Published : 15 Jul 2017 10:50 AM
Last Updated : 15 Jul 2017 10:50 AM

தொழில் ரகசியம்: கொஞ்சம் சிரிங்க பிளீஸ்

உங்களுக்கு குழந்தை இருக்கிறதா? அட்லீஸ்ட் எப்பொழுதாவது குழந்தையாக இருந்த அனுபவம் உண்டா? அதை மீண்டும் நினைத்துப் பாருங்கள்.

அப்போது கவலையின்றி மனம் விட்டு சிரிக்க நாம் தயங்கியதே இல்லை. பரிட்சையில் ஃபெயிலான போது கூட வெட்கமே இல்லாமல் சிரித்தோம். ஆசிரியர் அடித்ததை கூட பாரத ரத்னா பட்டம் போல் வாங்கிக்கொண்டோம். வாழ்க்கையில் எதையாவது சீரியசாக எடுத்துக்கொண்டோமா? அந்த ‘நாம்’ இப்பொழுது எங்கே? அந்த ‘நம்மை’ எங்கு இழந்தோம்? என்ன ஆகித் தொலைத்தது ‘நமக்கு’?

நான்கு வயது குழந்தை சராசரியாக ஒரு நாளைக்கு முன்னூறு முறை சிரிக்கிறதாம். நாற்பது வயதுக்காரர் ஒரு நாளைக்கு சிரிப்பது நான்கு முறை மட்டுமே. நாற்பது வயதானால் நாய் குணம் என்பார்கள். அதற்காக குரைத்துக்கொண்டு தான் இருக்க வேண்டுமா? சிரிக்க வேண்டாமா?

பிறந்த குழந்தை சிரிக்கிறது. சிரிக்கப் பிறந்தோம் என்பது போல் சந்தோஷமாய் சிரிக்கிறது. இதை ஏன் மறந்தோம். அதுவும் ஆபீஸ் என்றால் சீரியசாய் இருக்கவேண்டும் என்று ரூலா? தொழில் என்றால் சிரிக்கக்கூடாது என்று சட்டமா? மீட்டிங் என்றால் எழவு வீடு போல் உம்மென்று முகத்தை வைக்கவேண்டும் என்று ஐதீகமா? சந்தோஷமாய் சிரித்துக்கொண்டிருந்த நம் வாழ்க்கை சிலபஸ் எங்கு, எப்பொழுது, ஏன் மாறியது?

அமெரிக்காவில் ‘கேலப்’ நிறுவன ஆய்வில் மக்கள் வார நாட்களை விட வார முடிவில் தான் அதிகம் சிரிக்கிறார்கள் என்று கண்டுபிடித்திருக்கிறது. ஆபீஸ் என்றால் அழ வேண்டும் என்று என்ன அவசியமோ?

வாழ்க்கையை அநியாயத்திற்கு சீரியசாக எடுத்துக்கொள்கிறோம். அப்படி எடுத்து என்னத்தைக் கண்டோம். சாதித்தவர்கள் கதை படித்தால் அவர்கள் எவ்வளவு ஈசியாக, ஜாலியாக, சிரித்துக்கொண்டு வாழ்க்கையை சந்தித்திருக்கிறார்கள் என்பது புரியும். முடிந்தால் ‘Surely you are joking Dr. Feynman’ என்ற புத்தகத்தை படியுங்கள். ஃபிசிக்ஸில் நோபல் பரிசு பெற்ற ‘ரிச்சர்ட் ஃபெயின்மென்’ தன் வாழ்க்கையை அலசுகிறார். இவர் சாதனையின் ஒரு சதவீதத்தை இன்னொருவர் செய்வது சந்தேகமே. குறும்புக்கார மனிதர் என்ன அழகான வாழ்க்கை வாழ்ந்திருகிறார். அவர் வெற்றிக்கு காரணம் அவரது நகைச்சுவை உணர்வே என்பது அவர் புத்தகத்தை படித்தால் புரியும். நாமும் இருக்கிறோமே, விளக்கெண்ணெய் குடித்தது போல் முகத்தை வைத்துக்கொண்டு.

வாழ்க்கையில் வியாபாரத்தில் நகைச்சுவை உணர்வின் முக்கியத்துவம் பற்றி அமெரிக்காவில் பல ஆய்வுகள் செய்யப்படுகின்றன. பல ஆராய்ச்சி புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. நகைச்சுவையை படு சீரியசாக பார்க்கிறார்கள் அவர்கள்.

ஆபீஸில் தவழும் நகைச்சுவை உணர்வின் அளவை நிர்ணயிப்பது அங்கு உருவாக்கப்பட்டிருக்கும் கலாசாரம் என்கிறார் ‘மைக்கேல் கெர்’. ‘The Humour Advantage’ என்ற புத்தகத்தின் ஆசிரியர். எங்கெல்லாம் ஊழியர்கள் ஃப்ரீயாக விடப்பட்டு நகைச்சுவை உணர்வு மிக்கவர்களாக இருக்கிறார்களோ அங்கு புதுமைகள் பீறிட்டு அடிக்கிறதாம். ஆபீஸ் சூழல் அமைதியாக இருக்கிறதாம். ஊழியம் படு ஜோராக நடக்கிறதாம்.

ஆபீஸில் நகைச்சுவை உணர்வு நிரம்பி, ஜாலியான சூழல் ததும்பி, கலகலவென்று இருந்தால் பயன்கள் கொட்டும் என்று பல ஆராய்ச்சிகள் அறிவுறுத்துகின்றன.

பிடித்தவர்களோடு பணிபுரியவே அனைவரும் விரும்புவர். அதுவும் விழித்திருக்கும் வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆபீஸில் கழிக்கவேண்டிய தலையெழுத்து இருக்கும் போது கலகலவென்று சிரித்த முகத்தோடு, ஹாஸ்யம் ததும்பும் நபர்களோடு பழகவும், பணிபுரியவுமே அனைவரும் விரும்புவர். சிரித்து, சந்தோஷம் இருக்கும் இடம் மனிதம் வளர உதவும். ஆபீசில் அநாவசிய டென்ஷனை குறைக்கும். அனைவரும் மனம் விட்டு பேச வைக்கும். ஊழியர்களை சுய ஊக்கத்துடன் உழைக்க வைக்கும். செயல்திறனை அதிகரிக்கும்.

சரி, என் தொழிலில், ஆபீஸில் நகைச்சுவை உணர்வை எப்படி வளர்த்துக்கொள்வது என்று கேட்பவர்களுக்கு. சிரிக்க கூட சொல்லித் தரவேண்டியிருக்கிறது பாருங்கள். ஏதோ இந்த மட்டும் சிரிக்க முயல்கிறேன் என்கிறீர்களே, அதுவரை ஷேமம்.

முதல் காரியமாக நீங்களே உங்களை கிண்டல் செய்துகொள்ள பழகுங்கள். வாழைப் பழ தோல் வழுக்கி யாரேனும் விழுந்தால் சிரிக்கிறோம். நாமே விழும் போது ஏன் சிரிக்கக்கூடாது? ஒரு படத்தில் நாகேஷ் டாக்டர். அவரை பார்க்க வரும் பேஷண்ட் ‘இங்கு இரண்டாவது முறை வருகிறேன்’ என்பார். நாகேஷ் பட்டென்று ‘இருக்க முடியாதே’ என்பார்!

இது போல் நம்மை நாமே ஜாலியாக கிண்டல் செய்து சிரிக்கலாமே. இப்படி நடந்தால் ஊழியர்களுக்கு உங்களை எளிதில் பிடித்துப் போகும். ஃப்ரீயாக பயமில்லாமல் உங்களிடம் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்வார்கள். தொழிலில் அவர்கள் பங்களிப்பு அதிகரிப்பதை பார்ப்பீர்கள். நீங்களே உங்கள் அலுவலகத்தில் முன் மாதிரியாய் இருந்து பாருங்களேன். தலை ஆடும் போது வாலும் சேர்ந்து ஆடும். சிரித்துக்கொண்டே ஆடும்!

ஒவ்வொரு மீட்டிங் துவங்கும் முன்பும் ஆபீஸில் நடந்த நகைச்சுவை நிகழ்வு ஒன்றை யாராவது விவரிக்கவேண்டும் என்று கறாராக கூறுங்கள். பிறகு பாருங்கள் மீட்டிங்கே ஜமாய்க்கும். மீட்டிங்கில் யாராவது ஜோக் அடித்தால் சந்தோஷமாக சிரியுங்கள். அவரை மனம் விட்டு பாராட்டுங்கள். அனைவரும் உத்வேகத்துடன் பணிபுரிவதை பார்ப்பீர்கள். மீட்டிங் ரூம் கொஞ்சம் கலகலவென்று தான் இருந்து தொலைக்கட்டுமே. அது என்ன, எதையோ போர்த்தி கிடத்தும் ரேழியா?

‘ஐபிஎம்’ தன் ஆபிஸ் ரூம்களுக்கு தமாஷான பெயர்கள் சூட்டியிருக்கிறது. அவர்கள் மீட்டிங் ரூம் பெயர் `கஜகூகூ’. அதற்கென்ன அர்த்தம்? `இபாங் குபாங் ஜபாங்’ என்பதற்கு என்ன அர்த்தம்? அதே அர்த்தம் தான். உங்கள் ஆபீஸ் ரூம்களுக்கும் இப்படி பெயர் சூட்டு விழா வைத்தால் குறைந்தா போவீர்கள்.

நல்ல ஜோக்ஸ், மீம்ஸ் வந்தால் அதை நண்பர்களுக்கு ஃபார்வர்ட் செய்கிறீர்கள். உங்கள் ஊழியர்களுக்கும் அனுப்புங்களேன். நீங்கள் நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்று அவர்களுக்கு தெரிந்தால் குடியா மூழ்கும்? அவர்களுக்கு உங்கள் மீது இன்னமும் அன்யோன்யம் அல்லவா வளரும். வேலைக்கு ஆட்கள் எடுக்கும்போதே நகைச்சுவை உணர்வு உள்ளவரா என்று பார்த்து தேர்ந்தெடுங்கள். முசுடுகளை அருகில் சேர்க்காதீர்கள். சிரிக்கத் தெரியாதவர்கள் சீட்டை கிழித்து வீட்டிற்கு அனுப்புங்கள்.

Zifo RnD Solutions என்ற சென்னை கம்பெனி உலகின் தலைசிறந்த பன்னாட்டு ஃபார்மசூட்டிகல் நிறுவனங்களோடு சேர்ந்து பணியாற்றுபவர்கள். இவர்கள் கம்பெனியில் நகைச்சுவையை ஒரு கலாச்சாரமாகவே ஆக்கியிருக்கிறார்கள். இங்கு ஊழியர்களின் சராசரி வயது இருப்பத்தி நான்கு தான். ஊழியர்களை சிறைபடுத்தும் தடுப்புகள் இல்லாத அலுவலக வடிவமைப்பு. ஆட்டம், பாட்டம், கூத்து, ‘பிரியாணி நாள்’ கொண்டாட்டம், அரட்டையடிக்க ‘டவுன்ஹால் மீட்டிங்’ என்று ஆபீஸே தினம் களை கட்டுகிறது. இக்கம்பெனி இந்தியாவின் `டாப் 50’ சிறந்த பணியிடங்களில் ஒன்று என்கிறது ‘Best Places To Work Institute’ என்ற உலகின் தலைசிறந்த ரேட்டிங் அமைப்பு.

இப்படி சிரிக்கும் கம்பெனி சிரிப்பாய் சிரிக்கத்தான் லாயக்கு என்று தப்பு கணக்கு போடாதீர்கள். இந்தியாவில் வேகமாக வளரும் ‘டாப் 50’ தொழிற்நுட்ப கம்பெனிகளில் ஒன்று’ என்று இக்கம்பெனியை பாராட்டுகிறது ‘டிலாய்ட்’. சிரித்து, சந்தோஷத்துடன் பணி புரிவதால் ஊழியர்கள் லேசில் வேலையை விட்டு போகமாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்கிறார்கள். சிரிப்பை சீரியஸாக எடுத்துகொண்டு வேடிக்கையை ஆபீஸில் வாடிக்கை ஆக்கியிருக்கிறது Zifo RnD Solutions. இத்தனைக்கும் உயிர் காக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கும் ஃபார்மசூட்டிகல் நிறுவனங்களுக்கு உதவும் கம்பெனி இது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் கம்பெனி மட்டும் என்ன பாவம் பண்ணியது சார்?

வாழ்வது ஒரு முறை, அதை கொஞ்சம் ஜாலியாய் இருந்துவிட்டுத் தான் போவோமே!

தொடர்புக்கு: satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x