Published : 02 Jan 2016 09:22 AM
Last Updated : 02 Jan 2016 09:22 AM

தொழில் ரகசியம்: திருடன் போலீஸ் விளையாட்டு!

ஸ்கூல் படிக்கையில் ரிவிஷன் என்ற ஒன்று ஞாபகம் இருக்கிறதா? சில பாடங்கள் நடத்திய பின் அனைத்தையும் ஒரு முறை டீச்சர் சேர்ந்து அலசிப் பார்ப்பாரே. அது போல் இங்கு அலசிய முக்கிய சைக்காலஜி மேட்டர்களை அலசுவோமா.

தி காண்ட்ராஸ்ட் பிரின்சிபில்’ (The Contrast Principle):

ஒன்றன் பின் ஒன்றாக தரப்படும் விஷயங்களை பார்க்கையில் முதலில் பார்த்த விஷயம் இரண்டாவது விஷயத்தை பார்க்கும் கோணத்தை பாதிக்கிறது. அதிகம் கனமில்லாத ஒன்றை தூக்கி அதன் பின் அதைவிட சற்று கனமான ஒன்றைத் தூக்கும் போது இரண்டாவது அதன் நார்மல் கனத்தை விட அதிக கனமாக தோன்றுவது.

கைமாறு கோட்பாடு (Rule for Reciprocation):

ஒருவர் ஏதேனும் செய்தால், தந்தால் பிரதி உபகாரமாக அவருக்கு ஏதேனும் செய்யவேண்டும், தரவேண்டும் என்று நினைப்பது.

‘விருப்ப விதி’ (The Liking rule):

தெரிந்தவர், பிடித்தமானவர் ஏதேனும் கேட்டால் மறுக்க முடியாமல் தருவது. முன்பின் தெரியாதவர் பிடிக்கும் வகையில் நடந்து கொண்டால் அவர் கேட்பதையும் நம்மையறியாமல் தருவது.

இந்த மூன்று கோட்பாடுகளையும் சேர்த்து நம் தொழிலில் எப்படி பயன் படுத்துவது என்பதை பார்க்கும் முன் அமெரிக்காவில் ‘அரிஸோனா பல் கலைக்கழக’ சைக்காலஜி ப்ரொஃபஸர் ‘ராபர்ட் சியால்டினி’ விளக்கும் விஷயத்தை முதலில் பார்ப்போம்.

திருடன் போலீஸ் ஆட்டம்

அட, நாம் ஆட அல்ல. இந்த வயதில் அது ஒன்று தான் பாக்கி. உட்கார்ந்தால் வேர்க்கிறது. படுத்தால் மூச்சு முட்டுகிறது. எங்கிருந்து ஓடுவது. நாம் பேசப் போவது அமெரிக்காவில் போலீஸ் திருடனுடன் ஆடும் ஆட்டம். இதற்கு ‘குட் காப்’, பேட் காப்’ (Good cop, Bad cop) என்று பெயர். நல்ல போலீஸ், கெட்ட போலீஸ் விளையாட்டு.

சந்தேகத்தின் பெயரில் அகிஷ்டு ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்படுகி றான். அவன் திருடியிருக்கிறான் என்று நன்றாகத் தெரிகிறது. கோர்ட்டில் சொல்லும் அளவிற்கு வலுவான சாட்சி இல்லை. திருடிய பொருள் எங்கே என்று தெரியவில்லை. எப்படி திருடினான், எங்கு ஒளித்திருக்கிறான் என்று அவனாக ஒப்புக்கொண்டால்தான் உண்டு என்னும் நிலை. அப்பொழுது ஆடும் ஆட்டம் தான் குட் காப், பேட் காப்.

அகிஷ்டு ரூமில் உட்கார்ந்திருக்கி றான். ரூமில் இரண்டு போலீஸ்காரர்கள். கையில் லத்தியை சுழட்டியவாரே ஒரு போலீஸ்காரர் அவனை கோயிலை சுற்றுவது போல் பிரதட்சணம் செய் கிறார். இந்த விளையாட்டில் இவர் தான் பேட் காப். அவர் வாயில் அர்ச்சனைக்கு பதில் அசிங்கமான சொற்கள். பத்தாதற்கு லத்தியால் தரையில் பலம் கொண்ட மட்டும் அடித்து மிரட்டுகிறார். அமெரிக்காவில் நம்மூர் போல் அகிஷ்டு மீது போலீஸ் கை வைக்க முடியாது. வைத்தால் அகிஷ்டு போலீஸ் மீது கேஸ் போட்டு தனக்கு முன் அவரை ஜெயிலில் தள்ளிவிடலாம்.

’டேய், உன்னைய இங்கேயே ஓட விட்டு என்கவுண்டர் பண்றேன் பாரு. எடுடா அந்த ரிவால்வரை’ என்று மிரட்டலுக்கு நடுவே கத்துகிறார்.

அகிஷ்டு இஷ்ட தெய்வத்தை வேண்டி பயத்தில் அங்கேயே ஒண்ணுக்கு போவதா இல்லை வழக்கம் போல் பாத்ரூமில் போவதா என்று யோசித்தாலும் கல்லுளிமங்கன் ஒப்புக் கொள்ளாமல் உட்கார்ந்திருக்கிறான்.

‘கேஸ் ஸ்டிராங்கா இருக்கு. திருடியத ஒளிச்சா கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சியோ. டேய் இன்னுமா ரிவால்வர லோடு பண்ணல?’ பேட் காப் கோபம் உச்சக்கட்டத்தை அடைகிறது.

அந்த ரூமில் சும்மா உட்கார்ந்திருந்த மற்ற போலீஸ்காரர் எழுந்து வருகிறார். இந்த விளையாட்டில் இவர் தான் குட் காப். ‘விடுப்பா, இதுக்கெல்லாமா சுட்டுகிட்டு. பாவம் சின்ன பையன்’ என்கிறார் பேட் காப்பிடம்.

இவர் போலீஸ் தானா, இல்ல நம்மை மாதிரி அகிஷ்டுக்கு போலீஸ் யூனிஃபார்ம் கொடுத்திருக்காங்களா என்று ஆச்சரியத்தோடு குட் காப்பை பார்க்கிறான் அகிஷ்டு.

பேட் காப் காதில் வாங்காமல் ‘நீ சும்மா இருப்பா. இவனை போட்டு தள்ளனும். டேய், ரிவால்வர் இல்லன்னா விடு, என் டேபிள்ல கள்ள துப்பாக்கி வச்சிருக்கேன், அத எடுத்துட்டு வா’ என்று அலறுகிறார்.

’நீ கொஞ்சம் வெளில போ’ என்று குட் காப் கூறி தன் பர்ஸிலிருந்து பணம் எடுத்து பேட் காப்பிடம் ‘போய் டீ குடிச்சுட்டு எங்களுக்கும் டீ சொல்லு’ என்று அனுப்புகிறார்.

பேட் காப் செல்ல சற்று நேரத்தில் சூடாய் டீ வருகிறது. இருவரும் குடிக்கிறார்கள்.

குட் காப் அகிஷ்டு தோளில் கை வைத்து கருணை குரலில் ‘எதுக்கு வீணா அடிபட்டு சாகர. தெரியாம எடுத்துட்டேன் சார், இனி செய்ய மாட்டேன்னு அந்தாள்ட மன்னிப்பு கேளு. எப்படி திருடின, எங்க வச்சிருக்கேன்னு சொல்லிடு. அந்தாள நான் பார்த்துக்கறேன். நான் சொன்னா கேப்பான். கோர்ட்ல சொல்லி உன் தண்டனைய குறைக்கிறேன். என் மகன் வயசு உனக்கு. பாத்தா பாவமா இருக்கு’ என்கிறார்.

இது நடந்த பத்தாவது நிமிடம் அகிஷ்டு தான் திருடிய விதம், ஒளித்திருக்கும் இடம் எல்லாவற்றையும் படம் வரைந்து பாகங்கள் குறிப்பிட்டு ஒப்புக்கொள்கிறான். நாம் முதலில் பார்த்த சைக்காலஜி கோட்பாடுகள் வேலை செய்த விதத்தை கவனியுங்கள்.

விசாரிக்கும் இருவரும் போலீஸ் என்றாலும் போட்டுத் தள்ளுகிறேன் என்று கத்தும் பேட் காப் முன்னால் பாவமா இருக்கு என்று பரிதாபப்படும் குட் காப் அகிஷ்டுவிற்கு நல்லவராக தெரிகிறார். இது ‘காண்ட்ராஸ்ட் ப்ரின்சிபில்’.

பத்தாதற்கு டீ வாங்கி தந்து தண் டனையை குறைக்கிறேன் என்பதால் ஒப்புக் கொள்ளலாமா என்று யோசிக் கிறான். இது ‘கைமாறு கோட்பாடு’.

முன் பின் தெரியாவிட்டாலும் தன் மகன் போல் பாவித்து கருணை காட்டுவதால் ஒத்துக்கொண்டு ஒளித்து வைத்திருக்கும் இடத்தை சொல்கிறான். இது ‘விருப்ப விதி’.

குட் காப் பேட் காப் ஆட்டம் இனிதே நடந்து முடிகிறது. நாளை வேறு கேஸ் வரும். இன்று குட் காப்பாய் நடித்தவர் நாளை பேட் காப்பாக நடிக்க வேண்டியிருக்கும். அவ்வளவு தான் வித்தியாசம்!

திருடன் போலீஸ் மட்டுமல்ல, வாடிக்கையாளர் விற்பனையாளர் கூட இதே விளையாட்டு ஆடலாம். என்ன, சேல்ஸ்மென் ஆடுவார். வாடிக்கையாளர் தான் பந்து!

மனைவியோடு புடவை கடை செல்கிறீர்கள். புடவை பார்க்க நன்றாக இருந்தாலும் பட்ஜெட்டிற்கு மேல். சூடாய் காபி தருகிறார்கள். ‘கம்மி விலைல காட்டுங்க’ என்கிறீர்கள். ‘புது டிசைன் சார், எல்லாருக்கும் காட்டறதில்ல. மேடம் கலருக்கு எடுப்பா இருக்கும்’ என்கிறார் சேல்ஸ்மென். என் அழகுக்கு போயும் போயும் உன்னை பண்ணிக்கிட்டேன் பாரு என்ற பார்வையோடு ‘இத எடுத்துக்கறேன்’ என்கிறாள் மனைவி.

கடை சூப்பர்வைசர் வருகிறார். ’விலைய கொஞ்சம் கம்மி பண்ணுங்களேன்’ என்கிறீர்கள். சூப்பர்வைசர் ஒரு விலை கூறி `இதாங்க முடியும், இதுக்கே முதலாளி வைவார்’ என்கிறார். ‘கேட்டுப் பாருங்களேன் ப்ளீஸ்’ என்று நீங்கள் கூற முதலாளி ரூமிற்கு செல்கிறார்.

பத்து நிமிடம் கழித்து வந்து ‘முதலாளி கத்தறார் சார், உங்களுக்காக கேட்டு வாங்கினேன்’ என்று சற்று குறைத்து சொல்கிறார். அவ்விலை உங்கள் பட்ஜெட்டிற்கு மேல் தான். இந்த மட்டும் குறைந்ததே என்று வாங்கிக்கொண்டு கிளம்புகிறீர்கள்.

விலை குறைந்தது மட்டும் தான் உங்களுக்குத் தெரியும். முதலாளி ஊரில் இல்லை என்பதும், சூப்பர்வைசர் கிரிக்கெட் மாட்ச் பார்த்துவிட்டு வந்ததும் உங்களுக்கு தெரியுமோ!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x