Last Updated : 30 Dec, 2016 11:04 AM

 

Published : 30 Dec 2016 11:04 AM
Last Updated : 30 Dec 2016 11:04 AM

வணிக நூலகம்- தலைமை: தெரிந்ததும் அறியாததும்

தலைமை பண்புகள் மிகவும் மென்மையான அதே சமயம் அழுத்தமான பதிவுகளைக் கொண்டது. தலைமை பண்புகளை யாரும் யாருக்கும் ஊட்டி விடுவது இல்லை மாறாக, வளர்வதற்கும் வளர்த்துக் கொள்வதற்கும் உதவலாம். வேடம் அணிந்து தலைமை பொறுப்புகளை யாரும் நிர்வகிக்க முடியாது. விவேகமும் செயல்முறைகளும் பழகும் திறனும் பெரும் பங்களிப்பை தருகின்றன. அகக் காரணிகள் திறன் பெற்று ஆழமாக பதிந்து தொடர்புகளை தூண்டிவிடும் பொழுது மட்டுமே தலைமையைப் பற்றி தெரியும். தலைமை வெற்றிக்கு வழிகாட்டும். வெளிக் காரணிகள் ஒருபோதும் தலைமை பண்புகளை வளர்க்க உதவி செய்யாது.

வெளிக்காரணிகள் புல்லின் மீது பனி விலகுவது போல சூழ்நிலைகளின் தாக்கம், இறுக்கம் ஆகியவைகளின் தன்மைகளைப் பொறுத்து சில நேரங்களில் எளிதில் விலகிவிடும். அகக்காரணிகள் உதவி இல்லாமல் புற காரணிகள் மட்டுமே தலைமை பண்புகளின் வெற்றிக்கு வழிக்காட்டாது. அது போன்ற நேரங்களில் தலைமை தள்ளாடும். அக காரணிகள் மட்டுமே பொறுப்பை தளராமல் தாங்கிக்கொடுக்கும். ஜேம்ஸ் கோஸெஸ் (JAMES KOUZES) மற்றும் பாரி போஸ்னெர் (BARRY POSNER) என்ற நூலாசிரியர்கள் இணைந்து தலைமை பண்புகளின் உள்ளார்ந்த கருத்துகளை வெளிக்கொணர்ந்து இருக்கிறார்கள்.

கடினமான தரவுகளை எளிமையான முறையில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். சாதாரண செய்திகளாக சொல்லாமல் அறிவுசார் செயலின் கருத்துருவாக வெளிக்கொணர்ந்து இருக்கிறார்கள். முடிவுகளை முகத்தில் அடித்தாற் போல் கூறியுள்ளனர். தலைவர்களின் ஆதார அடிப்படையே அவர்களால் வித்தியாசத்தையும் மாற்றத்தையும் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை தாங்கி கொண்டு இருப்பதுதான்.

தலைமைக்கு நம்பகத்தன்மையே அடித்தளம். தலைவர்களின் வாழ்வியல் மதிப்பீடுகள் தன்னுடைய குழுவில் உள்ளவர்களை ஈர்த்து ஈடுபாட்டை ஈவுகளாக தருகின்றன. தலைவர்கள் தொலைநோக்கு பார்வை உள்ளவர்கள் நீண்டகால அடிப்படையில் இலக்குகளை நிர்ணயித்து வெற்றியை முன்னமே உணர்பவர்கள். நம்பகத்தன்மை தனிமனிதர்களையும் குழு மனிதர்களையும் ஒன்றோடு ஒன்று ஒட்டுவிக்கிறது. பெருமையும் பெருந்தன்மையும் சவால்களின் வெளிப்பாடு. மாற்றங்கள் சவால்களை தூண்டும், சவால்கள் தலைமைகளை சோதிக்கும்.

முன்மாதிரியாக இருந்து மற்றவர்களை வழிநடத்தத்தான் முடியுமே தவிர வெறுமனே வார்த்தை ஜாலங்களாகவும், வசீகர உடல் மொழிகளாலும் குழு உறுப்பினர்களை வழி நடத்த முடியாது. அசலுக்கும் போலிக்குமான எட்டு வித்தியாசங்களை உடன் பணிபுரிபவர்கள் எளிதில் இனம் கண்டுக்கொள்வார்கள். படிப்பினை தலைமையை வளர்க்கும். தலைமை சிறந்த படிப்பினை தரும். தலைமை பொறுப்பு என்பது இதயம் சார்ந்தது உணர்வு பூர்வமானது. விருப்பம் இல்லாத வேலைகளை செய்யும் பொழுது வருத்தமில்லாத வெற்றி வந்து சேராது. பெரு வெற்றி பெறுவதற்கு, விரும்பி கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். மேலே கூறிய தாரக மந்திரம் தலை சிறந்த தலைவர்களையும் தலைமை பண்புகளின் காரணிகளையும் தரம் பிரிந்து விரிவாக எடுத்துக் கூறுக்கின்றது. தலைமை பண்புகளின் அனைத்து மொழி நடை உணர்வு, வெளிப்பாடு, ஈடுபாடு ஆகியவை வெகு சுருக்கமாக மேலே குறிப்பிடப்பட்டுள்ளன.

தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்புகள் :

மிகவும் கொண்டாடப்படும் தலைவர்களின் மிக சிறந்த குணாதிசயங்களாக நேர்மையை வளர்த்தல் (85%), எதிர்பார்ப்புகளை வளர்த்தல் (75%), உத்வேகம் அளித்தல் (69%), தகுதிகளையும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ளுதல் (64%) ஆகியன பற்றி மிக விரிவாக அலசப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் தலைமைப் பண்புகள் குறித்து ஒரு வரியில் கூறுவது என்றால் ‘நம்பகத்தன்மையே தலைமை’ அல்லது ‘தலைமைக்கு’ தேவை நம்பகத்தன்மையே என்று முடிவாக கூறலாம். 16% அளவிலேயே முதிர்ச்சி முக்கியமானதாக கருதப்படுகின்றது. இதற்கு உதாரணமாக 10 வயதிற்கு குறைவானவர்களையும் தலைவர்களாக சுட்டிக்காட்டும் பொழுது தலைமை பண்பு பற்றி கேள்வியே எழுகின்றது. மிக முக்கியமான கருத்துகளாக காண வேண்டியவை கீழ் வருமாறு :

* சிறப்புகளையும் உயர்வுகளையும் குறுக்கு வழியிலும் தத்கால் முறையிலும் பெற முடியாது.

* தலைவர்களாக ஆக்கப்படு வதில்லை மாறாக தலைமை பண்புகளோடு மக்களை வழி நடத்த எடுத்துவைக்கும் முதல் அடியே தலைமைக்கு அடிதளம் ஆகின்றது.

* எதை சாதிக்க முடியும் என்று மக்களுக்கு நிறுவி காட்டுவதுதான் தலைமையின் வெளிப்பாடு.

* எல்லாம் நன்மைக்கே என்ற கொள்கை உள்ளவர்கள் ஆறாம் அறிவின் தாக்கத்தால் புதியன காண்பார்கள். எதார்த்தவாதிகள் அவற்றை காணவும் உணரவும் முடியாது.

* குழு உறுப்பினர்களின் தேவை களையும் எழுச்சிகளையும் சரியான முறையில் ஒருங்கிணைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுபவர்கள் சிறந்த தலைவர்களாக மின்னியது வரலாற்று உண்மை.

* தலைமை என்பது அரசியல் பின்புலங்களுக்கு வேறாகவும் மேலதிகாரி என்பவருக்கு வேறாகவும் உள்ளது வியப்பின் வெளிப்பாடு. வெகுவாரியான நபர்கள் தெரியாதவருக்கு கொடுக்கும் மரியாதையையும், மதிப்பையும் மேலதிகாரிகளுக்கு கொடுப்பதே இல்லை இந்த ஆய்வு முடிவு வியப்பை தருகிறது.

* செய்திகளில் வெற்றிடம் ஏற்படும் பொழுது மற்றவர்கள் தங்களுடையை சொந்த செய்திகளை அவற்றுள் திணிக்கிறார்கள். இவை எதிர்மறையானதாகவும் வடிக்கட்டிய பொய்யாகவும் உண்மைக்கு எதிர்மறையானதாகவும் இருக்கிறது.

* நிச்சயமான முழுமையான தகவல்களை திரட்டுவதற்கு முயலும் பொழுது நம்பகத்தன்மை கூடுகிறது. தாமதம் நம்பகத்தன்மையை காவு வாங்குகிறது.

* தொடர்ந்த வளர்ச்சிகள் இல்லாத இடத்தில் தலைமை பண்புகளை வளர்க்கும் கலாச்சாரம் எடுபடுவதில்லை.

குணாதிசயம் ஒரு பிரச்சனையை எதிர் நோக்கும் பொழுது அதை மற்றவர்களின் பொறுப்பாக தவிர்த்து தயங்குவது தலைமையும் இல்லை, தலைமைக்கு அழகும் அல்ல,

* அடுத்தவர்கள் ஏன் இந்த பிரச் சினைக்கு தீர்வு காண தயங்கு கிறார்கள் என்று யோசிப்பதைக் காட்டிலும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டு நான் ஒருவன் இருக் கிறேன் தீர்த்து வைக்கிறேன் என்ற மனப்பாங்கு தலைமையை தழைக்கச் செய்யும்.

* குகையில் வசிப்பவர்கள் எல்லோரும் புவியியல் வல்லுநர்களாக இருக்க முடியாது அது போன்ற நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கும் அனைவரும் மேலதிகாரிகளாக தான் இருக்க முடியுமே தவிர தலைவர்களாக உருவெடுக்கவே முடியாது. அவ்வாறு வெகு சில மேலதிகாரிகள் தலைவர்களாக உருவெடுத்தற்கு மேலே கூறிய ஒவ்வொரு காரணியும் வெகுவாரியாக பங்களித்து இருக்கும்.

* நேர்மறை எதிர்மறை உணர்வுகளை தரம் பிரித்து உணரும் பொழுது நேர்மறையாக மூன்றும் எதிர்மறையாக ஒன்றும் இருக்கும் பட்சத்தில் ஆரோக்கியமான சூழல் இருக்கும். தலைவர்கள் நான்கில் மூன்று உணர்வுகளை நேர்மறையாக மாற்றுகிறார்கள். மேலதிகாரிகள் நான்கில் மூன்றை எதிர்மறையாக்குகிறார்கள்.

* நீங்கள் தலைவராக வேண்டுமா? மேலதிகாரியாகவே இருக்க வேண்டுமா? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் மட்டுமே தலைமையை தேடி அலைகிறார்கள் என்று எண்ண வேண்டாம். ஒவ்வொரு குழுவிலும், ஒவ்வொரு கூட்டத்திலும், ஒவ்வொரு நிகழ்விலும் தலைவர்கள் தேடப்படுகிறார்கள். நேர்மறை உணர்வு உள்ளவர்கள் தலைவர் ஆகிறார்கள். எதிர்மறை உணர்வு உள்ளவர்கள் மேலதிகாரியாகவும் குற்றம் கண்டுபிடிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். நீங்கள் குறைகளை களைய வேண்டுமா அல்லது குறைகளை காண வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

தொடர்புக்கு: rvenkatapathy@rediffmail.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x