Published : 19 Mar 2016 10:13 AM
Last Updated : 19 Mar 2016 10:13 AM

தொழில் ரகசியம்: வாய்ப்பு குறையும்போது அதிகரிக்கும் நாட்டம்!

‘பற்றாக்குறை கோட்பாடு’ (The Scarcity Principle) பற்றி கடந்த வாரம் பார்த்தோம். அதிகமாக இருக்கும் எதன் மதிப்பும் நமக்குத் தெரிவதில்லை. கிடைப்பதற்கு அரிதாக இருப்பது மதிப்பு மிக்கதாகத் தெரிகிறது. பற்றாக்குறையான பொருள் என்றால் அதை வாங்க வேண்டும் என்று மனம் அலைகிறது. குறைவாய் கிடைக்கும் பொருளுக்குத் தான் அதிக கிராக்கி இருக்கிறது. இத்தனை ஏன், ஆடையில் பற்றாக்குறை இருந்தால் தானே பார்ப்பதற்கு பரவசமாய் இருக்கிறது!

சில காலம் முன்பு ‘மேகி’ நூடுல்ஸில் உலோகம் கலந்திருக்கிறது, மோனோ சோடியம் குளுடோமேட் இருக்கிறது என்று பழி சுமத்தப்பட்ட நேரம். அழுத்திப் பிழிந்தால் மேகியில் பெட்ரோல் டீசல் கிடைக்கிறது என்று சொல்லாதது ஒன்றுதான் பாக்கி. பல மாநிலங்கள் மேகியை தடை செய்தன. ‘நெஸ்லே’ கடைகளிலிருந்து மேகியை திருப்பி எடுக்கவிருந்த நேரம். இனி மேகி கிடைக்காது என்ற பற்றாக்குறை சூழ்நிலை. அந்த நிலையிலும், உடலுக்கு தீங்கு என்ற பேச்சுக்கு மத்தியிலும் மக்களுக்கு இருந்த கவலை எல்லாம் அய்யோ இனி மேகி கிடைக்காதே என்பதே. பாசம் பீறிட கடை மீது படையெடுத்து மிச்சம் மீதியிருந்த மேகியை மொத்தமாய் மொண்டு சென்றார்கள்.

பற்றாக்குறை கோட்பாட்டின் லீலை இதோடு முடியவில்லை. பிரச்சினை முடிந்து மேகி சீர் செய்யப்பட்டு மீண்டும் விற்பனை துவங்கும் என்று அறிவிக்கப் பட்டு பிராண்ட் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள நெஸ்லே கடைகளில் விற்காமல் மேகியை ‘ஸ்நாப்டீல்’ சைட்டில் விற்றது. விற்க துவங்கிய ஐந்தாவது நிமிடம் அறுபதாயிரம் பேக்குகள் விற்று தீர்ந்தன. குறைவாய் கிடைத்த இரண்டு நிமிட பிராண்டை வாங்க மக்களுக்கு ஐந்து நிமிடங்களே தேவைப்பட்டது. இதுதான் பற்றாக்குறை கோட்பாட்டின் மகிமை.

இது போல் பல சாட்சிகள் தெளிவாக உணர்த்துகின்றன. பற்றாக்குறை கோட்பாடு முறையானது, பரவலானது, தினப்படி வாழ்க்கையை பரந்து விரிந்து பல வழிகளில் பாதிக்கும் சக்தி கொண்டது. நம் எண்ணங்களை, செயல்களை இயக்கும் சக்தி கொண்டது. சரி, பற்றாக்குறை மீது நமக்கு இத்தனை பற்று? ஏன் இந்த கோட்பாட்டின் மீது நமக்கு கேட்பாரற்ற ஈடுபாடு? இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் என்கிறார்கள் சமூக உளவியலாளர்கள்.

எளிதாகக் கிடைக்கும் எதையும் விட மெனெக்கெட்டு பெறும் விஷயம் சிறந்தது என்று நம்புகிறோம். எந்த ஒரு விஷயத்தின் தன்மையை, தரத்தை அது எளிதாக அல்லது அரிதாக கிடைப் பதைக் கொண்டே தீர்மானிக்கிறோம். மின்சாரம் மானாவாரியாய் கிடைக்கும் போது நமக்கு அதன் அருமை தெரிவ தில்லை. கரண்ட் போகும் போதுதான் உயிர் போனது போல் உணர்கிறோம்.

இரண்டாவது, ஒரு விஷயம் பற்றாக்குறையால் குறையும்போது அதை பெறும் வாய்ப்பு நமக்கு குறைகிறது. வாய்ப்பு குறைவதால் சுதந்திரம் பறிபோனது போல் உணர்கி றோம். இதைப் புரிந்துகொள்ள ‘டியூக் பல்கலைக்கழக’ சமூக உளவியல் பேராசிரியர் ‘ஜாக் பிரெம்’ வழங்கிய ‘சைக்கலாஜிகல் ரியாக்டன்ஸ் கோட்பாடு’ பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. தனிப்பட்ட ஆதிக்கம் குறையும்போது நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை விளக்குவதே இந்த கோட்பாடு.

ஒரு விஷயத்தை சுதந்திரமாய் தேர்வு செய்யும் வாய்ப்புக் குறையும்போது நாம் இழக்கும் சுதந்திரத்தை மீண்டும் பெற விரும்புகிறோம். முன்பை விட அந்த விஷயம் மீது அதிக நாட்டம் கொள்கிறோம். சுதந்திரத்திற்கு வரும் குறிக்கீட்டை மீறி அந்த விஷயத்தை பெற முன்பை விட அதிக ஆர்வம் காட்டுகிறோம்.

இக்குணத்தை மூன்று வயதாக இருக்கும் போது முதலில் பெறுகிறோம் என்கிறார்கள் குழந்தைகளுக்கான உளவியல் நிபுணர்கள் . அமெரிக்காவில் வர்ஜினியா மாகாணத்தில் நடந்த ஆய்வு இதை விளக்கும். மூன்று வயது குழந்தைகள் அவர்கள் அம்மாக் களுடன் ஆய்வுக் கூடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு இரண்டு அழகான பொம்மைகள் ஒன்றன் பின் ஒன்று வைக்கப்பட்டது. இரண்டு பொம்மை களுக்கு நடுவில் ஒரு பிளாஸ்டிக் தடுப்பு நிறுத்தப்பட்டது. தடுப்பு போலிருந் தாலும் முன்னால் நின்று பார்த்தால் பின்னால் இருக்கும் பொம்மை தெரிவது போல அமைக்கப்பட்டது.

ஒரு சின்ன வித்தியாசத்துடன். ஆய்வில் கலந்துகொண்ட குழந்தைகளில் பாதி பேர் கூடத்திற்கு வரும் போது ஒரு அடி உயர தடுப்பும் மற்ற குழந்தைகளுக்கு இரண்டு அடி தடுப்பும் வைக்கப்பட்டது. வரும் குழந்தைகள் எந்த பொம்மையை முதலில் எடுக்கிறார்கள் என்று பார்ப்பதற்காக இப்படி செய்யப்பட்டது.

ஆய்வில் கலந்து கொண்ட குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக கூடத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். ஒரு அடி தடுப்பு இருந்த போது வந்த குழந்தைகள் பொம்மைகளை பார்த்த மாத்திரம் முன்னால் இருந்த பொம்மையை முதலில் எடுத்து விளை யாடத் துவங்கினார்கள். ஆனால் இரண்டு அடி தடுப்பு வைக்கப்பட்டிருந்த போது வந்த குழந்தைகள் பொம்மை களைப் பார்த்த மாத்திரம் எம்பி பின்னால் இருந்த பொம்மையைத்தான் முதலில் எடுத்தார்கள். கண் முன்னால், கையருகே ஒரு பொம்மை இருந்த போதும்.

ஏன் இப்படி? ஒரு அடி மட்டுமே தடுப்பு இருக்கும் போது எந்த பொம்மையையும் ஈசியாக எடுக்கலாம் என்கிற நிலை. அப்பொழுது முன்னால் இருக்கும் பொம்மைதான் முதலில் எடுக்கப்படுகிறது. தடுப்பு வைத்து அந்த சுதந்திரம் சற்றே பறிக்கப்படும் போது மனித மனம் ‘ஏன் தடுப்பு, அதை எதற்கு வைத்திருக்கிறீர்கள், பின்னால் இருக்கும் பொம்மை எனக்கில்லையா, ம்ஹூம் அதைத் தான் முதலில் எடுப்பேன்’ என்று மைண்ட் வாய்ஸ் கூற பின்னால் உள்ள பொம்மை முதலில் எடுக்கப்படுகிறது.

சுதந்திரம் பறிக்கப்படும் போது, குறைக்கப்படும் போது நாம் நடந்து கொள்ளும் முறை புரிகிறதா. மூன்று வயதில் பிள்ளையார் சுழி போட்டுத் துவங்கும் இக்குணம் டீன் ஏஜ் பருவத்தில் பிள்ளையார் சைஸுக்கு மனதில் வேரூன்றி விடுகிறது. அந்த வயதில் பெற்றோர்களோ பெரியவர்களோ ஏதாவது முட்டுக்கட்டை போட்டால் உருட்டு கட்டையால் அவர்களை அடிக்கவேண்டும் போல் தோன்றுகிறது.

டீன் ஏஜ் பருவத்தில் அதிகரிக்கும் இக்குணத்தை ‘ரோமியோ அண்டு ஜூலியட் எஃபெக்ட்’ என்கிறார்கள். ஷேக்ஸ்பியர் படைத்த கதாபாத்திரங்கள். தூர் வாரும் ரேஞ்சுக்கு ஆழமாய் காதலித்து பெற்றோர்கள் எதிர்ப்பால் தற்கொலை செய்துகொண்ட காதலர்கள். சிறு வயதில் தங்களை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு காதல் வளர்ந்தது எப்படி?

ரியாக்டன்ஸ் கோட்பாடு தான். தங்கள் காதலை எதிர்த்து, சேரக்கூடாது என்று தடுக்கும் பெற்றோர்களை மீற சிறந்த வழி சேர்ந்து இறப்பது என்று முடிவு செய்ய வைத்தது இக்கோட்பாடு. ஒரு வேளை பெற்றோர்கள் காதலை எதிர்க்காதிருந்தால் அவர்கள் இறந்திருப் பார்களா? தொடர்ந்து காதிலித்திருப் பார்களா? கற்பனை கதாபாத்திரங்கள் எப்படி நடந்து கொண்டிருப்பார்கள் என்று கல்லறையில் உறங்கும் ஷேக்பியரையே எழுப்பிக் கேட்டால்தான் உண்டு!

இதைச் சொல்வதால் பெற்றோர்கள் தங்கள் டீன் ஏஜ் குழந்தை யாரையாவது காதலிக்கிறேன் என்று வந்து நின்றால் அட்சதைப் போட்டு ஆசீர்வதித்து அனுப்பவும் என்று சொல்லவில்லை. ரியாக்டன்ஸ் கோட்பாட்டை எண்ணிப் பார்க்கச் சொல்கிறேன். இரண்டு அடி தடுப்பு வைத்தால் பின்னாலிருக்கும் பொம்மை மீதுதான் நாட்டம் பெருகும் என்று நினைவுபடுத்துகிறேன்!

பற்றாக்குறை கோட்பாட்டின் பவர் புரிந்திருக்குமே. சரி, இந்த கோட்பாட்டை எப்படி பயன்படுத்துவது என்பதை இன்னொறு சமயத்தில் தொடர்வோம்.

ஏன் இப்படி நீட்டிக்கொண்டே போகிறாய் என்றா கேட்கிறீர்கள்? கோட்பாடு தான் சார் பற்றாக்குறை பற்றியது. இதை தெரிந்துகொள்வதில் கூடவா பற்றாக்குறை?

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x