Last Updated : 23 May, 2015 10:24 AM

 

Published : 23 May 2015 10:24 AM
Last Updated : 23 May 2015 10:24 AM

வங்கிகளின் வாராக்கடன் நெருக்கடியை அளிக்கிறது: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி







பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 5.2 சதவீத அளவுக்கு இருக்கிறது. இது மத்திய அரசுக்கு நெருக்கடியை அளிக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருக்கிறார்.

தற்போது வாராக்கடன் ஒரு குறியீடுதான். பொருளாதாரம் மீண்டு வரும் போது சில குறியீடுகளில் பிரச்சினை இருக்கும். தற்போதைய நிலைமையை வைத்து முடிவுக்கு வர முடியாது. இதே நிலைமை இன்னும் சில காலாண்டுகளுக்கு தொடரும் போது வாராக்கடன் பிரச்சினை என்ற முடிவுக்கு நாம் வரலாம் என்றார். மோடி அரசு ஒரு வருடம் முடிந்ததை அடுத்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது.

மார்ச் காலாண்டில் நல்லதொரு தொடக்கமாக வாராக் கடன் குறைய ஆரம்பித்திருக்கிறது. முதல் முறையாக வங்கிகளின் வாராக்கடன் குறைய ஆரம்பித் திருக்கிறது. டிசம்பர் காலாண்டில் வாராக் கடன் 5.6 சதவீதமாக இருந்தது. மார்ச் காலாண்டில் இது 5.2 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது அதிகம்தான். ஒரு காலாண்டில் வாராக்கடன் விகிதம் குறைந்திருப்பதை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது. ஆனால் பொருளாதாரம் மீண்டு வரும் போது, வங்கித்துறையிலும் இது எதிரொலிக்கும். வாராக்கடன் குறையும். வங்கிகளில் காலியாக இருக் கும் உயர் பதவிகளுக்கு தகுதி யான நபர்கள் அடுத்த மாதம் நியமிக்கப்படுவர்.

அதேபோல வங்கி இயக்குநர்களை வங்கி குழு (bureau) நியமிக்கும் என்றார்.

மீண்டும் வட்டி குறைப்பு!

வட்டி குறைப்பு பற்றி செய்தி யாளர்கள் கேட்டதற்கு, என்னுடைய கருத்து உங்களுக்கு ஏற்கெனவே தெரியும். பணவீக்கம் குறைந்து வருகிற நிலையில், வட்டி குறைப்பு செய்வதற்கு இதுசரியான நேரம் என்றார்.

இரட்டை இலக்க வளர்ச்சி

இந்திய பொருளாதாரம் இப்போது 7.5 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வளர்ந்து வருகிறது. ஆனால் இந்தியா இரட்டை இலக்க வளர்ச்சியை அடைவதற்கான சாத்தியம் இருக்கிறது. முந்தைய அரசின் தெளிவற்ற பொருளாதார கொள்கைகள் காரணமாக வளர்ச்சி சரிந்தது. ஆனால் தற்போதைய அரசு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு சாதகமாகவே இயங்கி வருகிறது.

எளிமையான வரி

வரிகள் எளிமையாக இருக்க வேண்டும் என்பதுதான் அரசு மற்றும் என்னுடைய நிலைப்பாடும் கூட. எளிமையான வரிகள் இருக்கும் போதுதான் வளர்ச்சி சாத்தியம். 2016 ஏப்ரல் 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இது வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தம்.

அடுத்த கூட்டத்தொடரின் முதல் நாள் அன்று மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும். அதிகமாக வரி விதிப்பது என்பது முதலீட்டாளர்களுக்கு மட்டு மல்லாமல் பொருளாதாரத்துக்கும் சாதகமானது அல்ல. அந்நிய நிறுவன முதலீட்டாளர்களுக்கு குறைந்தபட்ச மாற்று வரி கிடையாது என்பதை பட்ஜெட் உரையில் ஏற்கெனவே அறிவித்தேன். அதற்கு முந்தைய வழக்குகளை நீதிமன்றங்கள் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் ஜேட்லி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x