தொழில் முன்னோடிகள்: ஜி. டி. பிர்லா (1894 - 1983)

Published : 20 Dec 2016 10:48 IST
Updated : 20 Dec 2016 10:48 IST

கழுகுகள்போல் வானில் உயரப் பறக்கவேண்டுமா? வான்கோழிகளுடன் நேரத்தை வீணாகச் செலவிடாதீர்கள். - ஜி. டி. பிர்லா

’அன்புள்ள கன்ஷ்யாம் தாஸ்ஜி, கடவுள் எனக்கு பல வழிகாட்டிகளைத் தந்திருக்கிறார். அவர்களுள் ஒருவராக உங்களை நான் நினைக்கிறேன்’ காந்திஜி தன் நண்பர் கன்ஷ்யாம்தாஸ்ஜிக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இவ்விதம் குறிப்பிடுகிறார்.

மகாத்மாவே தன் வழிகாட்டியாக நினைத்த இந்த கன்ஷ்யாம் தாஸ்ஜி யார்?

`நீ கோடீஸ்வரனா?’ என்பதை நாம் எப்படிச் சொல்லுவோம்? ``நீ என்ன முகேஷ் அம்பானியா, பில் கேட்ஸா?’’ என்று கேட்போம். 30, 40 ஆண்டுகளுக்கு முன்னால், இதை எப்படிக் கேட்பார்கள் தெரியுமா? `நீ என்ன டாடா, பிர்லாவா?’ பணக்காரர் என்பதற்கே இலக்கணமாக இருந்த அவர்கள், டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடா, பிர்லா குழும நிறுவனர் கன்ஷ்யாம் தாஸ் பிர்லா (சுருக்கமாக ஜி.டி.பிர்லா). காந்திஜி வழிகாட்டி என்று அழைத்தது ஜி.டி.பிர்லாவைத்தான்.

இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளம் போட்டவர்கள், ஜி.டி. பிர்லாவும், ஜாம்ஷெட்ஜி டாடாவும்தான். இன்றைய பிர்லா குழுமம் மிகப் பிரம்மாண்டமானது. நமக்குப் பரிச்சயமான பல முகங்கள் பிர்லாவுக்கு உண்டு. வான் ஹூஸன், லூயி பிலிப். ஆலன் ஸோலி, பீட்டர் இங்கிலாந்து ஆடைகள், பேண்ட்டலூன் கடைகள், ஐடியா செல்போன் சேவை, பிர்லா மியூச்சுவல் ஃபண்ட், ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், ஜூவாரி சிமெண்ட், 1957 முதல் 2014 வரை வெற்றிகரமாகத் தயாரிக்கப்பட்ட அம்பாசிடர் கார், ஏராளமான தமிழக மாணவர்கள் படிக்கும் பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (சுருக்கமாக பிட்ஸ்). இவை தவிர, அலுமினியம், செம்பு, கெமிக்கல்கள், காகிதம், விஸ்கோஸ் நூல் இழைகள் எனப் பல்வேறு துறைகளில், 40 நாடுகளில் 200 க்கும் அதிகமான பிர்லா குழும நிறுவனங்கள். இந்த விருட்சங்கள் அத்தனைக்கும் வித்திட்டவர் பிர்லா.

பாலைவனங்கள் நிறைந்த ராஜஸ்தான் மாநிலத்தில், பிலானி என்னும் குக்கிராமம். எப்படிப்பட்ட பட்டிக்காடு தெரியுமா? மக்கள் தொகை 3000. கல்வியறிவு மிகக் குறைவு. நாளிதழ்கள் படிப்பவர்கள் ஆறே ஆறுபேர்தாம். ஒருவருக்குக் கூட ஆங்கிலம் படிக்க, பேசத் தெரியாது. சுமார் 30 பேருக்குத்தான் இந்தி, உருது படிக்கத் தெரியும். இங்கே, 1894 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ம் தேதி பிறந்தார்.

பிலானி கிராமத்தில் பள்ளிக்கூடமே கிடையாது. ஆகவே, பிர்லாவின் அப்பா வீட்டிற்கு வந்து கற்றுத்தரும் டியூஷன் மாஸ்டரை ஏற்பாடு செய்தார். ஒன்பதாம் வயதில் கணிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் நன்றாக வந்தன. வாசிப்பு, எழுத்து, ஆங்கில அறிவு சுமாருக்கும் கீழே. பிர்லாவை கொல்கத்தாவிலிருந்த அண்ணன் ஜூகல் கிஷோரோடு தங்க அனுப்பினார்கள்.

ஜூகல், தம்பியை பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். பிர்லாவின் சக மாணவர்கள் கொல்கத்தா நகரத்துக்காரர்கள். கிராமத்துச் சிறுவனை எப்போதும் கேலி செய்தார்கள். இதனால், பிர்லா பள்ளிக்கூடம் போவதைத் தவிர்த்தார். காலையில் சிலேட்டு, புத்தகம் சகிதம் வீட்டைவிட்டுப் புறப்படுவார். பள்ளிக்கூடம் போகமாட்டார். கொல்கத்தாவில் வீதி வீதியாகச் சுற்றுவார். மாலையில் நல்ல பையனாக வீடு திரும்புவார்.

மகனின் நடவடிக்கை மும்பையிலிருந்த அப்பாவுக்குத் தெரிந்தது. பிர்லாவை அங்கே அழைத்துக்கொண்டு போனார். வீட்டில் ஆசிரியர்களை வைத்து, ஆங்கிலம், அக்கவுன்டிங் கற்றுக்கொள்ளச் செய்தார். ஒரு ஆசிரியர், பிசினஸ் தொடர்பான தந்திகள் எழுதச் சொல்லிக் கொடுத்தார், நாளிதழ்கள் படிக்கும் பழக்கத்தை உண்டாக்கினார். பிர்லா ஆரம்பப் பள்ளித் தேர்வு எழுதினார், தேறினார். இத்தோடு பள்ளிப் படிப்பு முடிந்தது. ஆனால், `நாளிதழ்கள், புத்தகங்கள், அகராதி ஆகியவை அவருக்கு ஆசிரியர்களானது.’ வாசிப்பு பிர்லாவின் சுவாசிப்பாயிற்று. அறிவு எல்லைகள் விரிந்தன. அப்பா, பருத்தி, வெள்ளி போன்ற பொருட்களின் தரகு வியாபாரம் செய்துவந்தார். தன்னோடு மகனைக் கூட்டிக்கொண்டு போவார். வியாபார நுணுக்கங்கள் சிறு வயதிலேயே பிர்லாவுக்குப் புரியலாயின.

16 வயது. மகன் சொந்தமாகத் தொழில் நடத்தும் திறமை கொண்டவன் என்பது அப்பாவுக்குத் தெரிந்தது. கொல்கத்தாவுக்கு அனுப்பினார். அண்ணனோடு ஒரு சின்ன வாடகை அறையில் தங்கிய பிர்லா சணல் தரகு வியாபாரத்தில் இறங்கினார். சணல் இழைகளை வாங்கி, சாக்குகள், பைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்வார். இந்தத் தொழிற்சாலைகள் பிரிட்டிஷாரால் நடத்தப்பட்டன.

பிர்லா ஒரு நாள், ஆன்ட்ரூ யூல் என்னும் பிரிட்டிஷ் நிறுவனத்துக்குப் போனார். அந்த அலுவலக லிஃப்டில், `இந்தியர்களும், நாய்களும் ஏறக்கூடாது’ என்று எழுதப்பட்டிருந்தது. அதையும் மீறி பிர்லா ஏறப்போனார். காவலாளி தடுத்தான். படியேறி மேலே போனார். இந்தியர்கள் அங்கே உட்காரக்கூடாது. பிர்லா நின்றபடியே காத்திருந்தார். அவர் வருகையை ஆங்கில அதிகாரியின் உதவியாளர் அவருக்குத் தெரிவித்தார். அதிகாரியின் திமிரான பதில் பிர்லாவுக்குக் கேட்டது, `உதவாக்கரைக் கறுப்பு இந்தியர்களைப் பார்த்து என் நேரத்தை வீணாக்க நான் தயாராக இல்லை.’

பிர்லாவின் ரத்தம் கொதித்தது. அவருக்குள் தூங்கிக்கொண்டிருந்த தேசபக்தி விழித்து எழுந்தது. சில நண்பர்களோடு சேர்ந்து, பிரிட்டிஷார் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டார். மோப்பம் பிடித்த போலீசிடமிருந்து தப்பி ஊட்டி வந்தார். அங்கும், மதுரையிலும், சில காலம் பதுங்கியிருந்தார். அப்போது தெளிவான சிந்தனை வந்தது. இந்தியர்கள் ஆங்கிலேயரை நம்பியிருப்பதால்தானே பல அவமானங்களைச் சந்திக்கவேண்டி வருகிறது? நாமே அவர்களுக்கு சரிநிகர் சமமாக, உற்பத்தித் தொழிற்சாலைகள் தொடங்கிவிட்டால்.....

முதலீடு செய்ய ஏராளம் பணம் வேண்டும். என்ன செய்யலாம்? அவருக்குச் சாதகமாக ஒரு நிகழ்ச்சி. 1914. முதல் உலகப் போர் தொடங்கியது. சணல் உட்பட எல்லாப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு. பிர்லா பிசினஸ் சக்கைபோடு போட்டது. இங்கிலாந்திலிருந்து ஆர்டர்கள் கொட்டின. பிர்லா இப்போது யாருமே அதுவரை செய்யாத துணிச்சலான காரியம் செய்தார். லண்டனில் ஆபீஸ் திறந்தார். வருமானம் எகிறியது. முதலீடு தயார்.

பிர்லா சணல் சாக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்க முடிவெடுத்தார். தரகுத் தொழிலைவிட்டு, பிரிட்டிஷாரோடு போட்டி போடும் ரிஸ்க்கான தயாரிப்பில் இறங்க வேண்டுமா என்று குடும்பத்தார் அனைவரும் எதிர்த்தார்கள். ஆனால், பிர்லா எப்போதுமே முன்வைத்த காலை பின் வைப்பதில்லை. பேசிப் பேசி அவர்கள் மனங்களை மெள்ள மெள்ள மாற்றினார்.

இப்போது, சணல் பொருட்கள் தயாரிப்பைத் தங்கள் கடுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரிட்டிஷார் வரிசையாகத் தடைக்கற்கள் வைத்தார்கள். அவர் தொழிற்சாலைக்கு ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தால், விற்பவருக்கு அதிக விலை தந்து வளைத்துப் போடுவார்கள். இவை அத்தனையையும் தாண்டி, 1919 இல் பிர்லா ஜூட் கம்பெனி தயாரிப்பு தொடங்கியது. 25 வயது இளைஞரின் மிகத் திறமையான நிர்வாகம் கண்டு, ஆங்கிலேய போட்டி நிறுவனங்கள் பிரமித்தார்கள், பயந்தார்கள். ‘பேர்ட் அண்ட் கம்பெனி’என்னும் ஆங்கிலேய சணல் தொழிற்சாலையின் உயர் அதிகாரி மான்ட்டி தாமஸ் சொன்னார், ‘விலைக் குறைப்பு செய்து, இவன் நம்மை மார்க்கெட்டிலிருந்தே துரத்திவிடுவான். வேறு யாரையும்விட, இந்தியர்கள் தொழிற்சாலைகள் தொடங்க இவன் காரணமாக இருக்கிறான்.’ பிர்லாவை நசுக்கப் பல முயற்சிகள் செய்தார்கள். இவை அத்தனையையும் மீறி பிர்லா வளர்ந்தார்.

சணல் தயாரிப்பில் வந்த வருமானம், கிடைத்த தெம்பு இவற்றால், பிர்லா அடுத்து, பருத்தி நூல் தயாரிப்பில் இறங்கினார். முதல் உலகப் போரின் தாக்கத்தால், டெல்லியிலும், மும்பையிலும் பல பருத்தி ஆலைகள் நஷ்டத்தில் இருந்தன. குறைந்த விலைக்குக் கிடைத்தன. பிர்லா இவற்றை வாங்கினார். நிர்வாகத் திறமையால், செலவுகளைக் குறைத்து, இந்த நிறுவனங்களை விரைவில் லாபப் பாதைக்குத் திருப்பினார். அடுத்து பிர்லா நுழைந்த துறை சர்க்கரை ஆலைகள்.

1942 அம்பாசிடர் கார் தயாரிக்கும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்

1943 யுனைடெட் கமர்சியல் வங்கி

1947 ரேயான் இழை தயாரிக்கும் க்ராஸிம் இன்டஸ்ட்ரீஸ்

1958 அலுமினியம் உற்பத்தி செய்யும் ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ்

பல்வேறு துறைகளில் விரிவடைந்தது பிர்லா சாம்ராஜ்ஜியம். தன் இறுதிநாட்கள்வரை பிர்லா உழைத்தார்.

இந்தியத் தொழில் வளர்ச்சியின் முக்கிய பிரம்மாவான பிர்லாவிடம் தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர்கள், குறிப்பாக முன்னேற ஆசைப்படுபவர்கள் எல்லோருமே கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் உண்டு. அவற்றுள் முக்கியமான சிலவற்றை, அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor