Published : 10 Sep 2014 10:55 AM
Last Updated : 10 Sep 2014 10:55 AM

குலை குலையாய் பணம் தரும் வாழை: புதிய உத்தியால் லாபம் ஈட்டும் திருச்சி விவசாயி

திருச்சி அருகே அடர் நடவில் புதிய உத்தியைக் கையாண்டு ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலத்தில் 2,676 வாழைக் கன்றுகளை சாகுபடி செய்து பிற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார் 33 வயதே ஆன இளம் விவசாயி ஆர். கிருஷ்ணகுமார்.

திருச்சி அருகிலுள்ள மேலக் கல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் இவர். ஆலத்தூரில் இவருக்கு நிலம் உள்ளது. பரம்பரை விவசாயியான இவர், குறைந்த இடத்தில், குறைந்த செலவில் அதிக மகசூல் பெற வேண்டும் என்பதற்காக அடர் நடவு முறையைப் பின்பற்றி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு கற்பூரவள்ளி ரகத்தை பயிரிட்ட இவர், தற்போது ஏலரசி என்ற வாழை ரகத்தை பயிரிட்டுள்ளார். இந்த வகை வாழைப் பழத்துக்கு பெங்களூர், மும்பை, சென்னை ஆகிய இடங்களில் நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது என்கிறார்.

அடர் வாழை சாகுபடி பற்றி அவர் கூறியதாவது:

“அடர் நடவில் ஜோடி வரிசை என்ற முறையில் ஒரு குத்தில் ஒன்றரை அடி இடைவெளியில் 2 கன்றுகள் வீதம் ஒவ்வொரு குத்துக்கும் நீளவாக்கில் 5 அடியும், பக்கவாட்டில் 7 அடியும் இடைவெளி விட்டு நடவு செய்துள்ளேன்.

முதலில் நல்ல கன்றுகளை தேர்வு செய்து நட வேண்டும். நடவு செய்து 90 நாள்களில் தாய் கன்று மற்றும் பக்கவாட்டு கன்றுகள் அனைத்தும் ஒரே உயரத்தில் இருக்குமாறு வைத்து நறுக்கி விட வேண்டும். வழக்கமாக தாய் மரத்துடன் ஒரு கன்றைத்தான் விடுவார்கள். நான் 3 முதல் 4 கன்றுகள் வரை விட்டுள்ளேன். அனைத்து மரங்களும் தார் ஈனும். இந்த வகையில் ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலத்தில் ஜோடி வரிசை முறையில் 2,000 கன்றுகளும், பக்கவாட்டில் விட்ட கன்றுகள் 676 என மொத்தம் தற்போது 2,676 கன்றுகள் உள்ளன. (தோட்டக்கலைத்துறை பரிந்துரைப்பது ஏக்கருக்கு 1,000 கன்றுகள் தான்)

மண்ணை வளப்படுத்தி விட்டால், அதில் எதை வேண்டுமானாலும் பயிரிட்டு, நல்ல மகசூல் எடுக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் இயற்கை உரம் (மாட்டு சாணம்) மற்றும் பாஸ்போ பாக்டீரியா போன்ற நுண்ணுயிர் உரம் ஆகியவற்றை வயலில் இட்டு அதன் பின்னர்தான் கன்றுகளை நடவு செய்வேன்.

கன்றுகள் அதிகமாக இருப்பதால் மரம் மற்றும் காய்கள் வளர்ச்சி இருக்காது என்பதில்லை. மேலும், அடர் நடவில் மரங்கள் நெருக்கமாக இருப்பதால் காற்று அதிகமாக வீசினாலும் மரங்களுக்கு பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படாது. இருந்தாலும், தேவையான இடங்களில் சவுக்கு கம்புகள் மூலம் முட்டுகள் கொடுப்போம். தாய் கன்றுகளை நோய் தாக்கினாலும் கூட, பக்கவாட்டு கன்றுகளை தாக்காது.

வாழைக் கன்றுகளை நடவு செய்தவுடன் ஊடுபயிராக உளுந்து, புடலை, பீர்க்கை உள்ளிட்டவைகளையும் பயிரிடு வேன். வாழை மரம் வளர்வதற்குள் இந்த பயிர்களிலிருந்து நமக்கு வருமானம் கிடைக்கும்.

மேலும், வறட்சியால் மரங்களுக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளேன். மேலும், தோகைமலையில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளின் ஆலோசனைபடி உர நிர்வாகத்தை பின்பற்றி வருகிறேன். மேலும், மரத்தில் உள்ள காய்ந்த மட்டைகளை வெட்டி வயலிலேயே போட்டு விடுவேன். இதனால் களைகள் அதிக அளவில் முளைக்காது. மட்டைகள் மக்கி வயலுக்கு உரமாகி விடும் என்கிறார் கிருஷ் ணகுமார்.

ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலத்தில் வாழை சாகுபடியை மேற்கொள்ள ஓராண்டுக்கு ஏறத்தாழ ரூ 1.75 லட்சம் செலவாகிறது. அடர் நடவில் புதிய உத்தி மூலம் முறையாக சாகுபடியை மேற்கொண்டால் ரூ.7 லட்சம் வரையில் லாபம் கிடைக்கும். ஏலரசி வாழை குறைந்தபட்சம் கிலோ ரூ.30 முதல் அதிகபட்சமாக ரூ.54 வரையில் விற்பனை செய்துள்ளேன். நான் பயிரிட்டுள்ள 2,676 மரங்களில் 2,300 தார்களாவது நிச்சயம் கிடைக்கும்.

கடின உழைப்பும், தொழிலில் ஈடுபாடும் இருந்தால், மண்ணை யும் பொன்னாக்கலாம் என்பது தான் விவசாயி கிருஷ்ண குமாரின் தாரக மந்திரம். இவரது உழைப்பு, உத்தியைக் கவுரவிக்கும் வகை யில் தேசிய ஆராய்ச்சி மையம் சிறந்த வாழை விவசாயி விருதை வழங்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு 96777 09902 என்ற எண்ணில் அவரை தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x