Last Updated : 23 Mar, 2017 10:36 AM

 

Published : 23 Mar 2017 10:36 AM
Last Updated : 23 Mar 2017 10:36 AM

மனித வள மேம்பாட்டு குறியீடு தரவரிசையில் 131-வது இடத்தில் இந்தியா

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள 2016-ம் ஆண்டுக்கான மனித வள மேம்பாட்டு குறியீடு தரவரிசையில் இந்தியா 131-வது இடத்தில் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டும் இந்தியா 131-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரிவான ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்ட அமைப்பு (யுஎன்டிபி) வருடந்தோறும் மனித வள மேம்பாட்டு குறியீட்டு தரவரிசையை வெளியிட்டு வருகிறது. 2016-ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியல் 2015-ம் ஆண்டு தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. 188 நாடுகள் அடங்கிய இந்தப் பட்டியலில் நார்வே நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும் சுவிட்சர்லாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தியா 131-வது இடத்தை பிடித்துள்ளது. 2015-ம் ஆண்டு அந்நிய நேரடி முதலீடுகள் சாதகமாக இருந்த போதிலும் இந்தியாவின் மனித வள மேம்பாட்டு குறியீட்டு தரவரிசையில் பெரிதாக முன்னேற்றம் ஏற்படவில்லை.

இருப்பினும் 2014-15-ம் ஆண்டு தகவலின்படி இந்தியாவில் 63 சதவீதம் பேர் தற்போதைய வாழ்க்கை முறை திருப்திகரமாக இருப்பதாக நினைக்கின்றனர் என்று மனித வள மேம்பாட்டு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்ட அமைப்பு இந்த தரவரிசை பட்டியலில் இந்தியாவை நடுத்தர மனித வள மேம்பாட்டு நாடுகள் பிரிவில் வைத்துள்ளது. பாகிஸ்தான், பூட்டான், வங்க தேசம், கென்யா, மியான்மர், நேபாளம் போன்ற நாடுகளும் இந்தப் பிரிவில் உள்ளன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில் இந்தியாவின் மனித வள மேம்பாட்டு குறியீட்டு எண் 0.624-ஆக அதிகரித்துள்ளது. 2010-ம் ஆண்டு இந்தியாவின் மனித வள மேம்பாட்டு குறியீட்டு எண் 0.580-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போதைய அறிக்கையின் படி இந்தியர்களின் வாழ்வு காலம் 68.3 வருடமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் நிகர தேசிய வருமானத்தில் தனிநபர் வருமானம் 5,663 டாலராக உள்ளது.

69 சதவீதம் பேர் இந்தியாவில் பாதுகாப்பாக வாழ்வதாக கூறியதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் 72 சதவீத பெண்களும் 78 சதவீத ஆண்களும் பாதுகாப்பாக வாழ்வதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமான வாழ்க்கை திருப்தி குறியீட்டுக்கு இந்தியாவுக்கு 10 மதிப்பெண்ணுக்கு 4.3 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. அரசாங்கத்தை குறிப்பிடுகையில் 69 சதவீதம் பேர் இந்தியாவில் மத்திய அரசை நம்புவதாக தெரிவித்துள்ளனர். 74 சதவீதம் பேர் இந்திய நீதிமன்ற அமைப்பை நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் வேலைவாய்ப்பை உருவாக்குவதாக பெரும்பாலானோர் பாராட்டு தெரிவித்துள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ``மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் ஏழை மக்களை குறிவைத்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் தொடங்கப் பட்டிருக்கிறது. இதன் மூலம் அவர் களுக்கும் வருமானம் கிடைப்பதால் ஏழ்மையை குறைக்க முடியும். மேலும் திடீர் எதிர்பாராத நிகழ்வுகளில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும். இந்தியாவில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டமும் வங்க தேசத்தில் பொதுச் சொத்துகள் திட்டமும் கிராமப்புறத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள்’’ என்று மனித வள மேம்பாட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியாவின் முதலீடு அதிகரித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடு செய்து வருகிறது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்த முதலீடு தொடரும் பட்சத்தில் நிகர வேலைவாய்ப்பு 1 கோடியாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

1990-ம் ஆண்டிலிருந்து சர்வதேச அளவில் மனிதவள மேம்பாடு கணிசமாக அதிகரித்து வருகிறது. ஆனால் வளர்ச்சி சரிசமமாக இருக்கவில்லை. முக்கியமாக பெண்கள், பழங்குடி மக்களில் மனித வள குறியீடு மேம்பாடு அடையவில்லை. தற்போது நிறைய மக்களுக்கு எளிதாக கல்வி, மருத்துவம், சுகாதார வசதிகள் கிடைக்கிறது. ஆனால் சில குறிப்பிட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை. அதற்கான காரணங்களையும் கிடைப்பதற்கு வழி களையும் ஆராய வேண்டும். முக்கியமாக பெண்களுக்கு பொருளாதார, அரசியல், சமூக, கலாசார தடைகளை படிப்படியாக களைய வேண்டும். ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் குறைந்த ஊதியமே கிடைக்கிறது. மேலும் வேலைவாய்ப்புகளும் குறைந்த எண்ணிக்கையிலேயே பெண்களுக்கு கிடைக்கிறது என்று மனித வள மேம்பாட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை, தகவல்கள் எளிதாக கிடைப்பது, வாழ்வதற்குரிய வசதிகள் எளிதாக கிடைப்பது ஆகிய மூன்று அடிப்படையான மதிப்பீடுகளை வைத்து மனித வள மேம்பாட்டு குறியீடு கணக்கிடப்படுகிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x