Published : 20 Aug 2016 10:30 AM
Last Updated : 20 Aug 2016 10:30 AM

தொழில் ரகசியம்: தோல்விகளை தேடுங்கள்...

இரண்டாம் உலகப் போர் உக்கிரம் அடைந்திருந்த நேரம். எதிரியின் தாக்குதலில் இருந்து தங்களது போர் விமானங்கள் தப்பிக்கும் வழிகள் குறித்து அமெரிக்கா தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தது. விமானங் கள் என்ன விளையாட்டு பொம்மையா, சகட்டுமேனிக்குத் தயாரித்து டப்பாக் களில் பேக் செய்து தேவைப்படும் போது போர்க்களத்திற்கு அனுப்ப. பொருட்செலவும் தொழில்நுட்பமும் கொண்டு தயாரிக்கப்படும் விமானங் களை பார்த்து, பராமரித்து, பொக்கிஷம் போல் பாதுகாத்தால்தான் போரிட முடியும். அதோடு வெற்றி பெற அமெரிக்கா விமானங்களையே பெரிதும் நம்பியிருந்தது.

எதிரிகளின் தாக்குதலை சமாளித்து விமானங்களின் ஆயுளை அதிகரிக்க குண்டு துளைக்காத கவசம் போன்ற ஆர்மர் தகடுகளை விமானங்கள் மீது ஒட்ட முடிவு செய்யப்பட்டது. ஆர்மர் தகடுகள் ஏகத்திற்கு கனமானவை. மொத்த விமானத்தையும் அதை கொண்டு மூடினால் அத்தனை கனத்தை சுமந்து விமானத்தால் பறக்க முடியாது. விமான நிலையத்தையே கோயில் பிரகாரம் போல் பிரதட்சனமாய் சுற்றி வரத்தான் முடியும்!

என்ன செய்வது என்று சிந்தித்து போரில் விமானம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை மட்டும் ஆர்மர் தகடுகளால் மூடுவது என்று முடிவு செய்தனர். பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் எது என் பதை எப்படி இனம் கண்டுகொள்வது?

போரிலிருந்து திரும்பி வந்த விமா னங்களை பிரித்து மேய்ந்து ஆராய்ந் தனர். அந்த விமானங்களில் குண்டு, தோட்டாக்கள் எங்கு துளைத்திருந்தன என்று தேடி அப்படி தாக்குதலுக்கு ஆளான பகுதிகளே பாதிக்கப்படக் கூடியவை என்று அப்பகுதிகளை மட்டும் ஆர்மர் தகடுகள் வைத்து மூட முடிவு செய்தனர்.

ஆய்வாளர்கள் நினைத்து போல் இதுதான் சரியான தீர்வு என்று நீங்களும் நினைத்தால் பேரழிவில் முடிந்திருக்கும். இரண்டாம் உலகப் போரின் போக்கே மாறியிருக்கும். அப்படி எதுவும் நடக்காமல் தடுத்து நிறுத்தியவர் ‘ஆப்ரஹாம் வால்ட்’ என்ற புள்ளியல் நிபுணர். கணிதம், புள்ளியல், முடிவெடுக்கும் கொள்கைகளில் (டிசிஷன் தியரி) பிஸ்தாவான இவர் ஒன் றோடொன்று தொடர்புடைய புள்ளி விவர பகுப்பாய்வு (Statistical sequential analysis) என்ற இயலை கண்டுபிடித்தவர். சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் இவர் ஒரு ‘புள்ளி ராஜா’!

போர்க்களத்தில் எதிரிகள் தாக்கு தலில் இருந்து தப்பி வந்த விமானங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டதை கவனித்தார் வால்ட். போரில் குண்டடி பட்டு விழுந்து நொறுங்கிய விமானங் களை யாரும் சிந்திக்காததை உணர்ந் தார். குண்டடிபட்டும் தொடர்ந்து பறந்து தப்பிக்க முடியும் என்பதையே போரி லிருந்து திரும்பிய விமானங்களும் அதன் பாதிக்கப்பட்ட பகுதிகளும் காட்டு கின்றன என்பதை புரிந்துகொண்டார்.

விமானப் படையிடம் அவர்கள் திட்டமிட்டதற்கு முழுவதும் எதிர்மறை யான செயலை செய்வதே புத்திசாலித் தனம் என்பதை எடுத்துரைத்தார். திரும் பிய விமானங்களில் எந்த பகுதிகளில் குண்டு துளைக்கவில்லையோ அந்த பகுதிகளே பாதிக்கப்படக்கூடியவை என்றார். திரும்பி வராத விமானங்கள் அப்பகுதிகளில் குண்டடிபட்டதால்தான் விழுந்திருக்கும் என்று விளக்கினார்.

ஆகவே திரும்பிய விமானங்களில் எந்த பகுதிகளில் குண்டடிபடவில்லையோ அப்பகுதிகளில் மட்டும் ஆர்மர் கவசம் கொண்டு மூடினால் போதும் என்றார். அவர் கூறியது போல் விமானங்கள் ஆர்மர் கொண்டு மூடப்பட்டு பல நூறு விமானங்களும் விமானிகளின் உயிர்களும் காப்பாற்றப்பட்டன.

அப்பொழுது புதியதாய் பிறந்து மெதுவாய் வளர தொடங்கி இன்று உலக ராணுவ அமைப்புகளாலும் பன்னாட்டு நிறுவனங்களாலும் பயன்படுத்தும் செயல்பாட்டு ஆராய்ச்சி (Operations Research) என்ற இயலின் முதல் பங்களிப்பாக இந்த நிகழ்வு கருதப்படுகிறது.

அமெரிக்க படைத் தளபதிகள், உத்தியமைப்பவர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தவறாக திட்டம் போட காரணமாக இருந்து எது? ஆய்வுகளை மீறி அழிவுப் பாதையில் அனைவரையும் அழைத்துச் சென்றது எது?

‘எஞ்சியிருத்தல் சார்புநிலை’ (Survivorship bias) என்கிறார்கள் உளவியலாளர்கள். திரும்பி வந்த விமானங்களை மட்டுமே அனைவரும் ஆராய திரும்பி வராத விமானங்களை கணக்கில் எடுக்காமல் இருந்ததே தவறுக்கு காரணம். வெற்றியை மட்டுமே பார்க்க பழகியிருக்கும் நாம் தோல்விகளை பார்ப்பதில்லை. இதுவே எஞ்சியிருத்தல் சார்புநிலையின் ஆதார தத்துவம். போரில், வாழ்க்கையில், வியாபாரத்தில் எல்லா இடங்களிலும் இதே கதைதான். பல சமயங்களில் வெற்றிகளை விட தோல்விகள்தான் நமக்கு அதிக பாடங்களை கற்றுத் தருகிறது. அதை நாம் உணர்வதும் இல்லை. கற்கவேண்டிய முக்கியமான பாடங்களை கற்பதும் இல்லை.

தோல்விகளை விட வெற்றிகளைத் தான் இந்த சமுதாயத்தின் கண்கள் பார்க்கின்றன. கண்ணில் தெரியும் வெற்றியை மட்டுமே மனம் ஆராய்கிறது. கண்ணிற்கு தெரியாமல் மறையும் தோல்விகளும் அதிலிருந்து கற்கவேண்டிய பாடங்களும் நம் கண்களுக்கு தெரிவதில்லை.

ஏன் வெற்றி பெற்றோம் என்பது பல சமயங்களில் வெற்றி பெற்றவர் களுக்கே தெரிவதில்லை. அதிர்ஷ்டம், மற்றவரின் உதவி, எதிராளியின் துர திர்ஷ்டம் போன்றவை வெற்றிக்கு வழிவகுத்திருக்கலாம். அதை வெற்றி பெற்றவர்கள் உணர்வதில்லை. உணர்ந் தாலும் வெளியே சொல்வதில்லை. பெற்ற வெற்றியை மற்றவர்கள் குறைத்து மதிப்பிடக்கூடாதே என்பதற் காக. அவர்கள் வெற்றியை மட்டும் பார்க்கும் மற்றவர்கள் அதிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள் உண்மை யான பாடங்களாக இருக்க முடியாதே!

‘சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்’ முதல் ‘சீயான் விக்ரம்’ வரை டாப் ஸ்டார்களின் இன்றைய புகழை, பெயரை மட்டுமே பார்த்து சினிமாவில் நுழைந்தால் பெயரும் பணமும் சம்பாதிக்கலாம் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் நடிகனாகவேண்டும் என்ற கனவோடு ரஜினியைப் போல், விக்ரமைப் போல் ஆயிரக்கணக்கில் சென்னைக்கு வந்து அந்த கனவு நிறைவேறாமல் இன்று ஹோட்டல்களில் சர்வர்களாக, டிராவல்ஸ் ஓட்டுநர்களாக பணிபுரிபவர்களின் தோல்விகள் யார் கண்களுக்கும் தெரிவதில்லை.

ஊடகங்களும் தோல்விக் கதைகளை கட்டுரைகளாக்குவது இல்லை. வாழ்க் கையின் இடுகாடுகளில், வியாபாரத்தின் மயானங்களில் புதைந்து போய் காணா மல் போகும் தோல்விகளை தேடிச் சென்று நோண்டி எடுத்து நாம் பாடம் பயில வேண்டும். அதற்காக வெற்றி களை ஒதுக்குங்கள் என்று சொல்ல வில்லை. மறைந்த தோல்விகளை மறந்துவிடாதீர்கள் என்கிறேன். வெற்றி யில் தெரியாத உண்மை தோல்விகளில் புதைந்திருக்கும் என்கிறேன். திரும்பிய விமானங்களில் புலப்படாத உண்மைகள் போரில் விழுந்து வராமல் போன விமானங்களில் இருக்கும் என்கிறேன்.

தரப்படும் அறிவுரைகளும் அதைத் தரும் அறிஞர்களும் எஞ்சியிருப் போர்கள் என்பதை உணருங்கள். அவர்கள் எஞ்சியது பாராட்டுக்குரியது. ஆனால் அவர்கள் எஞ்சியவர்கள் மட்டுமே என்பதை உணருங்கள். அவர்களைப் போல் பணி புரிந்தவர்கள், போரிட்டவர்கள் கீழே விழுந்த கதையை தேடிப் படியுங்கள். எஞ்சியவர்களின் உயர்வை விட விழுந்தவர்களின் சரிவு பாடம் புகட்டும். நீங்கள் விழாமல் காக்கும்!

கண்முன் தெரியும் வெற்றிகளை கொண்டாடுங்கள். அதே சமயம் கண்ணிற்கு தெரியாத தோல்விகளை தேடுங்கள். தொலைந்த நபர்கள், சிதைந்த தொழில்கள், அழிந்த பிராண்டு கள் புதைந்திருக்கும் மயானங்களுக்கு மறக்காமல் செல்லுங்கள். அந்த மயானங்களின் மௌனம் கதை சொல்லும். அந்த இடுகாடுகளின் இருட்டு உங்கள் வாழ்க்கைக்கு வெளிச்சம் தரும்.

பி.கு: பல்லாயிரக்கணக்கான போர் விமானங்கள் அழியாதிருக்க ஐடியா தந்த ஆப்ரஹாம் வால்ட் இந்திய அரசின் அழைப்பின் பேரில் 1950-ம் ஆண்டு நாட்டின் பல இடங்களில் உரை நிகழ்த்த தன் மனைவியுடன் வந்தவர் நீலகிரி மலைதொடர் அருகே ஒரு கோரமான விமான விபத்தில் காலமானதை அநியாய வயித்தெறிச்சல் என்பதா அல்லது அக்மார்க் முரண் என்பதா!

satheeshkrishnamurthy@gmail.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x