Published : 28 May 2016 11:17 AM
Last Updated : 28 May 2016 11:17 AM

தொழில் ரகசியம்: யார் சிறந்த தலைவர்?

1971ல் `கிம்பர்லி கிளார்க்’ என்ற பேப்பர் கம்பெனியின் சிஇஓ ஆகிறார் ‘டார்வின் ஸ்மித்’. இழுத்துக் கொண்டிருந்த கம்பெனி. சேர்ந்த இரண்டாவது மாதம் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிகிறது. ஒரு வருடம் கூட தாங்க மாட்டார் என்கிறார் டாக்டர். இதை கம்பெனிக்கு தெரிவித்துவிட்டு ‘நான் இன்னமும் சாகவில்லை. கம்பெனியில் நிறைய வேலை இருக்கிறது. முடிக்கும் வரை இறக்கும் உத்தேசமில்லை’ என்று கூறி அயராது உழைக்கிறார் டார்வின்.

வாரம் முழுவதும் அலுவலகம், வார முடிவில் ரேடியேஷன் தெரபி என்ற வாழ்க்கை. ஒரு வருட கெடு பெற்றவர் இருபத்தி ஐந்து வருடங்கள் வாழ்ந்தார். தன் அபார உழைப்பால் மெலிந்த கம்பெனியை நிமிர்த்தி சிறந்த கம்பெனிகள் வரிசையில் சேர்த்தார். ரிடையர் ஆன போது அனைவரும் பாராட்ட, ‘என் பதவிக்கு தகுதியானவனாகும் முயற்சியை செய் தேன், அவ்வளவே’ என்றார்.

1975-ல் ‘ஜில்லெட்’ கம்பெனியின் சிஇஓ ஆகிறார் ‘கோல்மென் மில்லர்’. புதிய ஷேவிங் பொருட்கள் கொண்டு வரும் முயற்சியில் இருக்க, கம்பெனியை வாங்கி கூறு போட்டு அதிக விலைக்கு விற்க கார்ப்பரேட் ரெய்டர்கள் முயன்றனர். கம்பெனி இயக்குநர்களோடு சேர்ந்து அதை முறியடித்தார் மில்லர். அவர்கள் ஷேர்களை அதிக பணம் தந்து வாங்கும் முயற்சி நடந்தது. அதிகமில்லை, இரண்டரை பில்லியன் டாலர் தருவதாகச் சொன்னார்கள். அதன் இந்திய மதிப்பு என்ன என்றா கேட்கிறீர்கள். அந்த காசில் அப்பொழுது ஒரு நாட்டையே வாங்கியிருக்கலாம்!

கார்ப்பரேட் ரெய்டர்களிடம் சிக்கினால் கம்பெனி நாசமாகிவிடும், புதிய பொருட்களைக் கொண்டு வரமுடியாது என்று வந்த பணத்தை துச்சமாக மதித்து வேண்டாம் என்று கூறி கம்பெனியை காக்கிறார். அதன் பின் ஜில்லெட் அறிமுகப்படுத்திய ‘சென்சர்’, ‘மாக் 3’ போன்றவை உலக ஆண்களின் ரோம சாம்ராஜ்யத்தை அழித்து ஜில்லெட்டை தலை சிறந்த கம்பெனிகள் வரிசையில் சேர்த்தது.

1991ல் ‘ஃபார்சூன்’ பத்திரிகை அட்டையில் மில்லர் படத்தை போட பர்மிஷன் கேட்க ‘நான் எதையும் பெரியதாக சாதிக்கவில்லை’ என்று மறுக்கிறார். இருந்தும் அவரை வரைந்து அட்டையில் பிரசுரித்த பத்திரிகையை ஊழியர்கள் காட்ட மில்லர் கூச்சப்பட்டு ‘எதற்கு இது’ என்று தன் ரூமிற்கு செல்ல அங்கு திடீரென்று மாரடைப்பு வந்து பதினாறு ஆண்டுகள் கட்டிக்காத்த கம்பெனியில் உயிரிழக்கிறார்!

‘மார்ல்பரோ’ போன்ற சிகரெட் பொருட்களை மட்டும் விற்ற ‘ஃபிலிப் மாரிஸ்’ கம்பெனியின் சிஇஓ ஆகிறார் ‘ஜோசஃப் கல்மென்’. 1957 முதல் 1978 வரை பல புதிய பொருட்களை அறிமுகப்படுத்தி, பல கம்பெனிகளை வாங்கி இணைத்து பிலிஃப் மாரிஸை உலகின் முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் சேர்க்கிறார்.

இரண்டாம் உலகப் போரில் கடற்படையில் இருந்த அவர் போர் கப்பல் ஒன்றில் பயணிக்க வேண்டியவர் கடைசி நேரத்தில் வேறு பணிக்கு அனுப்பப்பட அவர் போக வேண்டிய கப்பல் நடுக்கடலில் மூழ்கி அனைவரும் இறந்தனர். சுவாரசியங்கள் மிகுந்த தன் சுயசரிதை எழுதுமாறு அனைவரும் வற்புறுத்த இறுதி வரை மறுத்து வேறு வழியில்லாமல் கம்பெனிகாரர்களுக்கு மட்டும் சுயசரிதை எழுதினார்.

புத்தகத்தில் இப்படி தொடங்குகிறார்: ‘பிறந்தது முதல் எனக்கு அதிர்ஷ்டம். அன்பான பெற்றோர், அழகான மனைவி கிடைத்த அதிர்ஷ்டம். அமர்க்களமான பிசினஸ், அருமையான உடன் பணிபுரிவோர் பெற்ற அதிர்ஷ்டம். கடற்படையில் சேர்ந்த அதிர்ஷ்டம். கப்பலில் மூழ்காமல் தப்பித்த அதிர்ஷ்டம். 85 வயதிலும் உயிரோடு இருக்கும் அதிர்ஷ்டம்.’

வெற்றி பலருக்கு ஆணவத்தை தரும். இவரோ தன் வெற்றியை அதிர்ஷ்டம் என்றார். இவர் சுயசரிதையின் தலைப்பு ‘I am a lucky guy’!

எப்பேற்பட்ட மனிதர்கள். எத்தகைய தலைவர்கள். தொழில் உலகின் வரப்பிரசாதங்கள். இது போன்ற தலைமையே கம்பெனியை மிகச் சிறப்பானதாக்கும் அடித்தளம் என்கிறார் ‘ஜிம் காலின்ஸ்’. ஆய்வுக் குழுவுடன் ஐந்து வருடம், 1,435 கம்பெனிகளை அலசி, ஆயிரக்கணக்கான செய்திகள், புள்ளி விவரங்கள், ஆய்வறிக்கைகள் சேகரித்து பல நிர்வாகிகளுடன் கலந்துரையாடி சிறந்த கம்பெனிகள் உருவாவது எப்படி என்று ஆராய்ந்து அதன் முடிவுகளை ‘குட் டு க்ரேட்’ என்ற புத்தகமாய் எழுதினார்.

தலை சிறந்ததாக அவர் தேர்ந்தெடுத்தது 11 கம்பெனிகள். இதன் வெற்றிக்கு அடித்தளமிட்டது அதன் தலைமை என்கிறார். வெற்றிக்கு வேறு காரணங்கள் சிலவும் உண்டு. அதை இன்னொரு சமயம் பார்ப்போம். இப்பொழுது தலைமைக்குத் தேவையான திறமைகளை பார்ப்போம். இவை ஐடியலாஜிகல் அல்ல. அனுபவ ரீதியான உண்மைகள்.

சிறந்த தலைவர்கள் தங்களை என்றுமே முன் நிறுத்துவதில்லை. அதனால்தான் சிறந்த கம்பெனிகளை தெரிகிற நமக்கு அதன் தலைமை யார் என்பது தெரிவதில்லை. ‘பி அண்டு ஜி’ கம்பெனி சிஇஓ யார் என்று தெரியுமா? ‘பிரிட்டானியா’?

சிறந்த தலைவர்கள் தன்னலம் பாராதவர்கள். தங்களைத் தாண்டி, அவர்கள் ஆயுளை மீறி கம்பெனி வளரவேண்டும் என்று பார்ப்பார்களே ஒழிய தன்னை முன்நிறுத்தி தற்புகழ்ச்சி தேட மாட்டார்கள். ’வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம், அதனால் யாருக்கு பெயர் கிடைக்கும் என்று பார்க்காத வரை’ என்றார் ‘ஹேரி ட்ரூமன்’.

‘அபாட் லேபரட்டரீஸ்’ என்ற மருந்து தயாரிக்கும் குடும்ப கம்பெனி. கம்பெனி வளர சிறந்தவர்கள் மட்டுமே பணி புரியவேண்டும் என்று அதன் சிஇஓ ‘ஜார்ஜ் கெயின்’ தகுதியில்லாத தன் குடும்பத்தார் பலரையே சீட்டைக் கிழித்து வீட்டிற்கு அனுப்பினார். பித்ருக்கள் வேறு, பிசினஸ் வேறு என்று பந்தபாசத்தை ஒதுக்கி கம்பெனியை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.

சிறந்த தலைவர் தன் கம்பெனி பற்றி பேசும்போது ‘நான்’ என்று கூறாமல் ‘நாங்கள்’ என்று தங்கள் சக பணியாளர்களை சேர்த்தே பேசுவார்கள். பல வருடங்கள் முன்பு ‘சுந்தரம் கிளேட்டன்’ ஜப்பான் நாட்டின் உயரிய தர விருது பெற்றது. அதை பற்றிய கட்டுரை வெளியிட்ட ஆங்கில பத்திரிக்கை அட்டையில் கம்பெனி தலைவர் ‘வேணு னிவாசன்’ படம் பிரசுரிக்க அவரை அணுக அவர் ‘இது என் டீமிற்கு கிடைத்த விருது. அவர்களோடு சேர்ந்து நிற்கிறேன், தனியாக போஸ் தரமாட்டேன்’ என்றார். ஊழியர்கள் உழைப்புக்கு தரப்பட்ட எப்பேற்பட்ட அங்கீகாரம் பாருங்கள். பாட்டன் காலத்திலிருந்து கிளேட்டன் பெறும் வெற்றியின் ரகசியம் இதுவே!

சிறந்த தலைவர்கள் சாதாரணமானவர்கள். ஆனால் அசாதாரண ரிசல்ட் தந்தவர்கள். இவர்கள் வெற்றிகளை ஜன்னல்களாக பாவித்து அதனூடே மற்றவர்களை பார்க்கின்றனர். அவர்களே வெற்றிக்கு சொந்தக்காரர்கள் என்கின்றனர். தோல்வியை சந்தித்தால் அதை முகம் பார்க்கும் கண்ணாடியாய் பாவித்து தங்களை மட்டும் அதில் கண்டு தவறுக்கு முழு பொறுப்பேற்று அதை நிவர்த்தி செய்ய முயற்சிக்கின்றனர்.

தலைமைப் பண்பு என்பது ஒன்று முதல் ஐந்து லெவல்கள் கொண்டது என்கிறார் காலின்ஸ். கம்பெனி அதிசிறந்ததாக மாற்றத் தேவை லெவல் 5 தலைமை என்கிறார். காலத்தால் அழியாத சிறந்த கம்பெனி உருவாக்கும் கனவோடு மனதிடத்துடன் அசாத்திய பணிவுடன் பணி புரிபவர்கள் லெவல் 5 தலைவர்கள். லெவல் 5 தலைவர்களுக்கு சாதிக்க துடிக்கும் லட்சியம் உண்டு, சகட்டுமேனிக்கு ஈகோவும் உண்டு. அவை தன் கம்பெனி, அதன் வளர்ச்சி என்பதை சுற்றியே இருக்கும் என்கிறார் காலின்ஸ். தன் காலத்திற்கு பின்னும் கம்பெனி வளர தேவையானவற்றை செய்துவிட்டு செல்வார்கள் லெவல் 5 லீடர்கள்.

ஒருவரை புகழும் போது ‘அவர் வேற லெவல்’ என்று கூறுவது இதனால் தானோ என்னவோ.

இதெல்லாம் இருக்கட்டும். நீங்கள் எந்த லெவல் சார்?

satheeshkrishnamurthy@gmail.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x