Published : 03 Sep 2014 11:14 AM
Last Updated : 03 Sep 2014 11:14 AM

இலைகள் மூலம் நாற்று உற்பத்தி

நாற்று உற்பத்தியில் இலைகள் மூலம் செடி வளர்ப்பு எனும் புதிய நடைமுறையைக் கண்டுபிடித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ராஜரத்தினம்.

கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் வெளிப்பாளையம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜரத்தினம். 4 ஏக்கரில் நர்சரி தோட்டம் அமைத்து நாற்று உற்பத்தியை மேற்கொண்டு வருகிறார். நாற்று உற்பத்தியில் இலைகள் மூலம் செடி வளர்ப்பு எனும் நடைமுறையைக் கண்டறிந்துள்ளார்.

இந்த தொழில்நுட்பம் குறித்து அவர் கூறியதாவது: “கடந்த 1998-ம் ஆண்டில் இருந்து நாற்று உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறேன். பூ வகைகளில் மல்லி, முல்லை, ஜாதி ரோஜா, அரளி, காக்கடா ஆகியவையும், பழ நாற்றில் ஈடன் எலுமிச்சை (குளோன் நாற்று), மாதுளை, பப்பாளி ரகம் ஆகியவையும், மர வகைகளில் மலை வேம்பு, சந்தனம், செஞ்சந்தனம், பெருமரம் போன்றவற்றையும் உற்பத்தி செய்து வருகிறேன்.

நாற்று உற்பத்தியில் விதைகள் மூலம் நாற்று உற்பத்தி, கட்டிங் முறை, விண் பதியம், மண் பதியம், ஒட்டுக் கட்டுதல், மொட்டுக் கட்டுதல், பட்டிங், கிராஃபிங், திசு வளர்ப்பு போன்ற முறைகள்தான் இருந்து வருகிறது. இலைகள் மூலம் நாற்று உற்பத்தி என்பது புதிய முறையாகும்.

மண் நிரப்பிய பாலிதீன் பைகளை பனிக் கூடாரத்தினுள் அடுக்கி வைக்க வேண்டும். அதன் மீது தண்ணீர் விட்டு நன்றாக ஈரம் செய்ய வேண்டும். அடுத்து விருப்பமான செடிகளில் இருந்து இலைகளை பறிக்க வேண்டும்.

உதாரணத்துக்கு கொய்யா இலையை எடுத்துக் கொண்டால், அந்த இலையை பூஞ்சானைக் கொல்ல பயன்படும் திரவத்தினுள் போட்டு எடுக்க வேண்டும். அடுத்து வேர் தூண்டும் பவுடரை இலைக் காம்பில் மட்டும் தொட்டு, அந்த இலையை பாக்கெட் மண்ணில் நட வேண்டும். கூடாரத்தின் வெப்ப நிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை சரியான அளவில் பராமரிக்க வேண்டும். முதல் 5 வாரத்தில் காம்பு பகுதியில் இருந்து வேர் வரும். பின்னர், வேர் முடிச்சில் இருந்து புதுச்செடி உருவாகிவிடும். இதையடுத்து, பாக்கெட்டில் இருந்து செடியை வெளியே எடுத்து நடலாம்.

இந்த முறையில், விவசாயிகள் அதிகம் பயிரிடும் கொய்யா, குண்டு மல்லி, திருச்சி மாவட்டத்தில் அதிகம் பயிரிடக் கூடிய இட்லி பூ, காக்கடா, வெற்றிலை ஆகிய பயிர்களை பயிரிட்டு வெற்றி அடைந்துள்ளேன். கட்டிங் மூலம் வராத தாவர வகைகளிலும் இந்த புதிய முறையின் மூலம் நாற்று உற்பத்தி செய்ய முயற்சித்து வருகிறேன். தற்போது, இந்த புதிய முறை மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நாற்றுகளை விவசாயிகளுக்கு சோதனை அடிப்படையில் இலவசமாகக் கொடுத்து வருகிறேன்.

விதை வளர்ப்பு முறையில் விளைச்சல் ஒரே மாதிரி இருக்காது. திசு வளர்ப்பு முறையில் ஒரு செடிக்கு ரூ. 12-க்கு குறையாமல் நாற்று உருவாக்க முடியாது. இதற்கெல்லாம் மாற்றாக இருப்பதுதான் இலைகள் மூலம் செடிகள் உற்பத்தி முறையாகும்” என்கிறார் ராஜரத்தினம்.

தொடர்புக்கு: 94860 94670

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x