Last Updated : 07 Dec, 2016 07:05 PM

 

Published : 07 Dec 2016 07:05 PM
Last Updated : 07 Dec 2016 07:05 PM

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் அறிவிப்பு

பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு, ரிசர்வ் வங்கி தன்னுடைய நிதிக்கொள்கையை அறிவித்தது. டெபாசிட்கள் வரத்தொடங்கியதை அடுத்து வட்டி விகிதம் குறைக்கப்படும் என்னும் எதிர்பார்ப்பு இருந்த சூழ்நிலையில் வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. தற்போதைய நிலையில் ரெபோ விகிதம் 6.25 சதவீதமாக இருக்கும்.

புதிதாக அமைக்கப்பட்ட நிதிக்கொள்கை குழு கடந்த செவ்வாய்கிழமை கூடியது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் கூடி வட்டி விகிதம் குறித்த முடிவினை எடுத்தது. புதிதாக உருவாக்கப்பட்ட இந்த குழு கூடும் இரண்டாவது கூட்டம் இது. நிதிக்கொள்கை குழுவில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் வட்டி விகிதம் தற்போதைய நிலையிலே தொடர வேண்டும் என வாக்களித்தனர்.

மொத்த மதிப்பு கூட்டல் (ஜிவிஏ) வளர்ச்சியும் 7.6 சதவீததில் இருந்து 7.1 சதவீதமாக குறையும் என ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது. பண மதிப்பு நீக்கம் காரணமாக மொத்த மதிப்பு கூட்டல் குறையும் என ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது. குறுகிய காலத்தில் இரண்டு வகையான பாதிப்புகள் ஏற்பட கூடும். ரீடெய்ல், உணவகம், போக்குவரத்து உள்ளிட்ட பணம் புழக்கம் இடங்கள், முறைப்படுத்தப்படாத இடங்களில் பாதிப்பு இருக்கும். தவிர இதன் காரணமாக இவற்றின் தேவையும் குறையும் என கூறியிருக்கிறது. மேலும் கச்சா எண்ணெய் விலை மற்றும் நிதிச்சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கம் காரணமாக நான்காம் காலாண்டு பணவீக்கம் இலக்கை அடையமுடியாமல் போகலாம். அதன் காரணமாகவே வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.

ரிவர்ஸ் ரெபோ விகிதம் மற்றும் ரொக்க கையிறுப்பு விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. வரும் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நிதிக்கொள்கை குழுவின் அடுத்த கூட்டம் நடக்க இருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு அதிர்ச்சி அளிப்பதாக வங்கித்துறை வல்லுநர்கள் பலர் தெரிவித்திருக்கின்றனர்.

ரூ.3.81 லட்சம் கோடி

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு சிறிய மதிப்பு ரூபாய் நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஆர்.காந்தி தெரிவித்தார். நவம்பர் 10 முதல் டிசம்பர் 5 வரையிலான கால கட்டத்தில் 3.81 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் சந்தையில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. 850 கோடி 100 ரூபாய் நோட்டுகள், 180 கோடி 50 ரூபாய் நோட்டுகள், 310 கோடி 20 ரூபாய் நோட்டுகள் 570 கோடி 10 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x