Published : 08 Nov 2016 07:12 PM
Last Updated : 08 Nov 2016 07:12 PM

தொழில் முன்னோடிகள்: வில் கெய்த் கெல்லாக் (1860 - 1951)

நாம் செய்யக்கூடிய மிகச் சிறந்த சேவை, சின்னக் குழந்தைகளுக்குச் சந்தோஷமும், ஆரோக்கியமும் தந்து அவர்களை நாளைய உலகின் நம்பிக்கை நட்சத்திரங்களாக்குவதுதான்.

- வில் கெய்த் கெல்லாக்

46 வயதுவரை ஒவ்வொரு நாளும், சொந்த ரத்தம் தரும் அவமானங்கள், தோல்விகள், சோகங்கள், நெஞ்சு நிறைய ரணங்கள். இப்படிப்பட்ட ஒரு மனிதரின் வாழ்க்கை, 160 நாடுகளில் கோடிக்கணக்கானோர் தினமும் உச்சரிக்கும் வெற்றிக் கதையாக முடியுமா?

நிச்சயம் முடியும்.

உங்கள் வேலையில் தப்பு செய்துவிட்டீர்கள். கண்டிப்பான முதலாளி. என்ன நடக்கும்? வேலை போகும்.

பதில்: இல்லை, இல்லை. அந்தத் தப்பை ஆதாரமாக வைத்து ஒரு புது தொழில் ஆரம்பமாகும். நூறு வருடங்களுக்கும் அதிகமாக ஆலமரம்போல் வளரும். உலகின் எல்லா நாட்டுக் குழந்தைகளும் விரும்பும் உணவு வகைகளைத் தயாரிக்கும், 90,000 கோடி ரூபாய் விற்பனையைத் தொடும்.

நம்ப முடியவில்லையா? நீங்கள் நம்பித் தான் ஆகவேண்டும். ஏன் தெரியுமா? இதைச் சொல்பவர், சொன்னதைச் செய்துகாட்டிய வர். குழந்தைகள் ரசித்துச் சாப்பிடும் காலை உணவான

கெல்லாக்ஸ் சீரியல்ஸ்

நிறுவ னத்தை 1906 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கிய வில் கெய்த் கெல்லாக்.

அமெரிக்காவின் மிச்சிகன் நகரம். பிராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ மதத்தின் பிரிவான செவன்த் டே அட்வென்ட்டிஸ்ட்ஸ் வாழும் மையப்பகுதியாக இருந்தது. இவர்களுடைய முக்கிய நம்பிக்கை, வாரத்தின் ஏழாம் நாளான சனிக்கிழமையன்று ஏசுநாதர் மறுபடியும் உயிர்த்தெழுந்து வருவார். இதனால், ஞாயிறுக்கு பதிலாக சனிக்கிழமைகளில் சர்ச்சுகளுக்கு போனார்கள். ஆண்டவனை அடைய, உடல் ஆரோக்கியம் அத்தியாவசியம் என்று நம்பினார்கள். சத்தான உணவுகளை மட்டுமே சாப்பிட்டார்கள். மது, மாமிசம், புகையிலை தவிர்த்தார்கள்.

இப்படிப்பட்ட ``ஆச்சார” வாழ்க்கை நடத்தினார் ஜான் பிரெஸ்ட்டன் கெல்லாக். 1860 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி, இவருக்கு ஆண் குழந்தை வில் கெல்லாக் பிறந்தான். ``நான் என் அப்பாவுக்கு ஏழாவது குழந்தை. மாதத்தின் ஏழாம் தேதியில், வாரத்தின் ஏழாம் நாளான சனிக்கிழமை பிறந்தேன். என் குடும்பப் பெயரான Kellogg என்பதிலும் ஏழு எழுத்துகள்.” இதனால், வில் கெல்லாக்கிற்கு எண் ஜோதிடத்தில் அபார (மூட) நம்பிக்கை. பயணம் போகும்போதெல்லாம், ஹோட்டல்களின் ஏழாம் மாடியில், 7 என்று வரும் எண் கொண்ட அறைகளில் மட்டுமே தங்குவார். கார் நம்பர் பிளேட்களில் எண் 7 இருந்தேயாகவேண்டும்.

அப்பா துடைப்பங்கள் தயாரித்து விற்பனை செய்தார். மூத்த மகன் ஜான் படித்து டாக்டரானார். வில் கெல்லாக் பிறந்தபோது, அப்பாவின் துடைப்ப தொழில் படுத்துவிட்டது. இந்த வருமானம் போதாமல், வீட்டில் தோட்டம் போட்டு காய்கறிகள், பழங்கள் பயிரிட்டார், அதிகாலையிலேயே, சிறுவர்கள் படையை எழுப்பிவிடுவார். நாள் முழுக்கத் தோட்ட வேலை. “விளையாட்டு என்றால் என்னவென்றே தெரியாத சிறுவனாக வளர்ந்தேன்.”

அப்பா, இரண்டாம் மகன் படிப்பை ஆறாம் வகுப்போடு நிறுத்தினார். அவருடைய துடைப்பத் “தொழிற்சாலை”யில் வேலை. சில வருடங்கள் இப்படி ஓடின. அப்பாவுக்கோ தொழிலைத் தொடர்ந்து நடத்தப் பணமில்லாமல் கடையை மூடினார். இன்னொரு துடைப்ப நிறுவனத்தில் விற்பனையாளராக வேலைக்குச் சேர்ந்தான்.

ஆறு வருடங்கள் இப்படியே துடைப்பத்தைச் சுற்றிச் சுழன்றன. செலவுக்கு மட்டுமே போதுமான சம்பளம். காதலுக்குக் காசுத் தட்டுப்பாடு தெரியுமா? காதலில் விழுந்தார். 1879 இல், திருமணம் செய்துகொண்டார். 1880 இல் முதல் குழந்தை பிறந்தது. கடன் வாங்கிக் குடும்பம் நடத்தினார். ஆனால் வேலை பார்த்த துடைப்ப நிறுவனம் எப்போதும் மூடலாம் என்கிற நிலையில் இருந்தது.

அண்ணன் ஜானின் மருத்துவமனை சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்தது. அவருக்கு நம்பிக்கையான உதவியாளர் தேவைப்பட்டார். நோயாளிகளுக்குச் சமைப்பது, உணவு கொடுப்பது, அவர்களின் மருத்துவம் தவிர்த்த பிற தேவைகளை பூர்த்திசெய்வது, கணக்கு வழக்கு எனச் “சகலகலாவல்லவன்” வேலை. தம்பியை அழைத்தார். வேலை தந்தார். இதற்குக் காரணம் பாசமல்ல. இலவச சாப்பாடு, தங்கும் அறை ஆகியவற்றோடு வாரம் வெறும் ஆறு டாலர் மட்டுமே சம்பளம். இதற்கு இரவு, பகல் மாடாய் உழைக்க வேறு ஆள் கிடைக்கவில்லை. மருத்துவமனை தவிரச் சில பொறுப்புகளும் தந்தார் அண்ணனுக்குத் தினமும் ஷேவ் செய்துவிட வேண்டும், அவர் ஷுக்களுக்குப் பாலிஷ் போடவேண்டும். தப்பு ஏதாவது செய்துவிட்டால், அண்ணனின் பிரம்படியும் அடிக்கடி கிடைக்கும்.

வில் தினமும் 15 மணிநேரம் ஓடாய்த் தேய்ந்தார். இதற்குள், 1894 இல் 5 குழந்தைகள். வீட்டுக்காரர், மளிகைக்காரர், காய்கறிக்காரர் எல்லோரிடமும் கடன், கடன். இப்படியே, இயந்திரத்தனமாக வருடங்கள் ஓடின. 1906 ஆம் வருடம். வில் கெல்லாக் வயது 46. ’’ஏழையாகப் பிறந்து ஏழையாக வாழ்ந்து, ஏழையாகவே செத்துவிடப் போகிறோம்”, என்ன இந்த வாழ்க்கை என்று விரக்தி வந்துவிட்டது. ஆனால், மூட நம்பிக்கை ஒரு சின்ன வெளிச்சம் போட்டது. 1906 ஆம் ஆண்டின் 1, 9, 0, 6 ஆகிய எண்களைக் கூட்டினால் 7 வரும். 7 தனக்கு அதிர்ஷ்ட நம்பர். ஆகவே, ஏதாவது நல்லது நடக்குமோ? அதே சமயம், இப்படி 1879, 1888, 1897 என்று எத்தனையோ கூட்டுத்தொகை 7 வரும் ஆண்டுகளைப் பார்த்துவிட்டோம், வாழ்வே இனி இருள்மயம்தான் என்று மனம் அவநம்பிக்கைப் படுகுழியில் விழுந்தது.

தள்ளாடும் மனங்கள் தவறுகள் செய்யும். மருத்துவமனையின் நோயாளிகளுக்கு இரவு உணவான கோதுமைக் கஞ்சி தயாரித்துக்கொண்டிருந்தார். மிஞ்சிய கஞ்சியை மறதியால் வெளியே திறந்துவைத்துவிட்டார். அதிகாலை விழித்தார். செய்த தப்பு நினைவுக்கு வந்தது. அடுக்களைக்கு ஓடினார். சாப்பாடு வேஸ்ட் ஆனது தெரிந்தால் அண்ணன் தோலை உரிப்பார்.

அந்த ஊரில் குளிர் அதிகம். ஆகவே, கஞ்சி புளிக்கவில்லை, கெடவில்லை. ஆனால், அதிசயமாகக் கோதுமை தானியங்கள் ஒவ்வொன்றும் விறைப்பாக நின்றன. டேஸ்ட் பண்ணிப் பார்த்தார். தனிச்சுவையோடு இருப்பதுபோல் பிரமை. அண்ணனிடம் சொல்ல பயம். பழைய கஞ்சியையே நோயாளிகளுக்குத் தந்தார். ரசித்துச் சாப்பிட்டார்கள். இந்தச் சுவையில்தான் இனி கஞ்சி வேண்டும் என்று அடம் பிடித்தார்கள். வேறு வழியில்லாத வில், அண்ணனிடம் நடந்ததைச் சொன்னார். முதலில் கோபத்தில் குதித்த அண்ணன் பழைய கஞ்சியைக் குடித்துப் பார்த்தார். அவருக்கும் ருசி பிடித்தது. ”தப்பான” வழியிலேயே இனிக் கஞ்சி பண்ணவேண்டும் என்று கட்டளையிட்டார்.

நோயாளிகள் மருத்துவமனையைவிட்டு வீடுகளுக்குத் திரும்பிய பிறகும், வில் செய்முறைக் கஞ்சியைக் கேட்டார்கள். வில் உலரவைத்த கஞ்சி கண்டுபிடித்தார். ஜான் இதற்காகவே தனி நிறுவனம் தொடங்கினார். தம்பிக்கு லாபத்தில் 30 சதவீதப் பங்கு கொடுத்தார். சிறிய தொழிற்சாலை தொடங்கினார்கள். வாழ்க்கையில் வசந்தத்தின் ஆரம்பம். கஞ்சியின் புகழ் ஊரெங்கும் பரவியது. ஓரிரு வருடங்களில், உள்ளூரிலேயே 42 போட்டியாளர்கள். அடிமாட்டு விலைக்கு விற்கத் தொடங்கினார்கள். வில் கம்பெனியின் லாபம் சரிந்தது. என்ன செய்யலாம் என்று சிந்தித்தார். அமெரிக்காவில் மக்காச்சோளம் முக்கிய பயிர். உலரவைத்த மக்காச்சோளக்கஞ்சி தயாரித்தார். போட்டியாளர்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் வசப்படவில்லை. விரைவிலேயே காணாமல் போனார்கள்.

தரமான, ருசியான தயாரிப்புகள் மட்டும் போதாது, விளம்பரம் மிக முக்கியம் என்று 1900 களிலேயே உணர்ந்து செயல்படுத்தினார். எக்கச்செக்க விளம்பரங்கள் கெல்லாக் சீரியல்களை, அமெரிக்கர்களின் அன்றாட அத்தியாவசிய உணவாக்கின. இலவச சாம்பிள்கள் கொடுத்து வாடிக்கையாளர்களைத் தூண்டிலில் மாட்டவைக்கும் மார்க்கெட்டிங் யுக்தியைப் பிரபலமாக்கியவர் வில் கெல்லாக்தான்.

மிக மிகச் சிரமப்பட்டுச் செல்வம் சேர்த்த வில் கெல்லாக் சொன்னார், ``பணம் சேர்ப்பது மிகச் சுலபம். அதைப் புத்திசாலித்தனமாகச் செலவிடுவதுதான் மிகச் சிரமம்.” 91 ஆம் வயதில் மரணமடைந்த அவர் சேமிப்பு, செலவிடுவது இரண்டிலுமே கில்லாடி. அவர் நிறுவிய அறக்கட்டளை உலகக் குழந்தைகள் நலனுக்காக, ஆண்டுதோறும் சுமார் 1,400 கோடி செலவிடுகிறது.

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x