Published : 18 Feb 2017 10:19 AM
Last Updated : 18 Feb 2017 10:19 AM

தொழில் ரகசியம்: ஜல்லிக்கட்டு தரும் படிப்பினைகள்

இந்த கட்டுரை ஜல்லிக்கட்டு பற்றியது. ஜல்லிக்கட்டு என்பதால் காளையோடு மல்லுக்கட்டுவதைப் பற்றியதல்ல. நடந்து முடிந்த போராட்டத்திலிருந்து கம்பெனிகள் கற்கவேண்டிய மார்க்கெட்டிங் படிப்பினைகள் பற்றியது. ஜல்லிக்கட்டு போராட்டம் என்பதால் இது தமிழ் கலாச்சாரம் பாதுகாப்பது பற்றியல்ல. கம்பெனியில் நிர்வாக கலாச்சாரம் வளர்க்கும் வழிகள் பற்றியது. சுருக்கமாகச் சொல்கிறேன், இக்கட்டுரை அலங்காநல்லூரில் காளையை அடக்கும் வழி தெரிந்துகொள்ள அல்ல. அலுங்காமல் மார்க்கெட்டில் போட்டியை மடக்கும் வித்தையை புரிந்துகொள்ள!

ஜல்லிக்கட்டு போராட்டம் விமரிசையாக நடந்து முடிந்திருக்கிறது. நாடெங்கும் செய்தி பரவி உலக நாடுகள் பலவற்றையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. உலகம் பார்த்த போராட்டத்தை மார்க்கெட்டிங் கோணம் கொண்டு பார்த்தால் அதில் ஐந்து படிப்பினைகள் புதைந்திருப்பது புரியும். அதைப் புரிந்து பயின்றால் பிசினஸை நேர்படுத்தமுடியும். பிராண்டை சீர்தூக்க முடியும். போட்டியை வேரறுக்க முடியும். அவசியம் அரசியல் சார்பில்லாமல் படிக்கவும்.

5. வலுவிழக்கும் மாஸ் மீடியா

எந்த விஷயத்திற்கு மக்கள் போராடத் தொடங்கினாலும் அதை ஊதி வளர்க்க உதவுவது மாஸ் மீடியா. போராட்டச் செய்தியை பரப்புவதிலிருந்து, ஆரம்பகட்ட நிகழ்வுகளை அறிவிப்பது வரை போராட்டம் பாஸாக உதவுவது மாஸ் மீடியா. அதுபோல புதிய பிராண்ட் பற்றிய செய்தி மக்களை சென்று சேரவும், மலர்ந்து விரியவும் பெரும் பங்காற்றுவது மாஸ் மீடியா விளம்பரங்கள்.

அந்த சிலபஸ் மாறிவிட்டது என்பதற்கு ஜல்லிக்கட்டு போராட்டம் சான்று. போராட்டம் துவங்குவதை மாஸ் மீடியா அறிந்திருக்கவில்லை, முதலில் பெரியதாக தெரிவிக்கவில்லை. சின்ன அளவில் போராட்டம் தொடங்கிய பின்பு கூட மாஸ் மீடியா பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை, மக்களிடம் எடுத்துச்சொல்லவில்லை. போராட்டம் விஸ்வரூபம் எடுத்த பின் தான் அதன் வீரியம் மாஸ் மீடியாவுக்கு புரிந்து அதை முழு நேர செய்தியாக்கியது. அதனால் மாஸ் மீடியா இனி முக்கியமல்ல என்றில்லை. பிராண்டை அறிமுகப்படுத்த, பெரியதாக வளர்க்க மாஸ் மீடியா முன்பு போல் மாஸானது அல்ல என்பதே இந்த போராட்டம் நமக்கு உணர்த்தும் உண்மை.

4. வலிமை பெறும் சோஷியல் மீடியா

மாஸ் மீடியா வளர்க்காத இப்போராட்டத்தை பிரசவித்து, பேனி பாதுகாத்து, பதமாக வளர்த்த முழுப் பெருமை சோஷியல் மீடியாவை சேரும். போராட்டத்தின் இணைய முகம் ‘ஃபேஸ்புக்’ என்றால் அனைவரின் மைண்ட் வாய்ஸ் ’வாட்ஸ் அப்’. போராட்டம் வளர அதைப் பற்றிய இடைவெளி இல்லாத நேர்முக வர்ணணை ஒரு பெரிய ப்ளஸ். இளைஞர்களை கவர நினைக்கும் பிராண்டுகள் சோஷியல் மீடியாவை புறக்கணித்து மீடியா பிளான் செய்தால் காளை மாடு முட்டி கால் முறிவில் முடியும் ஆபத்திருப்பதை அறிவது அவசியம்!

3. நீடித்திருக்கவேண்டிய பிராண்ட் பப்ளிசிட்டி

பிராண்டை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தி சாஸ்திரத்திற்கு விளம்பரம் செய்தால் அது பிய்த்துக்கொண்டு பறக்காது. பிராண்டை நிலைநிறுத்த, நில்லாது வளர தேவை நீடித்த பப்ளிசிட்டி. ஹோம குண்டத்தில் அக்னி கொழுந்து விட்டு எரிய எப்படி நெய் ஊற்றிக்கொண்டு, அடிக்கொருதரம் அதை ஊதி பெரியதாக்க வேண்டுமோ அதே போல் தான் பிராண்ட் புரமோஷனும்.

ஜல்லிக்கட்டு போராட்டம் வளர காரணமாயிருந்தது அதைப் பற்றிய இடைவிடாத பப்ளிசிட்டி. கல்யாண பத்திரிக்கை தவிர மற்ற எல்லா பத்திரிக்கையிலும் கவர் ஸ்டோரியாகி போராட்ட ஜுவாலை ஜகத்ஜோதியாய் எரிய வைத்துவிட்டது.

பிராண்டை அறிமுகப்படுத்திய பின் அதைப்பற்றிய விளம்பரமும் பப்ளிசிட்டியும் நீடித்திருந்தால் பிராண்ட் சூடு பிடித்து வேகமாக பரவும். ஓட ஓட வேகம் பிடிக்கும் ரயில் போல. வெற்றி பெற்ற கட்சிக்கே ஓட்டு போட்டு பழகியவர்கள் நம்மவர்கள். பலர் ஒரு பிராண்டை வாங்கினால் அது நல்ல பிராண்ட், நாமும் வாங்கவேண்டும் என்று நினைப்பவர்கள். ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் பங்குபெறுகிறார்கள், என்ன தான் நடக்கிறது என்று போய் பார்ப்போம் என்று தங்கள் இஷ்டமித்ர பந்துக்களுடன் இனிதே போய் போராட்டத்தில் செல்ஃபி எடுத்து அதை சகலருக்கும் தெரிவித்த மக்களின் ஏகோபித்த பங்களிப்பு போராட்டத்தை மேலும் கொழுந்து விட்டு எரிய வைத்துவிட்டது.

2. வளமைக்கு தேவை தலைமை

வண்டியை பல பேர் சேர்ந்து தள்ளலாம். ஆனால் வண்டி ஓட துவங்கிய பின் அதை நேர்படுத்திச் செலுத்த அனைவரையும் அழைப்பது ஆபத்து. வண்டி வேகம் பிடிக்கத் துவங்கிய பின் ஒருவர் தான் ஓட்டவேண்டும். ஓட்ட முடியும். போராட்டம் வலுவடைய காரணம் அதை சேர்ந்து தள்ளிய கூட்டம் என்றாலும் அதை செலுத்த, தேவைப்பட்ட நேரத்தில் பிரேக் போட்டு நிறுத்த டிரைவர் இல்லாதது ஒரு குறையே.

குடும்பத் தொழில்கள் அவ்வண்ணமே. என்ன தான் அப்பாவோடு சேர்ந்து அனைத்து அண்ணன் தம்பிகளும் ஆரம்பித்த தொழில் என்றாலும் அதை அனைவரும் சேர்ந்து நடத்தவும், சேர்ந்து முடிவெடுக்க முயற்சிப்பது தப்பாட்டம். விரைந்து முடிவெடுத்து முன்னேற வேண்டிய நிர்பந்தம் நிறைந்த போட்டி யுகம் இது. மார்க்கெட்டிங் யுத்த களம் இன்று. இந்நிலையில் அனைவரும் சேர்ந்து அணிவகுத்து ஆதிக்கம் செலுத்துவோம் என்று அழுது அழிச்சாட்டியம் செய்தால் ஆபத்தில் ஆரம்பித்து அதளபாதாளத்தில் முடியும். தேர்ந்த ஒருவர் மட்டுமே கேப்டனாக வேண்டும். மற்றவர் பேச்சை அவர் கேட்கலாம், கேட்கவேண்டும். ஆனால் முடிவெடுக்கும் பொறுப்பு ஒருவரது மட்டுமே. ஒருவர் மட்டுமே ஏற்கவேண்டும். இல்லையெனில் ஆட்டோ எரிந்து அடிதடி தடியடியில் முடியும் அபாயம் உண்டு!

1. பிராண்ட் பொசிஷனிங்கின் மகிமை

நடந்து முடிந்த போராட்டம் நமக்கு சொல்லிக்காட்டும் முதல் முக்கிய பாடம் பிராண்ட் பொசிஷனிங் தத்துவத்தின் அவசியத்தை, அவசரத்தை. பிராண்ட் வெற்றி பெற தேவை தெளிவான பொசிஷனிங். எல்லா பிராண்டுகளும் ஒன்றை மட்டுமே குறிக்கவேண்டும். இதுவே வெற்றி ரகசியம். ‘லிரில்’ என்றால் ‘புத்துணர்ச்சி’. ‘நல்லி’ என்றால் ‘பட்டு’. ‘தி. நகர்’ ஒன்றை ‘ஷாப்பிங்’. இப்படி ஒன்றை மட்டும் குறிக்கும் போது தான் வாடிக்கையாளர் கண்களில் தெளிவாகப் படுகிறது. மனதில் பலமாக பதிகிறது. பிராண்டாகட்டும் அல்லது வேறெந்த விஷயமாகட்டும், ஒன்றுக்கு மேல் குறிப்பிடும் போது தான் குட்டை குழம்பி குழப்பம் மிஞ்சுகிறது. கண்ணதாசன் கூறியது போல் ‘ஒன்றிருக்க ஒன்று வந்தால் இன்பம் என்றுமில்லை’

நடந்து முடிந்த போராட்டத்தின் மாபெரும் சக்திக்கு, மகத்தான வெற்றிக்கு முதன்மையான, முழுமையான காரணம் அதன் ஒருமுகத் தன்மை. போராட்டம் மையப்படுத்தியது ஒன்றை மட்டுமே - ‘ஜல்லிக்கட்டு எங்கள் பிறப்புரிமை’. சிங்கிள் மைண்டட் ப்ரபொசிஷன் (Single minded proposition) என்பார்கள். அதனால் வேகமாக மக்கள் மனதில் ஏறி ஈசியாக அமரவும் முடிந்தது.

இதற்கு பதில், ‘மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளை முன்னிறுத்தி மெரினாவில் மாபெரும் போராட்டம்’ என்றிருந்தால் ஐம்பது பேர் கூட அமர்ந்திருக்கமாட்டார்கள். ‘பத்து அம்ச கோரிக்கை அமல்படுத்தக்கோரி தமுக்கம் மைதானத்தில் உண்ணாவிரதம்’ என்றிருந்தால் பக்கத்திலுள்ள ‘குமார் மெஸ்’ஸில் தான் கூட்டம் சேர்ந்திருக்கும். ஜல்லிக்கட்டு போராட்டம் போல் ஒருமுகத் தன்மையோடு இருந்தால் பிராண்டும் பரவலாக பேசப்பட, பரபரப்பாக வாங்கப்படும் என்பதே போராட்டம் நமக்கு சொல்லித் தரும் முதல் படிப்பினை!

ஜல்லிக்கட்டு போராட்டம் சொல்லிக்காட்டும் இந்த ஐந்து உண்மைகளை புரிந்து, பயின்று, பயிற்சி செய்து பிசினஸில் பிரயோகித்தால் எந்த பீட்டாவும் உங்கள் வெற்றிக்கு தடையாகாது!

தொடர்புக்கு: satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x