தொழில் ரகசியம்: ‘வெட்டிப் பேச்சுகளை வெட்டி வையுங்கள்’

Published : 11 Mar 2017 09:44 IST
Updated : 16 Jun 2017 13:45 IST

9/11 என்றால் அமெரிக்க உலக வர்த்தக மைய டவர்களில் விமானங் கள் மோதி உலகை புரட்டிப் போட்ட 2001 வருட தீவிரவாத செயல் நினைவிற்கு வரும். ஆனால் நாம் பேசப் போவது அதே தேதியில் 1974ல் நடந்த விமான விபத்து பற்றி. அன்று காலை சார்ல்ஸ்டன் நகரிலிருந்து ஷார்லட் என்ற ஊருக்கு பறந்துகொண் டிருந்தது `ஈஸ்டர்ன் ஏர் விமானம் 212’. ஷார்லட்டில் அன்று நல்ல பனி. இறங்கிக்கொண்டிருந்த விமானம் திடீரென்று ரன்வேக்கு சற்று முன்பு விழுந்து விபத்துக்குள்ளாக விமானத்தி லிருந்த 72 பேர் உயிர் இழந்தனர்.

விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்த தேசிய போக்குவரத்து பாது காப்பு வாரியம் (National Transportation Safety Board - NTSB) தன் அறிக்கையை 1975-ம் ஆண்டு சமர்பித்தது. விபத்துக்கு காரணம் வானிலிருந்த பனி அல்ல, பைலட்டுகள் நாக்கிலிருந்த சனி!

பைலட்டுகள் வெட்டி பேச்சு பேசிக் கொண்டு லேண்ட் செய்ய முயன்றதால் விபத்து என்பது ஆய்வில் தெரிந்தது. கவனத்துடன் செய்யவேண்டிய பணியை அரசியல் கதைகளை அலசிய வாறு அலட்சியமாக செய்திருக் கிறார்கள். இதில் செகண்ட் ஹாண்ட் கார் வாங்குவது பற்றி பேச்சு வேறு.

விமானிகள் உரையாடலைப் பதிவு செய்யும் கருவி (Cockpit Voice Recorder) விமானங்களில் பொறுத்தப்படத் துவங்கிய பிறகு விபத்துக்குள்ளான விமானங்களை ஆய்வு செய்த NTSB, விபத்துகளுக்கு வெட்டிப் பேச்சுதான் வில்லனாக இருப்பதை சுட்டிக்காட்டியது. விமானம் செலுத்தும் போது முக்கிய தருணங்களான டேக் ஆஃப், லேண்டிங் செய்யும் போது தேவையற்ற, கவனத்தை சிதறடிக்கக்கூடிய பேச்சுகளைத் தவிர்க்க விமான சேவையை மேற்பார்வையிடும் பெடரல் விமான நிர்வாக அமைப்பு (Federal Aviation Adminstration -FAA) 1981ல் `ஸ்டெரையில் காக்பிட்’ (Sterile Cockpit) என்ற கோட்பாட்டை அறிமுகப் படுத்தியது.

ஸ்டெரைல் என்பதற்கு கிருமிகள் இல்லாத, மாசு நீக்கப்பட்டது என்று பொருள். காக்பிட் என்பது பைலட்கள் அமரும் இடம். இரண்டையும் சேருங் கள், கோட்பாடு புரியும். விமானத்தை செலுத்தும் போது முக்கிய தருணங்களில் காக்பிட்டில் விமானத்தை செலுத்தத் தேவையான அத்தியாவசிய பேச்சைத் தவிர வேறேதும் பேசக்கூடாது என்ற கோட்பாடு. பொதுவாக 10,000 அடி உயரத்திற்கு கீழே விமானம் பறக்கும் தருணங்கள் முக்கியமானவை. ஒன்று விமானம் உயரே எழும்புகிறது (டேக் ஆஃப்) இல்லை தரை இறங்குகிறது (லாண்டிங்) என்று அர்த்தம். அந்தத் தருணங்களில் கண்டிப்பாய் வெட்டிப் பேச்சு கூடாது என்பதே கோட்பாடு. `ஜல்லிக்கட்டு தப்பா ரைட்டா’ என்பது பற்றி பைலட்டுகள் 10,500 அடியில் பேசலாம். 9,500 அடியில் பேசக்கூடாது. பேசினால் இறங்கியவுடன் பைலட்டுகள் `ஸ்டாண்ட் அப் ஆன் தி பென்ச்’ தான். அதாவது விபத்துக்குள்ளாகாமல் இறங்கினால்!

தொழில்நுட்பம் வளராதிருந்த விமான சேவையின் துவக்க காலத்தில் வெட்டிப் பேச்சு பிரச்சனை இல்லை. அக்கால அருதல் பழசு தொழில்நுட்பத்தில் விமானத்தைக் கவனத்துடன் செலுத்துவது என்பதே பை பாஸ் சர்ஜரி செய்வது போல. கண்கொத்தி பாம்பாய் கவனித்து, பரிட்சை எழுதுவது போல் பதைபதைத்து, பூஜை செய்வது போல் மனதை ஒருமுகப்படுத்தி தான் விமானத்தை ஓட்டவேண்டும். இது போதாதென்று விமான சத்தம், காற்றின் ஊளையிடும் ஓசை மத்தியில் பைலட் பேசுவது அவர் காதில் விழுந்தாலே பெரிய விஷயம். இதில் பக்கத்து பைலட் காதில் எப்படி விழப் போகிறது. அச்சூழ்நிலையில் எங்கு பேசுவது, எதை பேசுவது. அதனால் கவன சிதறல் இல்லாமல் விமானத்தை ஓட்ட முடிந்தது.

இது ஜெட் யுகம். அதி நவீன தொழில் நுட்ப ஜாலம். படம் பார்த்துக்கொண்டே பதவிசாக பிளேன் ஓட்டலாம். சௌகரிய மான ஏசி, அடிக்கொரு தரம் அசை போட ஸ்னேக்ஸ், பத்திரிகை என்று கிட்டத்தட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டது போல் காக்பிட்டுகள் இருப்பதால் பைலட்டுகளை கேட்க வேண்டுமா. வெட்டிப் பேச்சில் கட்டிப் போடப்படுகிறார்கள். அதனால் அவசியமாகிறது ஸ்டெரையில் காக்பிட்.

வியாபாரம் செய்வதும் விமானம் செலுத்துவது போல. இங்கும் வெட்டிப் பேச்சுகள் வில்லங்கமாகி வியாபார விபத்துகளை விளைவிக்கின்றன. வெட்டிப் பேச்சுக்கள் மட்டுமல்ல, கவன சிதறல் ஏற்படுத்தும் எதுவும் வில்லன்களே. வியாபாரத்திலும் கவனச் சிதறலுக்கு செல்ஃபோன், வாட்ஸ் ஆப், ஈமெயில் என்று ஏகப்பட்ட ஐடங்கள் வந்துவிட்டன. கவனச் சிதறல் இல்லாமல் ஊழியர் உற்பத்தித் திறனை பெருக்கும் வழியை தெரிந்துகொள்ள ‘கார்னல் பல்கலைக்கழக’த்தின் ‘லெஸ்லி பெர்லோ’ 1997ல் ஐடி கம்பெனி ஒன்றில் ஆய்வு செய்தார்.

புதிய சாஃப்ட்வேர் தயாரிக்க மூன்று வருடம் தேவைப்பட்ட இக்கம்பெனி அதை ஒன்பது மாதங்களாக குறைக்க முடிவு செய்தது. பலரின் ஒருமித்த உழைப்பும், காலக்கெடுவும் பதற்ற சூழலும் நிறைந்தது ஐடி துறை. அதிலும் கோடிங் பிரிவைச் சேர்ந்தவர்கள் கவனச் சிதறல் இல்லாமல் பணி புரிவது அவசியம். வேலை நேரத்தில் சந்தேகம் கேட்கும் சக ஊழியர்கள், வேலை நிலையை நொடிக்கொரு தரம் விசாரிக்கும் மேலாளர்கள், நச்சரிக்கும் ஃபோன் கால், ஈமெயில் என்று கவனச் சிதறல் ஏற்பட்டு வேலை கெட்டு வந்தது.

இதற்கு முடிவு கட்டி குறிக்கோளை அடைய கம்பெனி ஸ்டெரையில் காக்பிட் கோட்பாட்டை கோடிங் துறையில் அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு செவ்வாய், வியாழன், வெள்ளிக்கிழமை காலை முதல் மதியம் வரை `நோ மூச்சு நோ பேச்சு நேரங்கள்’ என்று சட்டமியற்றியது. அந்நேரங்களில் கோடிங் துறையினரிடம் யாரும் எக்காரணம் கொண்டும் எதுவும் பேசக்கூடாது. ஃபோன் செய்யக்கூடாது, ஈமெயில் அனுப்பக்கூடாது. இதனால் அந்நேரங்களில் கவனச் சிதறல் இல்லாமல் கோடிங் துறை ஊழியர்கள் பணி புரிய முடிந்தால் ஒன்பதே மாதங்களில் புதிய சாஃப்ட்வேரை அறிமுகப்படுத்த முடிந்தது!

கம்பெனிகளில் உற்பத்தியை அதிகரிக்க நிர்வாகத் திறன் மட்டும் போதாது. கவனச் சிதறல் தவிர்க்கப்பட வேண்டும். நான் அஷ்டாவதானி யாக்கும், ஒரே நேரத்தில் எட்டு வேலை செய்வேன் என்று பீற்றிக்கொள்ளா தீர்கள். தூங்கிக்கொண்டே கார் ஓட்டி காமியுங்களேன்!

எட்டு வேலையை ஒரே நேரத்தில் செய்வதால் வேலை திறன் குறைவதை நீங்கள் அறிவதில்லை. அதே போல் உங்கள் அலுவலகத்திலும் முக்கிய துறைகளில், முக்கிய தருணங்களில் ஸ்டெரையில் காக்பிட் உருவாக்குங்கள்.

வேலை நேரத்தில் பெரிய இம்சை சம்பந்தமே இல்லாத, தேவையற்ற ‘cc’ ஈமெயில்கள். இருவருக்கிடையே நடக்கும் சம்பாஷனையில் பணிக்கு சம்பந்தமில்லாதவர்களுக்கு காப்பி அனுப்புவதால் நேரம் செலவாகி கவனச் சிதறல் ஏற்படுகிறது. முக்கியமில்லாத cc மெயில்களை சீசீ என்று ஒதுக்குங்கள். இப்படி ஒதுக்கப்படும் மெயில்களால் வாரத்திற்கு இரண்டு மணி நேரம் மிச்சமாகிறது என்கிறது ஒரு அமெரிக்க ஆய்வு!

மீட்டிங் ரூம் என்றால் சொகுசு டேபிள், சேர்களில் சௌகரியமாக அமர்ந்து காலாட்டி பேசும் போது சின்ன மீட்டிங் கூட வெட்டிப் பேச்சு, வீண் டாபிக்ஸ் என்று வளர்கிறது. இதை தவிர்க்க சிறிய மீட்டிங் என்றால் சேர் டேபிள் இல்லாமல் நின்றுகொண்டு பேசும் சிறிய ரூம்கள் இருந்தால் சின்ன மீட்டிங்குகள் சின்னதாக இருக்கும். கவனச் சிதறல் தவிர்க்கப்பட்டு நேரம் மிச்சப்படும்.

முக்கிய விஷயம் பேசும்போது கதவை மூடி ‘தொந்தரவு செய்யா தீர்கள்’ என்று போர்டு மாட்டுங்கள். இல்லையென்றால் செக்கில் கையெழுத்து, லீவ் லெட்டர் சாங்ஷன் என்று ஆளாளுக்கு வந்து அரை மணி நேர மீட்டிங் அரை நாள் இழுக்கும். எடுக்கும் முடிவுகளும் கவனச் சிதறலால் இழுவையில் முடியும்!

கவனச் சிதறலை கவனத்தில் வையுங்கள். வெட்டிப் பேச்சுகளை வெட்டி வையுங்கள். அலுவலகத்தில் ஸ்டெரையில் காக்பிட் உருவாக்குங்கள். உற்பத்தித் திறன் உயர்ந்து உங்கள் பிசினஸ் விமானம் போல் டேக் ஆஃப் ஆவதை உணர்வீர்கள்!

satheeshkrishnamurthy@gmail.com

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor