தொழில் ரகசியம்: பிராண்டை விற்கும் கலர்கள்

Published : 09 Jan 2016 09:22 IST
Updated : 09 Jan 2016 09:22 IST

சிறு வயதில் கலர் ஆட்டம் ஆடியிருக் கிறீர்களா? நண்பர்களோடு ரவுண்டாக நின்று கொண்டு ‘கலர் கலர் வாட் கலர் டூ யூ ச்சூஸ்’ என்று கேட்டு ஒருவர் ரெட் என்றால் எல்லோரையும் ஒவ்வொரு லெட்டராக கூறி தொட்டு D என்று கூறும் போது யாரை தொடுகிறோமோ அவர் அவுட் என்கிற ஆட்டம். ஆடியிருப்பீர்கள், ஒப்புக்கொள்ள வெட்கமாக இருக்கிறதோ என்னவோ.

அதே ஆட்டத்தை பல தொழிலதிபர்கள் இந்த வயதில் ஆடுவதைப் பார்க்கிறேன். பிராண்டிற்கு லோகோ, விளம்பரம் வடிவமைக்கும் போது டிசைனருடன் சேர்ந்து அமர்ந்து இந்த ஆட்டத்தை ஆடுகிறார்கள். ‘பச்சை கலர் வையுங்க, ம்ம்ம்ம் வேணாம், மஞ்சள் போட்டு பாருங்க. இல்ல முதல்ல போட்ட சிவப்பே இருக்கட்டும்.’

இப்படி விளையாட்டுத்தனமாக டிசைன் செய்தால் விற்கும் பிராண்ட் எப்படி வளரும்? செய்யும் தொழில் எங்கிருந்து உருப்படும்? வாழ்ந்து கெட்ட வயதிலுமா வாட் கலர் டூ யூ ச்சூஸ்? என்ன கண்றாவி இது?

பிராண்ட் லோகோ, விளம்பரம் டிசைன் செய்யும் போது கலர்களை பார்த்து பதமாய் தேர்ந்தெடுப்பது ரொம்பவே முக்கியம். ஒவ்வொரு கலருக்கும் ஒரு அர்த்தம் உண்டு. ஜாதி, மத, கலாசாரத்திற்கேற்ப அது மாறுபடுமே ஒழிய ஒவ்வொரு கலரும் மனதில் ஒன்றை குறிக்கும் தன்மை கொண்டது. வெள்ளை மதிப்பு மிகுந்தது. `ராம்ராஜ்’ வேஷ்டி நிறுவனத்தை வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள். முடிந்தால் அவர்கள் வேஷ்டியை அணிந்து பாருங்கள். புரியும். பச்சை என்பது ஹெர்பல் மற்றும் ஆயுர்வேத பொருட்களைக் குறிக்கும் கலர். பிங்க் நிறம் என்றாலே குழந்தைகள் சம்பந்தப்பட்டது என்பது குழந்தைகளுக்குக் கூட தெரியும்.

இந்த நிறம் என்பது பொருளுக்கு பொருள் மாறுபடும் தன்மையும் கொண்டது. ஒரு நல்ல நாள் அல்லது விசேஷத்திற்கு உடை வாங்கும் போது அதில் கருப்பு கலர் இருந்தால் அமங்கலம் என்று கருதுபவர்கள் உண்டு. ‘தீபாவளி அதுவுமா எதுக்குடா கருப்பு சட்டை’ என்று பாட்டி திட்டியது ஞாபகம் இல்லையா? ஆனால் கார்களில் கருப்பு கலர் பிரீமியம் என்று கருதப்படுகிறது. பென்ஸ், பிஎம்டபிள்யூ கார்கள் வாங்குகையில் பலரின் விருப்பம் கருப்புதானே.

அதேபோல் கருப்பு ஒரு ஆண்மைத்தனமான கலர். ‘புல்லட்’ பைக் என்றாலே தோன்றுவது கருப்பு கலர் தானே. புல்லட் வேறு சில கலர்களில் வந்தாலும் புல்லட் ஓட்டுபவரை கேட்டுப்பாருங்கள். கருப்புதான் எனக்குப் பிடித்த கலரு என்று பாடிக்கொண்டே ஓட்டுவார்.

ஆனால் பெண்கள் பொருள் பிரிவுகளில், பிராண்டுகளில் கருப்பு கலரை அதிகம் பார்க்க முடியாது. ‘கீதாஞ்சலி’ என்ற வைரம் சம்பந்தப்பட்ட பிராண்ட் ஒன்று கருப்பு கலர் உபயோகித்ததாக ஞாபகம். அந்த பிராண்ட் என்ன ஆனது என்று ஞாபகமில்லை!

அதனாலேயே நம் பொருள் பிரிவிற்கேற்ப கலரை தேர்ந்தெடுப்பது அவசியம். இது உங்களை விட தேர்ந்த டிசைனர்களுக்குத்தான் தெளிவாக தெரியும். நீங்கள் விற்பது பால் எனில் வெள்ளை, நீலம் போன்ற லைட் கலர்களை பயன்படுத்தவேண்டும். இல்லை, எனக்கு கருஞ்சிவப்பு கலர்தான் ராசி, அந்தக் கலரில்தான் என் பிராண்ட் இருக்கவேண்டும் என்று அடம் பிடித்தால் பிராண்டிற்கே பால் ஊற்ற வேண்டி வரும்.

பொருள் பிரிவுகளுக்கென்று சில பிரத்யேக கலர்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக பொருள் பிரிவில் புதிய பிராண்டோடு நுழையும்போது உங்கள் பிராண்டிற்கு மற்ற போட்டியாளர்கள் உபயோகிக்கும் கலரையே தரவேண்டும் என்ற அவசியமில்லை. சொல்லப்போனால் உங்கள் பிராண்ட் பொருள் பிரிவிற்கேற்ற ஆனால் அதுவரை அடுத்தவர் உபயோகிக்காத புதிய கலரை தருவது பெட்டர். அப்பொழுதுதான் உங்கள் பிராண்ட் வித்தியாசமாய் தெரியும். பார்ப்பவர் கண்ணில் பளிச்சென்று படும். பல நகை கடைகள் ஏனோ சிவப்பு கலரை மட்டுமே கட்டிக்கொண்டு அழுகின்றன. அதனாலேயே ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரவியிருக்கும் ‘எவரெஸ்ட் ஜுவல்லரி’ பெண்களுக்கு பிடித்த சாக்லெட் கலரில் தன் பிராண்ட் லோகோவை அழகாக வடிவமைத்து வித்தியாசமாகத் தெரிகிறது. வெற்றிகரமாக திகழ்கிறது!

பொதுவாகவே ஆண்களுக்கு பளிச்சென்றிருக்கும் கலர்கள் பிடிக்கும். இன்னும் சொல்லப் போனால் பளீரென்று அடிக்கும் கலர்கள்தான் ஆண்களின் பேவரைட். பெண்களுக்கு சாஃப்ட் கலர்கள்தான் பிடிக்கும். ஊதா கலரு தானே சார் ரிப்பன்!

பிராண்டின் ஆளுமைக்கும் அதன் கலருக்கும் ரத்த சம்பந்தமே உண்டு என்று பல ஆய்வுகள் விளக்கியிருக்கின்றன. உதாரணத்திற்கு வங்கி, ஆயுள் காப்பீடு போன்ற பொருள் பிரிவுகள் ஆண்மைத் தனம் மிகுந்தவை. அதனால் இந்த பொருள் பிரிவு பிராண்டுகளுக்கு ஆண்மைத் தனமான கலர் தருவது நல்லது. நீலம் ஒரு ஆண்மையான கலர். இதை கார்ப்பரேட் கலர் என்றும் கூறுவார்கள். அதனாலேயே பல வங்கிகள் நீல நிறத்தை தன் பிராண்ட் கலராக உபயோகிப்பதை பார்த்திருப்பீர்கள். இருந்தும் சில வங்கிகள் இதை உணராமல் பிங்க், ஊதா போன்ற கலர்களை தங்கள் பிராண்ட் கலராக உபயோகித்து வருகின்றன. இது தப்பாட்டம். கலரை மாற்றினால் அவர்களுக்கு புண்ணியமாகப் போகும்.

பிராண்டிற்கு ஒரு கலரை தந்த பின் நினைத்த போதெல்லாம் அதை மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. பொதுவாகவே கலர் சாஸ்வதமானவையாக இருப்பது நல்லது. அதனால்தான் அதை `பிராண்ட் கலர்ஸ்’ என்கிறார்கள். பெட்டிக் கடை போர்டு சிவப்பு நிறத்தில் இருந்தால் பார்க்காமலேயே கூறலாமே அதில் ‘கோகோ கோலா’ என்று எழுதியிருக்கிறது என்று. காலம்காலமாய் கோகோ கோலா சிவப்பு கலரை பயன்படுத்துவதால் தானே இது சாத்தியப்படுகிறது.

கலர் பற்றி இங்கு சொன்னதெல்லாம் கலரில் இத்தனை சூட்சுமமும், உளவியலும் இருக்கிறது என்று உணர்த்துவதற்கு மட்டுமே. இவ்வளவுதானா கலர் மேட்டர், இனிமே ஒழுங்கா டிசைன் செய்கிறேன் என்று வேதாளமாய் மீண்டும் முருங்கை மரம் ஏறி டிசைனரோடு உட்கார்ந்து கலர் விளையாட்டு விளையாடாதீர்கள்.

முதல் காரியமாக லோகோ, விளம்பரம் போன்றவற்றை நீங்களே டிசைன் செய்வதை நிறுத்துங்கள். அப்படி டிசைன் செய்யும் ஆசை இருந்தால் கிரெயான்ஸ், பெயிண்டிங் புக் வாங்கி ஆபீஸ் ரூமில் கதவை சாத்திக்கொண்டு உட்கார்ந்து நாள் முழுவதும் வரையுங்கள். உங்களை யார் கேட்க போகிறார்கள். நீங்கள் வரைந்ததைத்தான் யார் பார்க்க போகிறார்கள்? உங்கள் லோகோ, விளம்பரத்தை மக்கள் பார்க்க வேண்டும். பிராண்ட் பற்றி அவை கூறவேண்டும். உங்கள் பிராண்டை மக்கள் வாங்கவேண்டும். அந்த ஆசையெல்லாம் சிறிதேனும் இருந்தால் லோகோ மற்றும் விளம்பரங்களை நீங்களே டிசைன் செய்து தொலைக்காதீர்கள்.

தேர்ந்த வல்லுனர்களிடம் அந்த வேலையை கொடுங்கள். கொடுத்துவிட்டு கூடவே உட்கார்ந்து இந்த கலரை போடு, அந்த கலர் வேண்டாம் என்று அவர் கழுத்தை அறுக்காதீர்கள். உங்கள் பிராண்டின் தன்மை, பொசிஷனிங், பர்சனாலிட்டி, தன்மைகளை விளக்குங்கள். இதற்கு கிரியேடிவ் ப்ரீஃப் என்று பெயர். அதைத் தந்து அவருக்கு டிசைன் செய்ய நேரமும், சுதந்திரமும் கொடுங்கள். வந்த டிசைன் உங்கள் பிராண்டிற்கு ஏற்றதா என்று சீர் தூக்கி பார்க்கும் வேலையை மட்டும் நீங்கள் செய்தால் போதும். எதேஷ்டம்.

இத்தனை சொல்லியும் நானே டிசைன் செய்தால் என்ன’ என்று என்னை திருப்பிக் கேட்டால் என் பதில்: சலூன் செல்லாமல் நீங்களே முடி வெட்டிக்கொண்டால் எப்படி இருக்கும்?

satheeshkrishnamurthy@gmail.com

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor