தொழில் ரகசியம்: எல்லாமே தொடர்பு கோட்பாடுதான்!

Published : 23 Jan 2016 11:10 IST
Updated : 23 Jan 2016 11:10 IST

உங்களுக்கு எப்படி என்று தெரியாது, நான் பள்ளி மாணவனாய் இருந்தபோது இறுதி பரிட்சை ரிசல்ட் பதினைந்து பைசா போஸ்ட் கார்ட்டில்தான் வரும். அதில் ‘பிரமோட்டட்’ என்றிருந்தால் போதும், என் தலையில் பஞ்சு ஒட்டிக்கொள்ளும். பூமிக்கும் வானத்திற்கும் குதித்தால் மேகம் ஒட்டாதா பின்னே. போஸ்ட்மேனுக்கு கையில் ரெண்டோ, ஐந்தோ பண பட்டுவாடா பண்ணப்படும். படித்தது நான், பாஸானது பெற்றோர் புண்ணியத்தில். ஆனால் செய்தி சொன்னது அவரல்லவா.

ரிசல்ட்டை போஸ்ட்மேன் வழியில் படித்துவிடுவார். ‘பிரமோடட்’ என்றிருந்தால் காலிங் பெல்லடித்து கையில் கொடுப்பார். ஸ்வீட், சில்லறை கிடைக்கும் என்ற ஆசையில். ‘ஃபெயில்’ என்று இருந்தால் கார்ட் தரவேண்டிய தெரு பக்கமே வரமாட்டார். வந்தாலும் மூன்று வீடு தள்ளி போட்டு திரும்பி பார்க்காமல் ஓடுவார். இல்லை பால்காரன், பிளாஸ்டிக் சாமான் விற்பவர் மூலம் கொடுத்தனுப்புவார். சரமாரியாய் வசவும், சமயத்தில் தர்மடியும் கிடைக்கும் என்ற பயத்தில்!

நல்ல செய்தியை கொண்டு வருபவர் மீது வாஞ்ஞை வருவதும் கெட்ட செய்தியை தருபவர் மீது வெறுப்பு வருவதும் மனித இயற்கை. கெட்ட செய்திக்கு அதை கொண்டு வருபவர் காரணம் இல்லையென்றாலும் அவர் மீது வெறுப்பு வரும். இதை ’தொடர்பு கோட்பாடு’ (Association Principle) என்கிறார்கள். ‘கெட்ட செய்தியின் சுபாவம் அதை கொண்டு வருபவரை பீடிக்கும்’ என்றார் ‘ஷேக்ஸ்பியர்’.

ஒரு விஷயத்தோடு தொடர்புள்ள அனைத்தையும் அந்த விஷயத்தின் தன்மையோடு பார்க்கிறோம். ஒன்றோடு சேர்ந்திருக்கும் எதையும் அதோடு சேர்த்தே பார்க்கிறோம். அதன் குணாதிசயங்கள் ஒன்றாகத் இருக்கும் என்று நினைக்கிறோம். வானிலை அறிப்பாளர்களைக் கேளுங்கள், ஒரு பாடு புலம்புவார்கள். ஏதோ அவர்கள் சொல்லி வெள்ளம் வந்தது போல், அவர் மனசு வைக்காததால் வெயில் கொளுத்துவது போல் மக்களுக்கு அவர்கள் மீது அசாத்திய கோபம் வரும்.

‘டாம் பானர்’ என்பவர் அமெரிக்காவில் லிட்டில் ராக் என்ற ஊரின் தொலைக்காட்சி வானிலை அறிவிப்பாளர். ஒரு முறை பாரில் குடித்துக் கொண்டிருந்த அவரிடம் ஒரு விவசாயி ‘நீ தானே வெதர் ஃபோர்காஸ்ட் பண்றவன். போன வாரம் சூறாவளி அனுப்பி என் வீட்டை காலி பண்ணிட்டியேடா. உன்ன என்ன செய்யறேன் பாரு’ என்று நெருங்க பானருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. முள்ளை முள்ளால் எடுப்போம் என்று கூலாக தன் இடுப்பில் கை வைத்து ரஜினிகாந்த் ஸ்டைலில் ‘கண்ணா, சூறாவளி அனுப்பினேன். இப்ப நீ நகரலன்னா இன்னொரு சூறாவளி அனுப்பி உன்ன சுத்தி சுத்தி அடிப்பேன்’ என்று கூற வந்தவன் விழுந்தடித்து ஓடியிருக்கிறான்!

இது ஏதோ இன்று நேற்று நடக்கும் விஷயமல்ல. அந்தக் காலத்தில் போரில் நடக்கும் விஷயத்தை தெரிந்துகொள்ள நேரடி ஒளிபரப்பா இருந்தது? போர் வீரன் ஓடி வந்து ஊரில் சொல்லவேண்டும். நல்ல செய்தி என்றால் அவனுக்கு பவழம் பரிசு தந்து முத்து மாலை போடுவார்கள். செய்தி சரியில்லையென்றால் பாடையில் படுக்க வைத்து மலர் வளையம் வைக்கும் அளவிற்கு அடிப்பார்கள்.

காரும் பெண்ணும்

கார் விளம்பரத்தில் பெண் நிற்பது எதற்கு என்று நினைத்தீர்கள்? கார் வாங்கினால் பெண் இலவசம் என்பதற்கா? எல்லாம் தொடர்பு கோட்பாடு தான். அட அந்த தொடர்பை சொல்லவில்லை சார், நீங்க வேற!

அழகான பெண் அருகில் நின்றால் அவள் அழகின் தொடர்பு காரை நாம் பார்க்கும் விதத்தை பாதிக்கும் என்பதால். அவளோடு சேர்ந்து காரும் நமக்கு கவர்ச்சியாய் தெரியும் என்பதால். பிராண்ட் அருகில் பெண்ணை நிறுத்தி ஒரு தொடர்பை ஏற்படுத்திவிட்டால் போதும். தொடர்பு லாஜிகலாக இருக்கவேண்டிய அவசியமில்லை. பாசிடிவ்வாக இருந்தாலே போதுமானது. சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்களை விளம்பரங்களில் உபயோகிக்க இந்த கோட்பாடும் ஒரு காரணம்.

பிராண்டை விடுங்கள். பாலிடிக்ஸில் கூட இக்கோட்பாடு பலே பயன்கள் தரும். அல்ப அரசியல்வாதிகள் கூட அயல்நாட்டு தலைவர்கள், ஐநா சபை உறுப்பினர்களை ஏதாவது ஒரு ஜூஜூபி காரணத்திற்கு சந்திப்பார்கள். சந்தித்தது பத்தாதென்று அதை ஃபோட்டோ பிடித்து ஊர் சுவரெல்லாம் போஸ்டர்களில் அவர்களோடு சேர்ந்து நின்று சிரிப்பாய் சிரிப்பார்கள். எதனால் இந்த கன்றாவி என்று நினைத்தீர்கள்?

`சீமை துரையெல்லாம் நம்ம தலைவருக்கு பிரெண்ட் பா. நம்மாளு உலக மகா தலைவர்’ என்று மக்கள் நினைப்பார்களே என்ற நப்பாசைதான்.

கெட்டவை, நல்லவையோடு தொடர்பு கொள்ளும்போது மற்றவர் பார்க்கும் விதம் மாறுகிறது. ‘சதா லுங்கியோடு திரியற அந்த பையனோட சேராதடா’ என்று அம்மா சிறு வயதில் கூறியது இதனாலேயே. ஒருவன் கெட்டவனாக இருந்தால் அவனோடு இருப்பவனும் கெட்டவனே என்ற ஊர் நம்பும் தொடர்பு கோட்பாடே இதற்கு காரணம்.

ரஷ்ய நாட்டு விஞ்ஞானி `இவான் பாவ்லோவ்’ செய்து காட்டியதும் தொடர்பு கோட்பாடு தான். தினமும் நாய்க்கு உணவளிக்கும் முன் மணி அடிப்பார் பாவ்லோவ். சில நாளுக்குப் பின் மணியடித்தாலே நாய்க்கு வாயில் எச்சில் ஊற ஆரம்பித்தது. உணவென்றால் நாய்க்கு எச்சில் ஊறும் தன்மையை உணவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத மணி ஓசையோடு தொடர்பு ஏற்படுத்த முடியும் என்று விளக்கினார். இதற்கு ‘பாவ்லோவியன் ரெஸ்பான்ஸ்’ (Pavlovian response) என்று பெயர்.

தொடர்பு கோட்பாட்டின் இன்னொரு பரிமாணத்தை கிரிக்கெட் மாட்சுகளில் பார்க்க முடியும். இந்தியா அணி எப்போவாது தப்பித் தவறி வெற்றி பெற்றால் ரசிகர்களுக்கு கை கால் கொள்ளாது. ‘ஜெயிச்சுட்டோம்டா’, ‘பின்னிட்டோமில்ல’ என்று புளகாங்கிதம் அடைவார்கள். ஏதோ இவர்கள்தான் நாள் முழுவதும் வெயிலில் நின்று பௌளிங் போட்டு, பீல்டிங் செய்து, பாட்டிங் ஆடி வெற்றி பெற்றது போல.

இந்திய அணி தோற்றால் ‘கேவலமா ஆடினாங்கடா’, ‘அசிங்கமா தோத்துட்டாங்க’ என்பார்கள். வெற்றி பெற்ற போது சேர்ந்து ஆடியது போலவும் தோற்றால் தாங்கள் ஆடாமல் இந்திய அணி ஆடி தோற்றது போலவும். இதுவும் சாட்சாத் தொடர்பு கோட்பாட்டின் கைங்கர்யம்தான்.

வெற்றி பெற்றவர்களோடு தொடர்பு கொள்ள விரும்புகிறோம். அந்த வெற்றியை நம் வெற்றியாய் பாவிக்கிறோம். தோல்வி அடைபவர்கள் தொடர்பை துண்டிக்கிறோம். நமக்கும் அந்த தோல்விக்கும் சம்பந்தமே இல்லை போல் விலகுகிறோம். வெற்றி பெற்றால் ‘நாம்’. தோல்வியடைந்தால் ‘நீ’.

பவுலிங் போடாமல், காட்ச் பிடிக்காமல், பேட்டை தொடாமல், மாட்சை ஆடாமல் அணியின் வெற்றியில் தங்களுக்கு பங்கிருப்பது போல் ரசிகர்கள் நடந்து கொள்வது சரியா? உளவியல் சாட்சிகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறதே.

போஸ்ட்மென் பாஸாக்கவில்லை. செய்தி சொன்ன வீரன் தோல்வியை தரவில்லை. வானிலை அறிவிப்பாளர் சூறாவளியை உருவாக்கவில்லை. பாவ்லோவின் மணி உணவை பரிமாறவில்லை. ஆனால் அவைகளிடத்தில் ஒரு தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்பே போதுமானது.

கிரிக்கெட் மாட்ச் முடிந்து அதை அலசும் போது ஒரு தமாஷ் நடப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இந்தியா தோற்கும் போது ‘ஈசியா நாம ஜெயிச்சுருக்கலாம். கடைசி ஓவர்ல அவனுங்க சொதப்பிட்டாங்க’ என்று பலர் கூற கேட்டிருப்பீர்கள். ‘நாம்’ என்று ஆரம்பித்து ’அவனுங்க’ என்று முடிவதை பாருங்கள்.

சிரிக்காதீர்கள். நீங்களும் இப்படி தான் பேசுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். சரி சார், நானும் தான். அதற்கென்ன இப்போ!

satheeshkrishnamurthy@gmail.com

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor