Last Updated : 01 Jan, 2017 12:30 PM

 

Published : 01 Jan 2017 12:30 PM
Last Updated : 01 Jan 2017 12:30 PM

கத்தோலிக் சிரியன் வங்கியில் 51 சதவீத பங்குகளை வாங்க பிரேம் வாட்சாவுக்கு ஆர்பிஐ அனுமதி

கேரளாவை மையமாகக் கொண்டு செயல்படும் கத்தோலிக் சிரியன் வங்கியில் 51 சதவீத பங்குகளை வாங்குவதற்கு கனடாவை சேர்ந்த தொழிலதிபர் பிரேம் வாட்சாவுக்கு ரிசர்வ் வங்கி முதல் கட்ட அனுமதியை வழங்கி இருக்கிறது.

அந்த வங்கியில் 51% பங்கு களை வைத்திருக்க பேர்பாக்ஸ் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. பேர்பாக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் பிரேம் வாட்சா. ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். கனடாவின் வாரன் பபெட் என்று அழைக்கப்படுபவர்.

ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைத்திருக்கிறது. பங்குகள் பரிமாற்றம் இன்னும் 4 மாதங்களில் முடிவடையும் என அந்த வங்கியின் தலைவர் சந்தான கிருஷ்ணன் தெரிவித்தார். அடுத்த கட்டமாக வங்கியை மதிப்பிடுவதற்கு மதிப்பீட்டாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஐந்து வருடங்களுக்கு பங்குகளை விற்க கூடாது என்றும், 12 வருடங்களில் பேர்பாக்ஸ் பங்கு 15 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி விதிமுறைகள் விதித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக வங்கியின் செயல்பாடுகள் மேம்பாடு அடைய 3 முதல் 4 ஆண்டுகள் ஆகும். அதனால் ரிசர்வ் வங்கி ஐந்து ஆண்டுகள் வெளியேறக்கூடாது என்னும் விதிமுறை வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு நிதிச்சேவை பிரிவில் பிரேம் வாட்சாவின் மிகப்பெரிய முதலீடு இதுவாக இருக்கும். ஏற்கெனவே ஐஐஎப்எல் நிறுவனம் மற்றும் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலும் கணிசமான பங்குகளை பிரேம் வாட்சாவின் நிறுவனம் வைத்திருக்கிறது.

கத்தோலிக் சிரியன் வங்கி 90 வருடங்களுக்கு மேலாக செயல் பட்டு வருகிறது. இந்தியாவில் பட்டியலிடப்படாத மிகச்சில தனியார் வங்கிகளில் இதுவும் ஒன்று. இந்த வங்கியில் 20-க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் ஒரு சதவீதத்துக்கு மேலான பங்குகளை வைத்திருக் கின்றனர்.

லூலூ குழுமத்தின் தலைவர் யூசப் அலி வசம் 4.98 சதவீத பங்குகள், பெடரல் வங்கி வசம் 4.61 சதவீத பங்குகளும் உள்ளன. தவிர பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களான எடெல்வைஸ் குரூப், ஆக்னஸ் கேபிடல், ஏஐஎப் கேபிடல் டெவலப்மென்ட், ஜிபிஇ ஆகிய நிறுவனங்களும் இந்த வங்கியில் முதலீடு செய்துள்ளன.

தற்போது இந்திய தனியார் வங்கிகளில் 74% வரை அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு யெஸ் வங்கி மற் றும் ஹெச்டிஎப்சி வங்கியில் அந்நிய முதலீடு உயர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x