Last Updated : 05 Jan, 2017 10:45 AM

 

Published : 05 Jan 2017 10:45 AM
Last Updated : 05 Jan 2017 10:45 AM

இந்திய தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பங்களை உருவாக்குங்கள்: கூகுள் நிறுவனத்திடம் மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

இந்திய நிறுவனங்களின் தேவைகளுக்கேற்ப புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குங்கள் என்று கூகுள் நிறுவனத்தை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கேட்டுக் கொண்டார்.

டெல்லியில் கூகுள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மேலும் கூறியதாவது:

கூகுள் நிறுவனம் அமெரிக் காவில் தொடங்கப்பட்டிருந்தாலும் இந்தியர்கள் அதிகம் உள்ள நிறுவனம். இதனாலேயே இந்நிறு வனத்துக்கு இங்கு மிகப் பெரிய அங்கீகாரம் உள்ளது. இந்நிறுவனம் இந்தியத் தேவைகளுக்கேற்ப தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும். குறிப்பாக சைபர் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக் கியதாக அது இருக்க வேண்டும். இந்தியர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்ட இந்நிறுவனம், இந்தியத் தேவைகளுக்கேற்ற நுட்பத்தை வடிவமைத்து வழங்க வேண்டிய கடமை, பொறுப்பு உள்ளது.

குறிப்பிட்ட துறைக்குப் பொருத்த மானவற்றை வடிவமைத்துத் தர வேண்டும். அதாவது உள்ளூர் மொழிகள் மற்றும் உள்ளூர் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாக நிறுவனத் தயாரிப்புகள் இருக்க வேண்டும்.

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் அடுத்த நான்கு ஆண்டுகளில் 1 லட்சம் கோடி டாலர் அளவுக்கு வளர்வதற்கான சாத்தியம் உள்ளது. இத்தகைய சூழலில் இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியில் கூகுள் நிறுவனம் தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும். சைபர் பாதுகாப்பில் மிகப் பெரிய பங்களிப்பை கூகுள் நிறுவனம் அளிக்க முடியும்.

டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு இந்தியா முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதில் ஏற்படும் பாதுகாப்பு அம்சங்களில் கூகுள் சிறப்பாக செயல்பட முடியும். சைபர் குற்றங்களை `ரத்தமில்லாத யுத்தம்’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இத்தகைய குற்றங்களைத் தடுப்பதில் கூகுள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன். இதன் மூலம் இந்தியத் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானதாக மாறும்.

பண மதிப்பு நீக்க நடவடிக் கைக்குப் பிறகு இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக மொபைல் வாலட், யுபிஐ மற்றும் யுஎஸ்எஸ்டி ஆகிய பரிவர்த்தனைகளின் உபயோகம் அதிகமாகியுள்ளது.

பணமற்ற பரிவர்த்தனை குறிப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனை பாதுகாப்பானதா என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. அதைப் போக்கும் வகையில் அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் நிறுவனங்களும் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் பாதுகாப்பில் இந்தியா முன்னோடியாகத் திகழ அரசு எத்தகைய நடவடிக்கையையும் எடுக்கத் தயாராக உள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் மய மாற்றம் வருங்காலத்தில் உலகிற்கு மிகச் சிறந்த படிப்பினையாக இருக்கும். டிஜிட்டல் பரிவர்த்தனையைப் பொறுத்தமட்டில் இந்தியா பின்பற்றும் முறைகள் மிகச் சிறந்த அளவுகோலாக பிற நாடுகளுக்கு அமையும். இத்தகைய மாற்றத்தில் கூகுள் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தினார்.

கூகுளின் 2 புதிய திட்டங்கள்

டிஜிட்டல் பயிற்சித் திட்டம் மற்றும் கூகுள் மை பிசினஸ் செயலி எனும் இரண்டு திட்டங்களை கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிமுகப்படுத்தினார். சிறு மற்றும் குறுந்தொழிலில் ஈடுபடும் 5.10 கோடி பேர் பயனடைவதற்கு கூகுள் மை பிசினஸ் செயலி உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

முதலாவது திட்டத்தின் கீழ் 40 நகரங்களில் ஆஃப்லைன் மூலம் 5 ஆயிரம் பயிற்சி வகுப்புகளை நடத்த கூகுள் திட்டமிட்டுள்ளது. ஃபிக்கி, இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸினஸ் (ஐஎஸ்பி) ஆகியவற்றுடன் இணைந்து அடுத்த 3 ஆண்டுகளில் இது செயல்படுத்தப்பட உள்ளது. பயிற்சி முடித்தவர்களுக்கு கூகுள், ஐஎஸ்பி, ஃபிக்கி ஆகிய மூன்றும் இணைந்து சான்றிதழ் வழங்கும்.

`பிரைமர்’ என்ற பெயரிலான செயலி ஏறக்குறைய பயிற்சி மாதிரிதான். ஆனால் இதில் உரையாடும் வசதி உள்ளது. ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் இது செயல்படும். ஆப்லைனிலும் (இணையதள இணைப்பு இல்லாமலும்) இது செயல்படும். முதல் கட்டமாக ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் இது வெளியிடப்பட்டுள்ளது.

இது தவிர மை பிசினஸ் இணையதளமும் தொடங்கப்பட் டுள்ளது. இதை சிறு தொழில் துறையினர் பயன்படுத்திக் கொள்ள முடியும். இது இந்த ஆண்டு இறுதியில் செயல்பாட்டுக்கு வரும். மிகவும் எளிமையாக, திருத்தும் வசதி கொண்டதாக தங்களைப் பற்றிய தகவலை இதில் பதிவேற்றம் செய்ய முடியும்.

இந்த இணையதளம் ஆங்கிலம், ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, மராத்தி, தமிழ், உருது, குஜராத்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகும்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x