Last Updated : 09 Jul, 2017 12:22 PM

 

Published : 09 Jul 2017 12:22 PM
Last Updated : 09 Jul 2017 12:22 PM

ஜிஎஸ்டி-யால் குழப்பம்:உரிய விலை அறிய உதவும் செயலி: மத்திய நிதி அமைச்சர் அறிமுகம்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பிறகு பொருள்களின் விலை விவரத்தை அறிந்து கொள்ள உதவும் செயலியை (ஆப்) மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று அறிமுகப்படுத்தியுள்ளார். 'GST Rates Finder' என்ற பெயரிலான இந்த செயலியில் அனைத்து பொருள்களுக்கும் எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது என்ற விவரம் உள்ளது.

நீங்கள் வாங்கும் செருப்பின் விலை ஜிஎஸ்டி-க்குப் பிறகு எவ்வளவு என்பதையோ அல்லது நீங்கள் ஹோட்டலில் சாப்பிட்ட உணவுக்கு எவ்வளவு வரி என்ற விவரத்தையோ இதில் அறிய முடியும். அதேபோல நீங்கள் பெறும் சேவைக்கு எவ்வளவு வரி என்ற விவரத்தையும் இதன் மூலம் அறியலாம். எந்த வகையான ஸ்மார்ட்போனிலும் இந்த செயலி செயல்படும். இதை பதிவிறக்கம் செய்துவிட்டால் பிறகு இணையதள இணைப்பு இல்லாவிடினும் (ஆஃப்லைன் மோட்) விவரத்தை அறிய முடியும். எந்தப் பொருளுக்கு வரி எவ்வளவு என்பதை அந்தப் பொருள் பற்றிய விவரத்தை இந்த செயலியில் பதிவிட்டால் வரி விவரம் தெரியவரும். அதேபோல எத்தகைய சேவை என்பதைக் குறிப்பிட்டால் அதற்கான வரி விவரமும் கிடைக்கும் என்று நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி தற்போது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவிலேயே ஐஓஎஸ் தளத்திலும் கிடைக்கும்.

எந்தப் பொருளுக்கு வரி எவ்வளவு என்பதைக் கண்டுபிடிக்க இதில் உள்ள தேடு பெட்டியில் (பாக்ஸ்) பொருள் அல்லது சேவையின் விவரத்தை பதிவிட்டால் போதும். குறிப்பிட்ட பொருள் அல்லது சேவை பிரிவில் இடம்பெற்றுள்ள பிறபொருள், சேவை விவரங்களையும் இது காட்டும். பொருள்களின், சேவைகளின் விவரம் பொதுவான தலைப்பில் இடப்பட்டுள்ளது. ஆனால் விவரங்களை அறிவது எளிது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய உற்பத்தி மற்றும் சுங்க வரி வாரியம் (சிபிஇசி) தனது இணையதளத்தில் ஜிஎஸ்டி விவரத்தை வெளியிட்டுள்ளது. cbec-gst.gov.in எனும் இணையதள முகவரியில் விரங்களைப் பெறலாம்.

நுகர்வோர் தாங்கள் பயன்படுத்தும் பொருளுக்கு எத்தனை சதவீதம் மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி எவ்வளவு என்ற விவரத்தை அறிந்து கொள்ள முடியும். பொருள், சரக்குகளின் விவரம் வாரியாக வரி விவரம் இதில் இடம்பெற்றுள்ளது.

வரி செலுத்தும் நுகர்வோர் தாங்கள் பயன்படுத்தும் பொருளுக்கு உரிய ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறதா, அதை சரியாக செலுத்துகிறோமா என்பதை அறிந்து கொள்வதற்கு வசதியாக இதுபோன்ற செயலிகள் மற்றும் இணையதள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது நுகர்வோரான பொதுமக்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x