Published : 27 Aug 2016 11:16 AM
Last Updated : 27 Aug 2016 11:16 AM

தொழில் ரகசியம்: நல்ல மேலாளர்கள் ‘ஸ்டைலை’ மாற்றுவதில்லை

‘எனக்கு வாய்த்ததில் சிறந்த மேனேஜர்’ என்று ஒருவரை குறிப்பிட்டிருப்பீர்கள். வேறு யாரேனும் உங்களை அப்படி தப்பித் தவறி குறிப்பிட்டிருக்கலாம். சிறந்த மேலாளர் என்பவர் யார்? அப்பெயரெடுக்க என்ன திறமை வேண்டும்?

மற்றவரிடமிருந்து வித்தியாசப் படுத்தி சிறந்த மேலாளராக்கும் குணங் களில் தலையானது என்று நிர்வாக எழுத்தாளர் ‘மார்கஸ் பக்கிங்ஹாம்’ கூறு வது: `ஊழியர் குணாதிசயத்தை புரிந்து அதை சரியாய் பயன்படுத்தும் திறன்’.

பொழுது போகாத ஒரு காலை நேரத்தில் காலாட்டிக்கொண்டே காது குடைந்து கொண்டு கம்ப்யூட்டரில் தட்டிய வார்த்தைகள் அல்ல இவை. இரண்டு வருடம் சுமார் 80,000 மேலாளர்களை ஆய்வு செய்து அதி சிறந்தவர்களை இனங்கண்டு அவர்களிடம் உரையாடிய ஆழ்ந்த ஆராய்ச்சியின் முடிவில் அவர் கூறியது. சிறந்த மேலாளர் ஆவதற்கான திறமையை அதை வளர்க்கும் முறை களை ‘What Great Managers Do’ என்ற தலைப்பில் ‘ஹார்வேர்டு பிசினஸ் ரெவ்யூ’வில் கட்டுரையாக எழுதினார் மார்கஸ்.

சிறந்த மேலாளராக இருப்பது செஸ் விளையாடுவது போல. செஸ் ஆட்டத்தில் பல காய்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் நகரும். ‘பான்’ அடிமேல் அடி வைத்து செல்லும். ‘ரூக்’ நேர் கோட்டில் நகரும். ‘பிஷப்’ தன் கலர் கட்டத்தின் குறுக்கே சீரும். ‘ஹார்ஸ்’ மற்ற காய்களை தாண்டிக் கூட குதிக்கும். இப்படி ஒவ்வொரு காய்க்கும் பிரத்யேக குணாதிசயங்கள் உண்டு. இது புரியாமல் அதன் போக்கில் சிந்திக்காமல் செஸ் ஆட முடியாது.

ஊழியர்களை நிர்வகிப்பதும் அது போலவே. மேலாளரின் முக்கிய பணி ஊழியர்களின் தனித்துவமான திறமைகளை சிறந்த செயல்பாடாக மாற்றுவது. ஒவ்வொரு ஊழியரின் தனித்திறமை அறிந்துகொண்டு அவர் களுக்குள் இருக்கும் வித்தியாசங்களை புரிந்துகொண்டு அவரவர் திறமையை முழுமையாய் பிரயோகித்து பரிணமிக் கும் வகையில் ஊக்கப்படுத்துவதுதான் சிறந்த மேலாளர் செய்யவேண்டியது. இதை செவ்வனே செய்தால் மேலாளருக்கும், நிறுவனத்துக்கும், ஊழியர்களுக்கும் கூட பட்டியலிடும்படி பல பயன்கள் தரும்.

முதலாவது, ஊழியரின் திறமையை இனங்கண்டு சரியாய் பயன்படுத்துவது நேரத்தை மிச்சப்படுத்தும். என்னதான் திறமையான ஊழியராய் இருந்தாலும் எல்லோருக்கும் எல்லா திறமைகளும் வாய்ப்பதில்லை. யார் எதில் சிறந்து விளங்குகிறார்களோ அவர்களுக்கேற்ற பணியை தருவது மேலாளரின் நேரத்தை மிச்சப்படுத்தும்.

இரண்டாவது, அவரவர் திறமைக் கேற்ற பணியை தரும் போது ஊழியருக்கு பொறுப்புகள் அதிகரிக்கிறது. ‘இதோ உன் திறமைக்கேற்ற வேலை, இனி இது உன் பொறுப்பு’ எனும் போது ஊழி யருக்கு அதை சரியாய் செய்து கிடைத்த நல்ல பெயரை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தீவிர மடையும்.

மூன்றாவது, குழுவில் உள்ளவர் களின் திறமைக்கேற்ப பொறுப்புகள் தரும் போது குழுவில் உள்ள உறுப் பினர்களுக்குள் நல்ல புரிதல் ஏற்படு கிறது. ஒவ்வொருவரும் மற்றவரின் திறமையை சார்ந்து இருக்கிறோம் என்பது புரிந்து மற்றவர்களின் திறமைக்கு மரியாதை தரத் துவங்குவதால் குழுவாக சேர்ந்து வேலை செய்வது அதிகரிக்கிறது என்கிறார் மார்கஸ்.

தனி நபர்களை விட குழுவாய் (Team) ஒன்றுபடும்போதுதான் வெற்றி என்று பலர் நினைக்கிறார்கள். டீம் (Team) என்ற வார்த்தையில் ஐ (i) என்ற எழுத்திற்கு இடமில்லை என்பார்கள். ஆனால் டீம் என்பது பல தனி நபர்கள் மற்றும் அவர்களின் பிரத்யேக திறமைகளின் சங்கமம். தனிநபர்களின் பங்களிப்புதான் பெரும்பாலான சமயங்களில் வெற்றியைத் தருகிறது. டீம் (Team) என்ற வார்த்தையில் ஐ (i) இல்லாமல் இருக்கலாம். வின் (Win) என்ற வார்த்தையில் ஐ (i) இருப்பதை கவனியுங்கள்’ என்றார் அமெரிக்க கூடைப்பந்து வீரர் ’மைக்கேல் ஜோர்டன்’!

ஊழியர்களையும் அவர்களின் தனித் திறமைகளையும் சரியாய் இனங்கண்டு திறமையாய் நிர்வகிக்க அவர்களைப் பற்றிய மூன்று விஷயங்களை மேலாளர் அறிந்துகொள்வது அவசியமாகிறது.

ஊழியரின் பலம்

ஒவ்வொரு ஊழியரின் திறமையை புரிந்துகொள்ள அவர்கள் பலத்தை யும் பலவீனத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களை இரண்டு கேள்விகள் கேட்பதன் மூலம் இதை அறியலாம்.

பலத்தை அறிந்து கொள்ள கடந்த மூன்று மாதங்களில் அவர்கள் தங்கள் பணியில் சிறந்த நாள் என்று கருதுவது எதை, ஏன் என்று கேட்பது, ஊழியர் என்ன செய்தார், அதை ஏன் அனுபவித்து ஆனந்தமாய் செய்தார் என்பதை தெரிந்துகொள்வது. இப்படி கேட்கும் போது ஊழியர்களோடு மேலாளருக்கும் அவரவர் விருப்பம் மற்றும் திறமைகளை புரிந்துகொள்ள முடிகிறது. பலவீனத்தை புரிந்துகொள்ள கடந்த மூன்று மாதங்களில் அவர்கள் தங்கள் பணியில் மோசமான நாள் என்று கருதுவது எதை. ஏன் என்று கேட்பது. ஊழியர் ஏன் அந்த நாளை மோசமானதாய் நினைக்கிறார், எதனால் அப்பணியை வெறுக்கிறார் என்பதை புரிந்துகொள்வது.

பலம் மற்றும் பலவீனம் இரண்டையும் தெரிந்துகொள்ள முயற்சித்தாலும் மேலாளரின் கவனம் ஊழியர்களின் பலத்தில் தான் இருக்கவேண்டும். இக்கேள்விகளை ஒரு முறை கேட்டு நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து கேட்டு தெரிந்துகொள்வது நலம்.

ஊழியரின் பலத்தை தூண்டும் விசைகள்

ஊழியரின் பலம் எளிதில் தெரிவ தில்லை, எளிதில் வெளிப்படுவதும் இல்லை. அதை அவர்கள் வெளிப்படுத்த அதை தட்டி எழுப்பும் விசை எது என்பதை புரிந்து அதை தூண்டவேண்டும். இந்த விசை ஊழியருக்கு ஊழியர் மாறுபடும். ஒவ்வொருவரின் விசையை புரிந்து தூண்டுவதற்கு மேலாளர் முயற்சிக்கவேண்டும்.

சிலருக்கு ஒரு பணியை முழுவதும் தந்து அதை முடிக்கும் முழு பொறுப்பும் அவருடையது என்று விட்டுப் பார்க்கலாம். இல்லை ஊழியரிடம் பணி சார்ந்த பிரச்சினை ஒன்றை தந்து அதை தீர்க்கும் வழியை ஆராய்ந்து தரச் சொல்லலாம். பல சமயங்களில் ஊழியர்களின் பலத்தை தட்டி எழுப்ப சிறந்த முறை அவர்கள் பணிக்கு சிறந்த அங்கீகாரம் அளித்து பாராட்டுவது.

ஊழியரின் கற்கும் திறன்

கற்கும் திறன் ஒருவருக்கொருவர் மாறுபடும். ஒவ்வொருவரின் கற்கும் முறையை புரிந்துகொள்ளும் போது அவரவர் திறமையை அடையாளம் காண்பது எளிதாகிறது.

பொதுவாகவே பணியில் ஊழியர்கள் கற்றுக்கொள்வது மூன்று விதங்களில் அமைகிறது. சிலர் அலசி, ஆராய்ந்து கற்கிறார்கள். அதற்கான நேரத்தை செல வழித்து ஒரு விஷயத்தை ஆதி முதல் அந்தம் வரை அலசி கற்பார்கள். வேறு சிலர் ஒன்றை செய்து பார்த்து அதன் மூலம் கற்க முயல்வார்கள். செய்து பார்த்து தவறு நடந்தால் அதை திருத்தி அதிலிருந்து கற்றுக்கொள்ளும் குணம் உள்ளவர்கள். மூன்றாம் வகையினர் மற்றவர்கள் செய்வதைப் பார்த்து அதிலிருந்து கற்றுக்கொள்வார்கள்.

ஒவ்வொரு ஊழியரின் தனித்து வத்தை மதித்து அதற்கேற்ப நிர்வகிப்பதே நல்ல மேலாளருக்கு அழகு. இதை சொல் வதால் மேலாளருக்கு மற்ற திறமைகள் தேவையில்லை என்று அர்த்தமல்ல. சிறந்த மேலாளராக ஆவதற்கு இத்தகு தியே தலையானது என்கிறார் மார்கஸ்.

சிறந்த மேலாளர் ஊழியர்களிடம் தன் எதிர்பார்ப்பை கூறி அவர்கள் திறமைக்கேற்ற பணியை மட்டுமே தருகிறார்கள். ஊழியர்களின் பணிபுரியும் ஸ்டைலை நல்ல மேலாளர்கள் மாற்ற முயல்வ தில்லை. செஸ் ஆட்டத்தில் ரூக்கை நகர்த்துவது போல் பிஷப்பை நகர்த்தக்கூடாது என்ற விதி போல!

ஊழியரின் திறமை, பண்பு போன்றவை தனித்துவம் வாய்ந்த ரத்த பிரிவுகள் போல. ஒரு பிரிவு ரத்தத்தோடு எப்படி இன்னொரு பிரிவு சேர்க்க முடியாதோ அதே போல் தான் ஊழியர்களும் அவர்களை நடத்தும் முறையும். இதை புரிந்து நடந்தால் நீங்களும் சிறந்த மேனேஜர் தான்!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x