற்சியை தவிர்த்து ஆபத்தை விலைக்கு வாங்குதல்.

*முதல் வெற்றியை முன்னிலைப்படுத்தி வீழ்ச்சிக்கு வழிதேடுதல்.

* முக்கியத்துவத்தை இழந்து புதை குழியில் விழுதல்.

வெற்றியால் அடையும் உச்ச கட்ட பெருமிதம்.

முதலில் அடையும் வெற்றி முற்றாக துணைநிற்கும் என்ற சத்தில்லாத எண்ணத்தினால் வீழ்ச்சிக்கு வழிதேடுகின்றார்கள். அது போல் முதலில் வெற்றி அடைந்தவர்கள் திமிர் பிடித்தவர்களாகவும், வெற்றியை பட்டயம் போட்டு பெற்றுக்கொண்டதாகவும் எண்ணும் பொழுது வீழ்ச்சிக்கான கதவு திறக்கப்படுகிறது. வெற்றி பெறும் பொழுது என்ன என்ன நிகழ்வுகள் என்ன என்ன காரணிகள் உண்மையான வெற்றியை கொடுத்தன என்பதை மறந்து, தொடர்பில்லாத காரணிகளை இணைத்து வெற்றி விடையை தவறாக கூட்டுகிறார்கள்.

பெருவாரியான வெற்றிகளில் முயற்சி, அதிர்ஷ்டம் மற்றும் இடம் பொருள் ஏவல் ஆகியன வெற்றி கோட்டுக்கு தள்ளிவிடுகின்றன. கடின உழைப்பு மட்டுமே வெற்றியை பெற்று தந்தது என்பது சில நேரங்களில் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாக இருக்கும். தானே முயன்று வென்றதாக நினைப்பவர்கள், மற்றவர்களையும், சந்தர்ப்பத்தையும், சூழ்நிலைகளையும் கணக்கில் கொள்ளாமல் வெற்றி பெருமிதத்தில் துள்ளி திரியும் பொழுது வீழ்ச்சி குட்டையில் தலைகீழாக விழுகின்றார்கள்.

பேராசை - பேரிழப்பு

நிறுவனங்கள் ஒழுங்கான புதுமைகாணும் முயற்சிகளை புறம் தள்ளிவிட்டு ஒழுக்கத்திற்கு மாறான செயல்களை வேகமாகவும், சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணத்தோடும், குறுகிய காலகட்டத்தினுள் மித மிஞ்சிய வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்தினாலும் விழுந்து விடுகின்றார்கள். நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் பொழுது முக்கியமான இடங்களில் முக்கியமான பணியாளர்கள் இல்லாதது ஒரு பெரும் குறையாகும். சரியான இடத்தில் தவறான நபர்கள் கட்டுப்பாடு இல்லாமலும், அடக்கம் இல்லாமலும் பணிகளை மேற்கொள்ளும் பொழுது முடிவுகளை வீசி எறிவதன் மூலமும் தோல்வி தவிர்க்க முடியாமல் போகின்றது.

மோசமான முடிவுகளும் பேராபத்தும்

நிறுவன தலைவர்கள் மோசமான மற்றும் எதிர்மறை தரவுகளை நேர்மறை தரவுகளை போல, குழப்பமான விளக்கங்களை கூறுவது ஆபத்தை வலிந்து விலைக்கு வாங்குவதற்கு சமமாகும். தங்கள் பொறுப்புகளை உணர்ந்து கொள்ளாமல், வெளிப்புற காரணிகளை தேக்க நிலைக்கு காரணம் காட்டி தங்களை நுண்ணறிவு மிக்க மேலாளராக வெளிகாட்டிக் கொள்ளும் பொழுது வீழ்ச்சி நேரடியாக வந்து சேர்கிறது.

தேவையில்லாத, தேவைக்கு அதிகமான முயற்சிகளையும் செயல்களையும், பின் விளைவுகளை பற்றி அறியாமல் அதீத முயற்சியின் பேரால் அளவு கடந்து வரிந்து இழுத்துக் கொண்டு செய்யும் செயல்கள் ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு நிகரானது ஆகும். அவ்வாறு செய்யும் பொழுது சந்தையில் உள்ள முதலீட்டாளர்கள் நிறுவன வீழ்ச்சிக்கு நிறுவன தலைவர் எந்த எந்த வழிகளில் தன் பங்களிப்பை பெரிதும் அளித்தார் என்பது பற்றி விவாத மேடை அமைக்க தயாராகிறார்கள். மோசமான முடிவுகளும், பெரிய ஆபத்துகளை வரிந்து விலை கொடுத்து வாங்குவதும், நிறுவனங்களை எவ்வளவு வேகமாக வீழ்த்திக் கொண்டிருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகிவிடும்.

ஆளைப்பார்த்து மயங்காதே

மிகப் பெரிய வெற்றி அடைந்தபின் அதை நிலைநிறுத்திக் கொள்வதற்காக இந்த உலகை காக்க வந்த இரட்சகர்களாக தங்களை எண்ணிக் கொண்டு தங்களை ஈர்ப்பு மிக்க தொலைநோக்கு தலைவர்களாக முன்னிறுத்தி கொள்கிறார்கள். மிகவும் தைரியமான ஆனால், பரிட்சித்துபார்க்காத உத்திகளை முன்னிறுத்துகிறார்கள். அதிதீவிரமான மாற்றங்களை முனைந்து ஏற்படுத்துகிறார்கள்.

நாடக பாணியிலான கலாச்சார புரட்சிகளை அள்ளி தெளித்து, மிகப் பெரிய மிகவும் சாதகமான நம்பிக்கை ஏற்படுத்த கூடிய வகையிலான பொருட்களை உற்பத்தி செய்ய முனைப்பு காட்டுவார்கள். நிறுவனங்களை கையகப்படுத்த மாற்று அல்லது வேற்று வழி உத்திகளை புகுத்துதல் என்று ஒன்றாகவோ, ஒன்றுக்கு மேற்பட்டதாகவோ சில செயல்களை மேற்கொள்ளும் பொழுது அந்த செயல்கள் வெற்றியை எட்டாக் கனியாக்கி வீழ்ச்சியை விரும்பி தழுவச் செய்கின்றன. எனவே முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது தகுந்ததாகவும், தரம் உள்ளதாகவும், நேர்மறையானதாகவும் உள்ளவைகளை முயன்று தேடுதல் வேண்டும். ஆபத்தை விலைக் கொடுத்து வாங்கி தளர்ச்சியையும், வீழ்ச்சியையும் ஈவுகளாக பெறக்கூடாது.

முக்கியத்துவத்தை மறந்து புதை குழியில் விழுதல்

வளர்ந்து கொண்டே செல்லும் தேக்க நிலைகளும், விலை உயர்ந்த வீழ்ச்சிகளும் நிறுவனங்களின் பொருளாதார வலிமையை காயப்படுத்தும். தனிமனித நிறுவன தலைவர்கள் நம்பிக்கை இழந்து ஒளிமயமான எதிர்காலத்தை தவிர்த்து இருளில் யானையைத் தேட ஆரம்பிப்பார்கள். சில நிறுவனங்களில் நிறுவன தலைவர்கள் பணியில் இருந்து வெளியேறுவார்கள். வேறு சில நிறுவனங்களில் நிறுவனத்தையே விற்று விடுவார்கள். மற்ற சமயங்களில் நிறுவனம் முக்கியத்துவத்தை இழந்து பங்குதாரர்களின் வெறுப்பையும் வாடிக்கையாளர்களின் புறக்கணிப்பையும் வலிந்து தேடி வீழ்ச்சி புதைக்குழியில் வேகமாக விழுவதற்கு வாய்ப்பு தேடி காத்திருக்கும்.

சில நேரங்களில் ஆரம்பகால வெற்றி ஆடிக் காற்றில் காகிதம் பறப்பதை போல வானம் வரை தள்ளும். ஆனால், அந்த காற்று நிலையில்லாததால் காகிதம் விரைவில் குப்பைத் தொட்டியில் கிடக்கும். அதேபோல் நிறுவனங்கள் எதிர்பாராத வாய்ப்புகள் வீசும் பொழுது எங்கு இருக்கின்றோம் என தெரியாமல் உயர பறக்கின்றன. காற்று நிரந்தரம் அல்ல என்றும், மேலே செல்வது கீழே இறங்குவதற்கு தான் என்று நினைத்துக் கூடப் பார்க்காமல் மேலே மேலே செல்ல உத்திகளை தீட்டுபவர்கள் கீழே வெகு வேகமாக சென்று சேர்வார்கள்.

முன்னாளில் எதிர்த்தவர்கள் இந்நாளில் வளர்ச்சிக்கு தேவையானால் கூட்டணி வைத்து கொள்வதில் தவறில்லை. ஆனால், அவர்களுடைய மனப்பாங்கிற்கும் மதிப்பீடுகளுக்கும் வளைந்து கொடுப்பது தவறானது. நிலையாக நின்று நேர்மறையான செயல்களில் தொடர்ந்து செல்லும் நிறுவனம் மையக் கருத்தை அடைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளும் பொழுது அந்த நிறுவனம் வெற்றியை நோக்கி செல்லுமே தவிர வீழ்ச்சியை நோக்கி அல்லவே அல்ல. நிலையான வெற்றியை தேட முயலும் நிறுவன தலைவர்களும், தொழில் முனைவோரும் இந்த புத்தகத்தை ஒருமுறை படித்து பார்க்கலாமே.

rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x