Published : 16 May 2016 09:44 AM
Last Updated : 16 May 2016 09:44 AM

அந்நிய முதலீட்டாளர்கள் லாபமீட்டும் தொகைக்கு வரி செலுத்தியாக வேண்டும்: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கருத்து

அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியா வில் லாபமீட்டும் தொகைக்கு கட்டாயம் வரி செலுத்தியாக வேண் டும். இந்தியாவின் உள்நாட்டு பொரு ளாதாரம் வளர்ந்து வருவதால் அந்நிய முதலீட்டுக்கு ஊக்க நடவடிக்கைகள் தேவையில்லை. வரி செலுத்த சொல்வதன் மூலம் அந்நிய முதலீடு குறையாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் கூறியதாவது:

சமீபத்தில் இந்தியாவுக்கும் மொரிஷியஸுக்குமான இரட்டை வரி விதிப்பு தடுப்பு ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் அந்நிய முதலீட்டாளர்கள் வேறு ஒரு வரி சலுகை கொடுக்கும் நாட்டுக்கு செல்லக்கூடும் மேலும் இந்தியாவுக்கு வரும் அந்நிய முதலீடு குறையும் என்ற கவலை தேவையற்றது.

இந்த சட்ட திருத்தத்தால் இந்தி யாவில் இருந்து சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு சென்று அதன் மூலம் இந்தியாவுக்கு வரும் பணம் தடுக்கப்படும், இதனால் உள்நாட்டு நுகர்வு உயரும்.

34 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வர கடந்த சில வருடங்களாகவே முயற்சி எடுக்கப்பட்டு வந்தது. இப்போது அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் வரி விதிக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் உருவாக்கப் பட்ட காலத்தில் இந்தியாவுக்கு அந்நிய முதலீடு தேவைப்பட்டது. பொருளாதாரத்தை ஊக்குவிக்க அந்நிய முதலீட்டுக்கு சலுகை வழங்கப்பட்டது. இப்போது இந்திய பொருளாதாரம் பலமிக்கதாக இருக்கிறது. அதனால் இந்தியா மூலமாக சம்பாதிப்பவர்கள் அதற்குரிய வரியை கட்டாயம் செலுத்தியாக வேண்டும்.

தவிர சந்தையில் நிலவும் தேவையற்ற ஏற்ற இறக்கங்களை தடுப்பதற்காக இந்த ஒப்பந்தத்தில் படிப்படியாக மாற்றம் செய்யப் பட்டிருக்கிறது. இந்த மாற்றம் காரணமாக அந்நிய நேரடி முதலீட்டில் மாற்றம் வரும் என்று நான் நினைக்கவில்லை. இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.

நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா இந்தியா மொரி ஷியஸ் உடனான ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொண்டதன் மூலம் வெளிப்படைத்தன்மை உயரும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:

இதன் மூலம் இரண்டு நன்மைகள் ஏற்படும். முதலாவதாக, இந்த ஒப்பந்த திருத்தம் மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று, வரி ஆதாயத்துக்காக மொரிஷியஸ் மூலம் மீண்டும் இந்தியாவுக்கு முதலீடு வருவது தடுக்கப்படும். 2019-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என அனைவருக்கும் மூலதன ஆதாய வரி ஒன்றுதான்.

இரண்டாவது வெளிப்படைத் தன்மை. தகவல் பரிமாற்றத்தின் மூலம் மொரிஷியஸ் கம்பெனிகள் மூலமாக முதலீடு செய்வது யார் என்பது நமக்கு வெளிப்படையாக தெரியும் என்று ஜெயந்த் சின்ஹா கூறினார்.

இந்தியாவுக்கும் மொரிஷி யஸுக்கும் இடையேயான ஒப்பந்தம் 1982-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கையெழுத்தானது. கடந்த 15 ஆண்டுகளில் 19 லட்சம் கோடி ரூபாய் முதலீடு மொரிஷியஸ் மூலமாக இந்தியாவுக்கு வந்திருக்கிறது.

கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலாக காலகட்டத்தில் இந்தியாவுக்கு 2,940 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடு வந்திருக்கிறது. இதில் 1,700 கோடி டாலர் மொரிஷியஸ் மற்றும் சிங்கப்பூர் மூலமாக வந்திருக்கிறது. மொரிஷியஸ் உடனான ஒப்பந்தம் போலவே சிங்கப்பூர் நாட்டுடன் ஒப்பந்தம் போடப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x