Published : 21 May 2016 10:45 AM
Last Updated : 21 May 2016 10:45 AM

தொழில் ரகசியம்: தயவுசெய்து யாரிடமும் சொல்லாதீர்கள்!

நியூயார்க் என்பது பரோ என்றழைக்கப்படும் ஐந்து தீவுகளால் ஆன நகரம். அந்த ஐந்தில் ஒன்று மான்ஹாட்டன். மாடி ஏறி சொர்க்கம் போக சௌகரியமாக வானம் வரை அடுக்கு மாடி கட்டிடங்கள் தடுக்கி விழுந்தால் இருக்குமே, அந்த இடம்.

அங்கு சென்றால் ஈஸ்ட் வில்லேஜ் என்ற இடத்திற்கு மறக்காமல் செல்லுங்கள். செயிண்ட் மார்க் பிளேஸ் எங்கே என்று விசாரியுங்கள். டாம்ப்கின்ஸ் ஸ்கொயர் பார்க் அருகில் இருக்கிறது. அங்கு பழைய கட்டிடங்கள், புராதன சாமான் விற்கும் கடைகள் அருகில் ‘க்ரிஃப் டாக்ஸ்’ என்ற சின்ன ரெஸ்டாரண்ட் இருக்கும். ஹாட் டாக் என்ற பதார்த்தம் அங்கு பிரசித்தம். வாசல் மரப்படிகளில் இறங்கி நுழையுங்கள். உள்ளே பழைய டெலிஃபோன் பூத் கண்ணில் படுகிறதா என்று தேடுங்கள். லேசில் தெரியாது. மெனெக்கெட வேண்டும். பூத் எங்கே என்று யாரிடமும் கேட்காதீர்கள். எல்லோரும் தெரியாது என்றுதான் சொல்வார்கள்.

பூத்தை கண்டுபிடித்து போனை எடுங்கள். அக்கால கருப்பு டயல் வளைய போன். அதை சுழற்றாதீர்கள். ஒரு எழவும் ஆகாது. ரீசிவரை காதில் வைத்து போனில் இருக்கும் பஸ்ஸரை இரண்டு முறை அழுத்துங்கள்.

மறுமுனையில் ஒரு குரல் ஒலிக்கும். ‘ரிசர்வேஷன் இருக்கிறதா?’

ஏன், எதற்கு, யார் இது என்று உங்கள் மனம் குழம்பும்.

உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்து, பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்து, பெரியவர்கள் அனுக்கிரஹம் பரிபூரணமாக இருந்தால் பூத் பின்னால் பலகை ஒன்று திறக்கும். அது ஒரு ரகசிய கதவு. தைரியமாக நுழையுங்கள். எத்தனை ஜெய்சங்கர் படம் பார்த்திருப்பீர்கள். உள்ளே புதையல், சுரங்கம், ரம்பா மேனகை நடனமெல்லாம் இருக்காது. இருந்தால் அந்த இடத்தை ஏன் உங்களுக்கு சொல்லப் போகிறேன். அங்கேயே தனியாய் செட்டில் ஆகியிருக்க மாட்டேனா!

உள்ளே இருப்பது சரக்கடிக்கும் `பார்!’ பாரின் பெயர் ‘Please Don’t Tell’. அதாவது ‘யாரிடமும் தயவுசெய்து சொல்லாதீர்கள்’. என்ன அழகான பெயர் பாருங்கள்.

நியூயார்க் நகரில் இந்த பார் பிரசித்தம். சின்ன பார் தான். மொத்தம் 45 சேர்கள். யாரும் ரைட் ராயலாக சென்று அமர்ந்து ஜபர்தஸ்த்தாக ஆர்டர் செய்ய முடியாது. ரிசர்வேஷன் வேண்டும். மதியம் மூன்று மணி முதல் அடுத்த நாளுக்கு ரிசர்வேஷன் ஏற்கப்படும். அரை மணி நேரத்தில் புக்கிங் முடிந்துவிடும். தத்கல் வசதியெல்லாம் கிடையாது. தெய்வகடாட்சம் இருந்தால் மட்டுமே பாரின் சன்னிதானத்திற்கு செல்லும் சந்தர்ப்பம் வாய்க்கும்!

இத்தனைக்கும் இந்த பார் இன்று வரை விளம்பரம் செய்ததில்லை. வெளியே பெயர் பலகை கூட வைக்காத பிருக்கிருதிகளா விளம்பரம் செய்யப் போகிறார்கள். பல காலமாக இருட்டு அறையில் முரட்டு சரக்கு விற்று சக்கைப் போடு போடுகிறார்கள்.

எல்லா மார்கெட்டர்களும் பிராண்டை பிரபலப்படுத்த போஸ்டர், விளம்பரம் என்று படாதபாடு படும்போது இந்த பார் மட்டும் ஏன் இப்படி செய்கிறது. அதை விடுங்கள். விளம்பரம் இல்லாமல் எப்படி வெற்றி பெறுகிறது?

எல்லாம் சைக்காலஜி தான், வேறென்ன. பிராண்டை பிரபலப்படுத்த ஒரு சிறந்த வழி வர்ட் ஆஃப் மவுத். வாய் வழி செய்தி பரவும் மார்க்கெட்டிங். விளம்பரம் சொல்வதை விட தெரிந்தவர்கள் சொல்வதை நம்புகிறோம். தெரிந்தவர் சொன்னார் என்று தேடி பிடித்து ஒரு ஹோட்டல் செல்கிறோம். நாலு பேர் நன்றாக இருந்தது என்றால் குடும்பத்தோடு அவர்கள் சொன்ன திரைப்படத்தை பார்க்கிறோம்.

ஏழு கடல், தீவு, ஃபோன், ரிசர்வேஷன், பூத் மேட்டரை எல்லாம் தாண்டி பாரில் குடித்தவர்கள் சும்மா இருப்பாரா? பாரின் ஸ்தல புராணம் முதல் சைட் டிஷ் சமாச்சாரம் வரை ஒரு பாடு அனைவரிடமும் ஜபிக்க மாட்டார்களா.

கேட்பவர்களும் சும்மா இருப் பார்களா? ஏதோ அண்டர்க்ரவுண்ட் பாராம். சொகுசான பாதாளத்தில் சோமபான சப்ளையாம். சென்றவர் களுக்கு மோட்சம் கிடைக்கிறதாம். குடித்தவர்களுக்கு சகல சௌபாக்கியம் கிட்டுகிறதாம் என்று கன்னத்தில் போட்டபடி காவடி எடுக்காத குறையாக அந்த பாருக்கு ஷேத்திராடனம் செல்ல மாட்டார்களா?

அதுதான் நடக்கிறது. பாதாள பாரில் பிதுங்குகிறது கூட்டம். அண்டர்க்ரவுண்ட் டாஸ்மாக்கில் அனுதினம் அடிதடி. பார் தான் சீக்ரெட். இதன் மகிமை உலக ஃபேமஸ்!

ரகசியங்கள் பற்றி ஒரு ரகசியம் சொல்கிறேன். ரகசியம் ரொம்ப காலம் ரகசியமாக நீடிப்பதில்லை. நண்பர் உங்களிடம் ஒரு விஷயம் கூறி ‘இந்த மேட்டர் நமக்குள்ளே இருக்கட்டும். யாரிடமும் சொல்லாதே’ என்றால் ‘சே, யார்டயும் சொல்லமாட்டேன்’ என்பீர்கள். அவர் அந்தண்டை போனதும் என்ன செய்வீர்கள் என்று தெரியாதா!

மெனெக்கெட்டு ஃபோன் போட்டு யாரிடமாவது சொன்னால்தான் உங்கள் தலை வெடிக்காமல் தப்புகிறது. அதுவும் சொல்லிவிட்டு சும்மா இருப்பீர்களா? முத்தாய்ப்பாக ‘இத யார்கிட்டேயும் சொல்லாத’ என்று கூறுவீர்கள். அவரும் ‘என்ன பத்தி உனக்கு தெரியாதா’ என்று கூறி அடுத்த நிமிடம் அடுத்தவருக்கு ஃபோன் செய்வார். இனி அந்த ரகசியம் யாருக்காவது தெரியாமல் இருந்தால்தான் அதிசயம்!

மக்களை ஈர்ப்பது இந்த ரகசிய மேட்டர் மட்டுமல்ல. யார் வேண்டுமானாலும் ஈசியாக செல்லக்கூடிய அல்ப பாரை அதற்கு நேரெதிராக மாற்றியமைத்து ரிசர்வேஷன் வேண்டும், கொஞ்சம் சேர்கள் தான், பந்திக்கு முந்தவேண்டும் என்று பரபரப்பு காட்டும் போது பார் மீது ஈர்ப்பு கூடுகிறது. அங்கு சென்று் குடிக்காமலேயே கிக் கிடைக்கிறது. எளிதில் கிடைக்காத எதன் மீதும் மதிப்பு வரும் என்பதை விளக்கும் பற்றாக்குறை கோட்பாட்டை பற்றி இப்பகுதியில் ஏற்கனவே பார்த்தோமே.

குடித்தபின் பில் தந்து பணத்தை பிடுங்கி குடிகாரர்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளத் தான் பல பார்கள் பார்க்கும். ஆனால் இது தான் ஸ்பெஷல் பார் ஆயிற்றே. குடித்து முடித்து கிளம்புகையில் சர்வர் உங்களிடம் விசிடிங் கார்ட் தருவார். கருப்பு கலர் கார்ட்டில் சிவப்பு கலரில் ‘ப்ளீஸ் டோண்ட் டெல்’ என்று எழுதி அதன் கீழ் ஒரு டெலிஃபோன் நம்பர் இருக்கும்.

பார் ஓனர் சைக்காலஜி தெரிந்தவர். பாரை ஊர் முழுவதும் பரப்பும் நோக்கத்துடன் இதை யாரிடமும் கூறாதீர்கள் என்கிறார். அடித்த சரக்கின் போதை தெளிவதற்குள் நீங்கள் ரகசியத்தை அறுபது பேரிடமாவது சொல்வீர்கள் என்று அவருக்குத் தெரியும். பத்தாதற்கு டெலிஃபோன் நம்பர் வேறு தந்திருக்கிறார். ஊரெல்லாம் ஃப்ரீயாக பிராண்ட் பற்றி உங்கள் செலவில் பரப்புவீர்கள் என்று அவருக்கு பரிபூரணமாகப் புரியும். குடித்தவர்கள் உண்மையை கக்கிவிடுவார்கள் என்று சும்மாவா சொன்னார்கள்!

பேதை மாந்தருக்கு போதையோடு பாதையும் போட்டிருக்கிறார் மனிதர். அதில் குடி பக்த கோடிகள் திருவீதி உலா சென்று தீர்த்தவாரி அள்ளி பரம்பொருளை பக்கத்தில் சென்று அறியும் பரவச நிலை அடையக் கடவதுதான் பாக்கி!

என் கவலையெல்லாம் இம்மாதிரி பார் நம்மூரில் இல்லையே என்பதுதான். யாருக்கும் தெரியாமல் குடிப்பவர்களுக்கு எவ்வளவு சௌகரியமாக இருக்கும்!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x