Published : 28 Sep 2015 10:31 AM
Last Updated : 28 Sep 2015 10:31 AM

தொழில் ரகசியம்: பிராண்ட் தழைக்க பாக்கேஜிங் தேவை

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். பலர் பாதி ஆடையோடு திரிவதை விடுங்கள். மார்க்கெட்டிங்கில் பிராண்ட் பாதி பாக்கேஜிங் பாதி. காலகாலமாக மார்க்கெட்டிங்கின் முக்கிய அம்சமாகக் கருதப்பட்டு வந்த சித்தாந்தம் ‘ஃபோர் பி’ (Four P’s) - புராடக்ட், பிரைஸ், பிளேஸ், புரமோஷன். இன்றைய கட் த்ரோட் காம்பெடிஷன் உலகில் பிராண்ட் தழைக்கத் தேவை ஐந்தாவது பி - பாக்கேஜிங் - என்கிறார்கள் வல்லுனர்கள்.

பாக்கேஜிங் என்பது பொருள் பற்றி வாடிக்கையாளர்கள் அறிய, தெரிய, புரிய, விளக்க, விவரிக்க, பாதுகாக்க அதை சுற்றியிருக்கும் ரேப்பர், டப்பா என்றுதான் பலர் நினைக்கின்றனர். அக்கால பாக்கிங் முறை இப்போது மலையேறிவிட்டது. போட்டி நிறைந்த மார்க்கெட்டிங் உலகில் பாக்கேஜிங் ஒரு மார்க்கெட்டிங் கருவி. வாடிக்கையாளரை வசீகரிக்கும் விளம்பரம். பொருள் உபயோகத்தை எளிதாக்கும் சாதனம். பொருளை பாதுகாக்கும் கண்டெயினர். மொத்தத்தில் பாக்கேஜிங் என்பது பிராண்டை வாடிக்கையாளருக்கு விற்கும் சைலண்ட் சேல்ஸ்மென்!

ஆனால் இன்றும் பலர் பாக்கேஜிங்கை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அதற்குரிய மரியாதை கொடுப்பதில்லை. பொருளை அப் படியே வாரி தரக்கூடாது என்கிறார்கள் என்பதால் ஏதோ ஒரு பேப்பரில் சுற்றிக் கொடுத்துத் தொலைப்போம் என்று தான் பாக்கேஜிங்கை எளிதாக, ஏளனமாக நினைக்கிறார்கள்.

ஒன்றும் வேண்டாம். சாதாரண பிஸ்கெட் பாக்கெட்டை ஈசியாய் கிழித்து, பிரித்து குழந்தைக்கு கொடுக்க முடிகிறதா? கை, வாய், பல் பாதாதிகேசத்தை பிரயோகித்து, சேர்த்து வைத்த பலத்தை உபயோகித்து ரேப்பரை பிரித்து கிழித்து பிஸ்கெட்டை எடுத்து தருவதற்குள் குழந்தை பெரியவனாகி காலேஜ் போயிருப்பான்!

தீபாவளிக்கு புது சட்டை வாங்கி ஈசியாய் பிரித்து போட முடிகிறதா? சட்டைக்குள் கடத்தல் சாமான் போல் ஏகப்பட்ட பேப்பரும் அட்டையும். அதை அள்ளிப் போட்டு அதோடு இருக்கும் குண்டூசிகளை பிடுங்குவதற்குள் பொங்கல் வந்துவிடும். சரி வாங்கியது வாங்கியாச்சு பொங்கலுக்காவது போடுவோம் என்றால் விட்டுப்போன குண்டூசிகள் உடம்பை அங்கங்கு குத்தும். ஒரு அல்ப சட்டையைப் பிரித்து போடுவதற்கு இத்தனை அக்குபஞ்சர் ட்ரீட்மெண்ட் அவசியமா!

சொன்னால் பிஸ்கெட் விற்பவர்கள், சட்டை தைப்பவர்கள் சண்டைக்கு வருவார்கள். வேறெப்படி பாக்கிங் செய்வதாம், இப்படி செய்யவில்லை என்றால் பிஸ்கெட் நமுத்து போகாதா. சட்டை கிழிந்து போகாதா என்று. அணுகுண்டு வைக்கும் டப்பாவை கூட ஈசியாக திறக்கும்படி பாக்கேஜிங் செய்யப்படும் இக்காலத்தில் பிஸ்கெட் பாக்கெட்டை பள்ளிப் படிப்பு முடிப்பதற்குள் பிரிக்கும்படி செய்ய முடியாதா? ஊதுவத்தி ஸ்டாண்ட் போல் உடம்பை குத்திக்கொள்ளாதபடி சட்டையை பேக் செய்ய முடியாதா?

பாக்கேஜிங் பிராண்டின் முகம். இப்படி பார்த்தால்தான் இதன் அருமை புரியும். இதை சரியாய் செய்யவேண்டும் என்ற அவசரம் புரியும். பாக்கேஜிங்கை அழகாய், அவசியமாய், அமோகமாய் எப்படி வடிவமைப்பது என்பதை அதை செய்து வெற்றி பெற்ற பிராண்டு களிடமிருந்து விளக்கமாய் தெரிந்துகொள்வோம்.

பாக்கேஜிங் அழகாக இருத்தல் அவசியம். கோடிகள் கொட்டி தரப்படும் டீவி விளம்பரங்களை மக்கள் பாராமல் போகலாம், லட்சக்கணக்கில் தரப்படும் பத்திரிகை விளம்பரங்கள் யார் கண்ணிலும் படாமல் இருக்கலாம். ஆனால் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக பார்ப்பது பாக்கேஜிங். அதை கொஞ்சம் அழகாக டிசைன் செய்யலாமே.

பாக்கேஜிங்கை வித்தியாசமாய் வடிவமைத் தால் விவேகம். மற்ற பிராண்ட் மத்தியில் வைக் கப்படும்போது வித்தியாசமாய் தெரியும் பாக்கேஜிங் வாடிக்கையாளர் கண்ணில் வக்கனை யாய்படும். எல்லா சிப்ஸ் பாக்கெட்டுகளும் ஒன்று போலிருக்க, ‘பிரிங்கிள்ஸ்’ மட்டும் நீண்ட உருளை டப்பாவில் வருகிறது. வித்தியாசமாய் தெரிவதோடு சிப்ஸ் உடையாமலும் பாதுகாக் கிறது. மூடிய டப்பா என்பதால் சிப்ஸ் மொரு மொருவென்று இருக்கிறது. கடைசி சிப்ஸை கடித் தாலும் சந்து முனை வரை சத்தம் கேட்கிறது!

பொருள் உபயோகத்தை பாக்கேஜிங் எளிதாக்கினால் எதேஷ்டம். டாய்லெட் மூலை முடுக்கெல்லாம் சுத்தப்படுத்தும் வகையில் ’ஹார்பிக்’ பாக்கேஜிங் கூனல் வடிவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கூனிக் குருகி இருந்தாலும் டாய்லெட்டை மற்ற பிராண்டுகளை விட சுத்தமாக்க உதவுவதால் மார்க்கெட்டில் தலை நிமிர்ந்து நிற்கிறது.

வேல்யூ பாக்கிங் செய்யமுடிந்தால் விசேஷம். விலை அதிகமான ஷாம்பு பாட்டில்கள் மட்டும் இருந்த காலத்தில் அனைவரும் எளிதாக வாங்கும்படி சாஷே பாக்கேஜிங் வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டு பட்டி தொட்டியெல்லாம் விற்று வெற்றி பெற்றன ‘வெல்வெட்’ மற்றும் ‘சிக்’ ஷாம்புக்கள். சாஷே புரட்சி ஏற்படுத்தி நாம் பொருள் வாங்கும் முறையை முழுவதும் மாற்றியமைத்தது இப்பிராண்டுகளின் பாக்கேஜிங்!

பொருளை உபயோகித்த பின் பாக்கேஜிங் பயன்படும்படி பண்ண முடியுமா என்று பாருங்கள். அக்காலத்தில் ‘ஹார்லிக்ஸ்’ பாட்டில்களில் தானே பெண்கள் ஊறுகாயை போட்டு வைத்தார்கள். அட்டையில் பேக் செய்யப்பட்டிருந்த ‘அருண்’ ஐஸ் க்ரீம் சமீபத்தில் அழகிய ப்ளாஸ்டிக் பேக்கேஜிங்கிற்கு மாறியது. இது ஐஸ் க்ரீமை எளிதாக எடுக்க உதவி, அதோடு உபயோகித்தபின் சமையல் சாமான் வைக்கவும், குழந்தைகளுக்கு டிபன் டப்பாவாகவும் பயன்படுகிறது. அருண் பெயர் பொறித்த இந்த டப்பாக்களால் பிராண்டிற்கு எக்ஸ்ட்ரா விளம்பரமும் கிடைக்கிறது.

பொருள் தரத்தை பாதுகாக்கும்படி பாக்கேஜிங் இருந்தால் பேஷாய் இருக்கும். காபி பொடி வாங்கி கொஞ்சம் உபயோகித்து மீதியை என்ன மூடி வைத்தாலும் அதன் வாசம் போய்விடுகிறது என்பதை உணர்ந்த ‘ப்ரூ’ தன் பேக்கோடு ‘அரோமா லாக்’ என்ற ஒன்றை அறிமுகப்படுதியது. பேக்கை திறந்து எடுத்தபின் அதன் மீது ஹேர் க்ளிப் போன்ற இதை மாட்டினால் வாசம் போகாமல் நீண்ட நாள் இருக்கும் என்று சூடாய் விளம்பரம் செய்து ஜோராய் விற்கவும் செய்தது.

பாக்கேஜிங்கில் புதுமைகளை புகுத்தினால் பேஷாக இருக்கும். பாட்டில்களில் மட்டுமே ஜூஸ் பிராண்டுகள் வந்த காலத்தில் ‘ஃப்ரூட்டி’ டெட்ராபேக் வடிவில் வந்து தனியாய் தெரிந்ததே. தனித்துவமாய் மிளிர்ந்ததே. இதுவும் பாக்கேஜிங் புதுமை தானே.

பாக்கேஜிங் கொண்டு பிராண்டிற்கு கூடுதல் பயன் தரமுடியுமா என்றும் தேடுங்கள். தர முடிந்தால் அதுவே பிராண்டை வாங்க வாடிக்கையாளருக்கு கூடுதல் காரணமாய் அமையும். டூத்பேஸ்டை உபயோகிப்பதில் பெரிய சிக்கல் அதன் கடைசி காலத்தில் வரும். பல நாள் உபயோகித்து பேக்கின் கீழே ஒளிந்திருக்கும் பேஸ்ட்டை மேலே கொண்டு வர அதை அழுத்தி பிடித்து கிட்டத்தட்ட பேக்கின் மேலேயே ஏறி உட்கார வேண்டியிருக்கிறது. கீழ் பகுதியை கிழித்து எடுக்கும் வசதியோடு ஒரு டூத்பேஸ்ட் வந்தால் எவ்வளவு எளிதாக இருக்கும், யோசித்துப் பாருங்கள்!

நாம் தினம் வாங்கும் பொருள்களில் புதுமை புகுத்த எத்தனையோ வழிகள் உண்டு. பிரயோஜனப்படாமல் தூக்கி எறியும் பாக்கிங் கிற்கு புதிய பலன்கள் கொடுக்கும் முறைகள் உண்டு. மினரல் வாட்டர் பாட்டில்களில் ஃப்ளாஸ்க் போல் ஸ்ட்ராப் இருந்தால் தூக்கிச் செல்ல எத்தனை எளிதாக இருக்கும். செய்யலாமே. ஃபேன், அயர்ன் பாக்ஸ், லேப் டாப் போன்ற ஐடங்களை வாங்கிய டப்பாக்களை மீண்டும் பயன்படுத்தும் படி வடிவமைக்கலாமே.

ஆஃப்ட்டரால் பாக்கேஜிங் என்று அசால்ட்டாய் இருக்காதீர்கள். பாக்கேஜிங் பவரை புரிந்துகொள்ளுங்கள். சரியாய் வடிவமைத்தால் இது போட்டியை போட்டுத் தள்ளும் ஆயுதம். வாடிக்கையாளர்களை வசீகரிக்கும் சொக்கு பொடி. தளர்ந்த விற்பனையை தூக்கி நிறுத்தும் காய கல்பம். வாலிப வயோதிக மார்க்கெட்டர்கள் இதை நினைவில் நிறுத்தினால் நல்லது!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x