Published : 19 Dec 2015 10:33 AM
Last Updated : 19 Dec 2015 10:33 AM

தொழில் ரகசியம்: வியாபாரத்தில் ஊடுருவும் அதிகார சின்னங்கள்

‘அதிகார கோட்பாடு’ (Authority principle) பற்றி சென்ற வாரம் பார்த்தோம். பொதுவாகவே நம்மில் பலர் ஆழ் மனதில் அதிகாரத்திற்கு கட்டுப்படுபவர்கள். பெற்றோர்கள், பெரியவர் கள், மேலாளர்கள், போலீஸ், டாக்டர்கள், சட்டம், அரசாங்கம் போன்ற அதிகார மையங்கள் சொல்படி நடப்பவர்கள்.

அதிகார மையமாய் இருக்கவேண் டும் என்று அவசியமல்ல. அதிகார தோற்றம், தோரணை இருந்தாலும் போதும். அதற்கு கட்டுபட பலர் ரெடி. அத்தகைய மூன்று அதிகார சின்னங் களை, அவை வாழ்விலும், வியாபாரத் திலும் ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றி பேசலாம் என்றிருக்கிறேன். என் அதி காரத்திற்கு கட்டுப்பட்டு இதை மரியாதை யாக படிக்கவும் என்று சொல்ல மாட்டேன். இஷ்டமிருந்தால் தொடரவும்.

பதவிகள்

பதவி என்பது கிடைப்பதற்கு கடினமான அதிகார சின்னம். சமயத்தில் கிடைப்பதற்கு எளிதான சின்னமும் கூட. பயங்கரமாய் படித்து, படாதபாடுபட்டு பணி செய்து, பல காலம் காத்திருந்து பதவியை அடைவது ஒரு வழி. சரியான வழி. கடினமான வழி. இப்படித் தான் நடக்கவேண்டும்.

இது எதையும் செய்யாமல், வெறும் பதவியை பெயரோடு சேர்த்துக் கொண்டு அதிகார மையம் போல் வலம் வருவது இன்னொரு வழி. ஈசியான வழி. இப்படி செய்யக்கூடாது. ஆனால் சமயங்களில் நடக்கிறது.

உதாரணத்திற்கு, டாக்டர் ஒரு அதிகார சின்னம். அவர் என்ன சொன்னாலும் கைகட்டி, வாய் பொத்தி, தலையாட்டி சிரமேற்கொண்டு செய்கிறோம். தினம் காலை வாக்கிங் செல்லுங்கள் என்று கூறினால் இரவு தூக்கத்திலேயே நடக்க துவங்குகிறோம். பச்சை காய்கறி சாப்பிடுங்கள் என்றால் மாடு மேய்வது போல் மேய்ந்து தலையில் கொம்பு முளைக்கும் வரை தழை தின்கிறோம்.

டாக்டர் என்ற பதவி அவருக்கு தரும் அதிகாரம் இது. டாக்டர் என்ற அதிகார சின்னம் பெற அவர் படித்திருக்க வேண்டும். பாடுபட்டிருக்க வேண்டும். நூற்றுக்கு நூற்றிரண்டு மார்க் பெற்றிருக்க வேண்டும். இஷ்ட தெய்வங்களின் அனுக்ரஹம் வேண்டும். அஃப் கோர்ஸ் இது இல்லாமல் வேறு வழிகளிலும் பெற்றிருக்கலாம். அதைச் சொன்னால் சில டாக்டர்கள் கோவப்பட்டு ஊசி போட வருவார்கள்.

வெறும் வெள்ளை கோட்டுடன், எம்பிபிஎஸ், எம்டி, எஃப்ஆர்சிஎஸ் என்று எதையுமே படிக்காத, இதெல்லாம் என்னவென்றே தெரியாத ஒருவர் டாக்டர் தோரணையுடன் வந்து இதைச் செய்யுங்கள், அதை வாங்குங்கள் என்று சொன்னால் கேட்பீர்களா?

ச்சே, மாட்டேன் என்று சொல்லா தீர்கள். அவர் சொல்வதை தலையாட்டி கேட்கிறீர்கள். அதை நீங்கள் உணர் வதில்லை, அவ்வளவே. அசலில்லாத அதிகார சின்னம் எப்படி அசால்ட்டாய் வேலை செய்கிறது என்பதைப் பார்ப்போம்.

டாக்டர் போலிருப்பவர் விளம்பரத் தில் தோன்றி பிராண்டை பரிந்துரைக்கும் போது அந்த விளம்பரம் உங்கள் எண்ணத்தை கவர்கிறதா இல்லையா?. விளம்பரத்தில் தோன்றும் டாக்டரின் அறிவுரை உங்கள் கவனத்தைக் கவர்ந்து அந்த பிராண்ட் உங்கள் நம்பிக்கையை பெறுகிறதே. எத்தனை முறை உங்களை அறியாமல் அந்த டாக்டரை நம்பியிருக்கிறீர்கள்? அதனாலேயே பல பிராண்டுகள் கையில் வெள்ளைக் கோட்டுடன் விளம்பரம் செய்ய அலைகின்றன.

‘கோல்கேட்’ ஒரு படி மேலே சென்று தன் விளம்பரத்தில் ‘இந்திய டெண்டல் அசோசியேஷன்’ சான்றுரைக்கிறது என்கிறது. டாக்டர்கள் சங்கம் வைத்து சௌக்கியமாக செட்டில் ஆகியிருக் கிறார்களா? எங்கே இருக்கிறது அந்த சங்கம்? எதை வைத்து கோல்கேட்டை சான்றுரைக்கிறது என்று கேட்க தோன்று வதில்லை. டாக்டர் என்பது அதிகார சின்னம். டாக்டர்கள் அசோசியேஷன் என்றால் அது அதிகாரத்திற்கெல்லாம் அதிபதி. அதிகார நந்தி. அது சொன்னால் சரியாய் தான் இருக்கும். ஏதாவது கேள்வி கேட்டால் தெய்வ குத்தம் என்று கன்னத்தில் போட்டு நமஸ்கரித்து நம்புகிறீர்கள். கோல்கேட்டிற்கு உங்கள் வீட்டு கேட்டை திறந்து பூரண கும்ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்து வரவேற்கிறீர்கள்.

அது போல் டீச்சர் என்றால் சமுதாயத்தில் இன்னமும் மிச்சம் மீதி மதிப்பும் மரியாதையும் கொஞ்சம் இருக்கவே செய்கிறது. டீச்சர் போன்ற தோரணையுடன் விளம்பரத்தில் ஒருவர் தோன்றி பிராண்டைப் பற்றி போற்றி பேசினால் நம்மை அறியாமல் அந்த பிராண்ட் மீது ஒரு ஈர்ப்பு வருகிறது. ஒரு காலத்தில் ‘இந்துஸ்தான் யுனிலீவர்’ இந்த டெக்னிக்கை ’பாண்ட்ஸ் ட்ரீம்ஃப்ளவர்’ முகப்பவுடர் விளம்பரங் களில் அமோகமாக பயன்படுத்தியது. ஒன்றல்ல, இரண்டல்ல; பல வருடங்கள், பல விளம்பரங்களில் டீச்சரை கொண்டு அனைவரின் முகத்திலும் பவுடர் போட்டது!

துணிமணிகள்

அணியும் துணிமணியும் அதிகார சின்னம்தான். அணியாமல் இருந்தாலும் அதிகார சின்னமே. ஆனால் அந்த மேட்டருக்குள் நுழைய வேண்டாம். இது ‘தொழில் ரகசியம்’ பகுதி.

போலீஸ்காரராக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. போலீஸ் உடையணிந்து கொண்டு ஒருவர் வந்தால் போதுமானது. அது போல் தொழிலதிபர் என்று பெயர் பலகை வைத்துத்தான் புரியவைக்க வேண்டும் என்றில்லை. கோட்டும் சூட்டும் அணிந்து வந்தால் போதுமானது.

இதனால்தான் பல கம்பெனிகள் தங்கள் விற்பனை பிரதிநிதிகளை டை கட்டிக்கொண்டு பணி செய்யச் சொல் கின்றனர். வேகாத வெயிலில் கழுத்து பட்டன் கூட போட்டு, மென்னியைத் திருகி டை கட்டி, தூக்குப் போட்டு நாக்கு தள்ளி வாயில் நுரை தப்பும் ரேஞ்சுக்கு ஒருவர் வந்து பேசினால்தான் அவர் விற்பனையாளர் என்ற நம்பிக்கை நமக்கு வருகிறது. அவர் விற்பதை வாங்குகிறோமோ இல்லையோ, அட்லீஸ்ட் அவர் சொல்வதைக் கேட்கவாவது தோன்றுகிறது.

அந்தஸ்து அடையாளங்கள்

ஸ்டேட்டஸ் சிம்பள் கூட அதிகார மையங்கள்தான். அந்தஸ்து அடையா ளங்களான கார், வாட்ச், நகை, பிடிக்கும் சிகரெட், பருகும் மது, உபயோகிக்கும் பிராண்டுகள் அனைத்துக்கும் அதிகார தோரணையை அறிவிக்கும் ஆற்றல் உண்டு.

`ஆண்டனி தூப்’, ‘ஆலன் க்ராஸ்’ என்ற ஆராய்ச்சியாளர்கள் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் செய்த ஆய்வு இதை விளக்கும். சிக்னலில் பச்சை விழுந்தும் சமயங்களில் கார்கள் நகராமல் பிடித்து வைத்த பிள்ளையார் போல் நிற்பதைப் பார்த்திருப்பீர்கள். அப்பொழுது அதன் பின்னால் நிற்கும் கார் விடாமல் ஹார்ன் அடிப்பதையும் பார்த்திருப்பீர்கள். நகராமல் சண்டித்தனம் பண்ணும் கார் ஓட்டுனர்களின் பிறப்பை கேள்விக்குறியாக்கி, அவர் பூர்வீகத்தின் மீது சேற்றை வாரி இறைக்கும் அளவிற்கு இருக்கும் பின்னால் உள்ள காரின் ஹார்ன் சத்தம். பச்சை விழுந்தும் நகராமல் நின்றால் பச்சை பச்சையாய் திட்டுவது தானே சார் முறை!

இந்த வசவெல்லாம் சாதாரண கார்களுக்கும் அதை ஓட்டுபவர்களுக் கும்தான் என்று கண்டுபிடித்தார்கள் ஆய்வாளர்கள். சின்ன, விலை குறை வான, சாதாரண கார்கள் சிக்னல் விழுந்தும் நகராமல் நின்றால் மட்டுமே இத்தனை வசவும், கழுவி ஊற்றும் ஹார்ன் சத்தமும். விலை உயர்ந்த பிரீமியம் கார் நகராமல் நின்றால் பின்னால் இருந்த கார்களில் பாதிக்கு மேல் ஹார்ன் அடிக்காமல் காத்திருந்ததை கண்டார்கள். பெரிய மனுஷன் கார் என்பது போல் பின்னால் நின்ற கார் காத்திருந்ததாம்.

யோசித்துப் பாருங்கள். நீங்களும் இப்படித்தான் நின்றிருப்பீர்கள். நிற்கிறீர்கள். அட்லீஸ்ட் அடுத்த முறை நிற்கும் போதாவது நினைத்துப் பாருங்கள். ட்ராஃபிக்கில் நின்றாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

வாழ்வையும், வியாபாரத்தையும் பாதிக்கும் அதிகார சின்னங்கள் இன்னமும் கூட உண்டு. அவை சொல்படி நடக்கும் மக்களும் உண்டு. இப்பொழுது நீங்கள் இல்லையா. நான் சொல்லியும் இந்த முழு கட்டுரையையும் மூச்சு விடாமல் படிக்கவில்லையா?

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x