தொழில் முன்னோடிகள்: மாத்யூ போல்டன் (1728 1809)

Published : 21 Jun 2016 09:59 IST
Updated : 14 Jun 2017 13:29 IST

பதினெட்டாம் நூற்றாண்டின் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு, மனித இனம் அதுவரை பத்தாயிரம் ஆண்டுகளாக கண்டிராத மாற்றத்தை, முன்னேற்றத்தை கொண்டு வந்தது. அந்த புதுமை ஜேம்ஸ் வாட் கண்டுபிடித்த, மாத்யூ போல்டன் தயாரித்த நீராவி இயந்திரம்.

- வில்லியம் ரோஸென், அறிவியல் எழுத்தாளர்.

அமாவாசை ராத்திரி. கரண்ட் கட். எங்கும் நிசப்தம். பக்கத்து ஜங்ஷன் மணிக்கூண்டுக் கடிகாரம் பன்னிரெண்டு அடித்து அமைதியைச் சில விநாடி களுக்குக் கலைக்கிறது. காஞ்சனா-3 பிசாசு புளியமர உச்சியிலிருந்து இ-ற-ங்-கி வருகிறது. ஏதோ அப்ரகடப்ரா உச்சரிக்கிறது. இன்டர்நெட், இணைய தளம், ஈ மெயில், மொபைல் ஃபோன் உலகத்திலிருந்து காணாமல் போச்.....

ஐயோ, ஐயோ, என்ன செய்வீர்கள்? இன்டர்நெட், இணையதளம், ஈ மெயில், மொபைல் ஃபோன் இல்லாத வாழ்க்கையைக் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியவில்லையா? 1980 களுக்கு முன்னால் நம் அம்மா, அப்பாக்கள் இவை ஒன்றுமே இல்லாத வாழ்க்கைதான் நடத்தினர்கள் ப்ரோ.

இந்த மாற்றங்களைத் தகவல் செய்தித் துறைகளின் புரட்சிக்காலம் அல்லது அறிவுப் புரட்சிக் காலம் என்று அழைக்கிறார்கள். இது இருபதாம் நூற்றாண்டின் மாற்றம். 1760 முதல் 1840 வரையிலான காலகட்டத்திலும் இப்படியொரு புரட்சி நடந்தது. அது தொழில் புரட்சி (Industrial Revolution) என்று அழைக்கப்படுகிறது.

வரலாற்றின் ஆரம்ப காலங்களில், தொழில் உற்பத்தியில் இயந்திரங்களை இயக்கும் சக்திகளாக மனிதர்கள், குதிரைகள், மாடுகள் உழைப்பு ஆகியவைதாம் பயன்பட்டன. இதனால், அனைத்துமே சிறிய குடிசைத் தொழில்களாக மட்டுமே இருந்தன. 1755 இல், ஜேம்ஸ் வாட் வடிவமைத்த நீராவி இயந்திரம்தான் மனித சக்தியையும், மற்ற மிருக சக்திகளையும் தாண்டிய நீராவி சக்தியை உலகத்துக்குக் காட்டி யது. குறைந்த மனிதர்கள், நிறைந்த இயந்திரங்கள் கொண்ட பிரம்மாண்டத் தொழிற்சாலைகள் உருவாகின. இந்த மாற்றம்தான் தொழிற் புரட்சி. இதற்கு வித்திட்ட ஜேம்ஸ் வாட்தான் தொழிற்புரட்சியின் தந்தை என்று நாம் போற்றிக் கொண்டாடுகிறோம்.

ஜேம்ஸ் வாட் வெற்றிக்கு மூன்று முக்கிய காரணங்கள் அவருடைய அறிவியல் மூளை, கண்டுபிடிப்புத் திறமை, மாத்யூ போல்டன் என்னும் தொழில் அதிபர் தந்த பக்கபலம்.

யார் இந்த மாத்யூ போல்டன்?

1728 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரத்தில் பிறந்தார். அவருடைய அப்பா வெள்ளி சாமான்கள் தயாரிக்கும் சின்னப் பட்டறை வைத்திருந்தார். பொம்மைகள், மூக்குப் பொடி டப்பாக்கள், ஜாதிக்காய் உடைக்கும் கருவிகள் தயாரித்தார். மாத்யூ உள்ளூர் பள்ளிக்கூடத்தில் கல்வி கற்றார். விஞ்ஞானத்திலும், கணிதத்திலும் அபாரத் திறமை காட்டினார். ஆனால், ஆங்கிலப் பாடம் அவருக்குக் கசந்தது. அதுவும், எழுதத் தொடங்கினால், பிழைகளோ பிழைகள். தன் 14 ஆம் வயதில் படிப்புக்குக் குட்பை சொல்லிவிட்டு அப்பாவின் பட்டறையில் உதவியாளராகச் சேர்ந்தார். புதிய புதிய பொருட்களைத் தயாரிக்கவேண்டும் என்னும் தேடல், துடிப்பு.

மாத்யூவுக்கு வயது 21. அப்பா தன் தொழிலில் மகனைப் பங்குதாரராகச் சேர்த்துக்கொண்டார். ஒரு பணக்கார வியாபாரியின் மகளை மகனுக்குத் திருமணம் செய்துவைத்தார். பத்து வருடங்கள் இப்படியே ஓடின. அப்பா மரணமடைந்தார். தொழில் மொத்தமும் மாத்யூ கைக்கு வந்தது. தொழிலை விரிவாக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கினார்.

மாத்யூ பிரம்மாண்டக் கனவுகள் காண்பவர். தன் கனவுகளை நனவாக்கக் கொஞ்சமும் தயங்காமல் ரிஸ்க் எடுத்துச் செயலில் இறங்குபவர். அவரிடம் அப்போது சேமிப்பாக 1400 பவுண்ட் இருந்தது. (இன்றைய மதிப்பில் சுமார் 1,31,600 ரூபாய்.) அன்றைக்கு மிகப் பெரிய பணம். அதுவும், மாத்யூவின் முழுச் சேமிப்பு. அத்தனை பணத்தையும் தொழிலிலேயே முதலீடு செய்ய முடிவெடுத்தார். ``பேராசைக்காரன். அகலக்கால் வைக்கிறான்” என்று பலர் கேலி செய்தார்கள். தன் இலக்கில், போகும் பாதையில் தெளிவாக இருந்த மாத்யூ மனதில் கொஞ்சமும் சலனம் இல்லை. உறுதியோடு தொடர்ந்தார்.

13 ஏக்கர் நிலம் வாங்கினார். அங்கே, Soho Manufactory என்னும் தொழிற்சாலை தொடங்கினார். தன் முயற்சி கனகச்சிதமாக இருக்கவேண் டும் என்பதற்காக, ஒவ்வொரு சிறு அம்சத்திலும் சிரத்தை காட்டினார். அடுக்களை சாமான்கள், சாப்பாட்டுத் தட்டுகள், கத்தி, கரண்டி, நாணயங்கள், மெடல்கள் ஆகிய வெள்ளித் தயாரிப்பு களை அறிமுகம் செய்தார். இவற்றை வடிவமைக்கும் டிசைன் வல்லுநர்களைப் பணிக்கு எடுத்துக்கொண்டார். இவர் களின் கற்பனை சிறகடித்துப் பறக்க, ஊக்கமும், வசதிகளும் அளித்தார்.

அன்றைய காலகட்டத்தில் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். அடிப்படை வசதிகளே இல்லாத தொழிற்சாலைகள், குறைந்த சம்பளம், கணக்கே இல்லாத வேலை நேரம், இலக்கை எட்டாவிட்டால் தண்டனை, காரணமே இல்லாத வேலை நீக்கம், அடிமைகளைவிடக் கேவலமாக நடத்தப்பட்டார்கள். மாத்யூ கொண்டுவந்தார் புரட்சிகர மாற்றம் சுத்தமும், சுகாதாரமுமான தொழிற்சாலை, வேலை பார்க்க வசதியான லைட்டிங், திறமைக்கும், உழைப்புக்கும் மரியாதை, 12 வயதுக்கும் அதிகமானவர்களுக்கு மட்டுமே வேலை, காப்பீடு மூலமாகக் காயம்பட்ட ஊழியர்களுக்கு இலவச மருத்துவ வசதி.

தன் நிறுவனம் வேகமாக வளர்ச்சி காணவேண்டுமானால், இங்கிலாந்தில் மட்டும் விற்பனை செய்தால் போதாது என்று உணர்ந்த மாத்யூ விற்பனைப் பிரதிநிதிகளை நியமித்தார். இவர்கள் ஐரோப்பாவின் பல நாடுகளுக்கு அடிக்கடி சுற்றுப் பயணம் செய்தார்கள். ஆர்டர்கள் வாங்கி வந்தார்கள். புதிய தயாரிப்புப் பொருட்கள், கனகச்சிதமான தரம், நியாய விலை, மார்க்கெட்டிங் யுக்திகள், Soho Manufactory 1000 பேர் பணி புரியும் பிரம்மாண்டக் கம்பெனியாகக் கிடுகிடுவென வளர்ந்தது.

ஆனால் மாத்யூவுக்குத் திருப்தி வரவில்லை. தன் கம்பெனியை இன்னும், இன்னும் உச்சத்துக்குக் கொண்டுபோகவேண்டும் என்னும் பசி, அகோரப் பசி. இந்தப் பசியைத் தீர்க்கும் வாய்ப்பு ஜேம்ஸ் வாட் வடிவில் வந்தது. நீராவி சக்தியால் இயங்கும் இயந்திரங்கள் நிலக்கரிச் சுரங்கங்களில் தண்ணீர் இறைக்கப் பயன்பட்டன. ஜேம்ஸ் வாட் என்னும் இளைஞர் இந்த நீராவி இன்ஜின்களில் சில வடிவமைப்பு மாற்றங்கள் செய்தார். செயல்திறன் ஆறு மடங்கு அதிகமானது. சுரங்கங்கள் தன் இன்ஜின்களை அள்ளிக்கொண்டு போவார்கள் என்று வாட் நினைத்தார். அதற்குக் காப்புரிமை வாங்கவேண்டும், சில இன்ஜின்களைத் தயாரித்துச் சுரங்கங்களில் பரிசோதனை ஓட்டங்கள் நடத்தித் தன் இயந்திரத்தின் சிறப்பை நிரூபிக்கவேண்டும் என்னும் நிதர்சனம் புரிந்தது. ஆனால், அதற்குத் தேவையான பணம் அவரிடம் இருக்கவில்லை.

வெறும் கையால் எப்படி முழம் போடுவது? இரும்புப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்திய டாக்டர் ரோபக் முன்வந்தார். ஆறு வருடங்களில் ஜேம்ஸ் வாட்டுக்கு நீராவி இயந்திரத்துக்கான காப்புரிமை கிடைத்தது. ஆனால், ஒரு சோகம். பணத்தைத் தண்ணீராகச் செலவழித்த டாக்டர் ரோபக் திவாலாகிவிட்டார். அவர் மாத்யூவிடம் 1,200 பவுண்ட்கள் கடன் வாங்கியிருந்தார். இதற்கு ஈடாக, நீராவி இயந்திர நிறுவனத்தின் பங்குகளை மாத்யூவிடம் தந்தார்.

நீராவி இயந்திரம் ஜெயிக்கும் குதிரை என்று மாத்யூ மனக்குறளி சொன்னது. போல்டன் அண்ட் வாட் என்னும் பெயரில் ஜேம்ஸ் வாட்டோடு சேர்ந்து பார்ட்னர்ஷிப் கம்பெனி தொடங்கினார். ஏராளமான முதலீட்டில் உற்பத்தி ஆரம்பம். வடிவமைப்பு, உற்பத்தி ஆகியவற்றை ஜேம்ஸ் வாட், மார்க்கெட்டிங், முதலீடு ஆகியவற்றை மாத்யூ பார்த்துக்கொண்டார்கள். எரிசக்தியில் ஏற்படும் சேமிப்பைச் சுரங்க அதிபர்கள் உணர்ந்தார்கள். ஆர்டர்கள் கொட்டின.

ஒரு நாள், மாத்யூ மூளையில் மின்வெட்டு இங்கிலாந்தில் நெசவு ஆலைகள் அதிகம். அவர்கள் உற்பத் திக்கு அதிகச் சக்தி தேவை. அவர் களைப் புதிய நீராவி இயந்திரம் வாங்க வைத்தால்.....இந்த யுக்தி பலித்தது. வாங்கினார்கள். அடுத்து, பல்வேறு நாடு களுக்கு நாணயங்கள் செய்து தரும் பிசினஸ் தொடங்கினார்கள். மாத்யூ ஜேம்ஸ் வாட் கம்பெனிக்குப் பொன்மகள் வந்தாள், பொருள் கோடி தந்தாள்.

1800 - ஆம் ஆண்டில், தங்கள் கனவுகளை நிஜமாக்கிவிட்ட ஆத்ம திருப்தியோடு மாத்யூ, ஜேம்ஸ் வாட் இருவரும் நிர்வாகப் பொறுப்பைத் தங்கள் மகன்களிடம் ஒப்படைத்தார்கள், ஓய்வு பெற்றார்கள். அடுத்த 9 ஆண்டுகள் குடும்பத்தோடு நிம்மதியான வாழ்க்கை. மாத்யூ மறைந்தார். அவர் கல்லறையில் பொறிக்கப்பட்ட ஒரு வாசகம்;

பிறர் திறமைகளை அடையாளம் கண்டவர்.

இந்த ஒரு குணம் மட்டும் இருந்தால் போதும். தொழிலில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலும் வெற்றி தேடிவரும்.

கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்

* பிரம்மாண்டக் கனவுகள் கண்டு அவற்றைச் செயலாக்குதல்

* ரிஸ்க் எடுக்கும் குணம்

* ஜெயிக்கும் தயாரிப்புப் பொருட்களை அடையாளம் காணும் உள்ளுணர்வு

* தயாரிப்புப் பொருட்களுக்குப் புதுப் புது மார்க்கெட்களைக் கண்டுபிடிக்கும் தேடல்

* தொழில் வெற்றிக்குப் பணம் மட்டும் போதாது, ஊழியர்களின் திறமை, அர்ப்பணிப்பு, உழைப்பு ஆகியவை தேவை என்று உணர்ந்து அவர்களுக்குத் தந்த மதிப்பு

slvmoorthy@gmail.com

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor