Published : 11 Apr 2015 10:31 AM
Last Updated : 11 Apr 2015 10:31 AM

தொழில் ரகசியம்: பாரபட்சமில்லாமல் முடிவெடுங்கள்

வியாபாரத்தில் பல நேரங்களில் தவறு நடப்பது முடிவெடுக் கும் முறையில் அல்ல, முடிவெடுப்பவர் மனதில் என்பதை பிள்ளையார் சுழி போட்டு போன வாரம் பார்த்தோம். மனம் வேலை செய்யும் விதம் பல சமயங்களில் முடிவுகளை நாசம் செய்கிறது என்கிறார்கள் 'ஜான் ஹேமண்ட்’, ‘ரால்ஃப் கீனி’ மற்றும் ‘ஹோவர்ட் ரைஃபா’.

’ஹாவர்ட் பிசினஸ் ரெவ்யூ’வில் ‘The hidden traps in decision making’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் நிர்வாகம் தவறான முடிவெடுப்பதிலுள்ள உளவியல் ரீதியான புதைகுழிகளை பட்டியலிட்டிருக்கின்றனர்.

போன வாரம் ஆன்கரிங் ட்ராப்பை பார்த்தோம். முடிவெடுக் கையில் உங்களையே முடிக்க, குழி யில் குப்புற தள்ளி கூடி நின்று கும்மியடிக்க இன்னும் பல படு குழிகள் குதூகலத்துடன் குழுமி யிருக்கின்றன. அதில் இன்னொன்று ‘ஸ்டேடஸ் கோ ட்ராப்’.

அறியாமல் செய்யும் தவறு

நிர்வாகங்களைக் கேட்டால் தாங்கள் விருப்பு வெறுப்பில் லாமல், பாரபட்சம் பாராமல், அறிவுபூர்வமாக, அப்ஜெக்டிவாக, ஆழமாக அனுதினமும் முடிவெடுப் பதாக ஆணித்தரமாக அடித்துக் கூறுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அதற்காக நிர்வாகங் கள் பொய் சொல்வதாக அர்த்த மில்லை. முடிவெடுக்கையில் தங் களையும் அறியாமல் தவறு செய் வதை நிர்வாகங்கள் அறிவதில்லை.

மனதில் பாரபட்சம் நிறைய இல்லையென்றாலும் குறைவாய் இருக்கும். இருந்தே தீரும். அது எடுக்கப்படும் முடிவுகளை பாதிக்கும். முடிவெடுக்கையில் மாற்று வழிகள் பல இருந்தும் அப்போழுது நிலவும் நிலை எதுவோ அதைச் சார்ந்தே பல சமயங்களில் முடிவெடுக்கிறோம். இதற்குத் ஸ்டேடஸ் கோ ட்ராப் என்று பெயர். தற்போதைய நிலையை ஆங்கிலத்தில் ஸ்டேடஸ் கோ என்பார்கள்.

நிர்வாகங்களை விடுங்கள். நம் அன்றாட வாழிவில் ஸ்டேடஸ் கோ ட்ராப்பில் எப்படி விழுகிறோம் என்பதற்கு ஒரு உதாரணம் கூறு கிறேன். ’வேலைக்காரி சரி யில்லை, ஒழுங்காக பெருக்குவ தில்லை, சொன்ன நேரத்திற்கு வருவதில்லை, என் தலை யெழுத்து, வாய்ச்ச புருஷனும் சரியில்லை, வந்த வேலைக்காரியும் சரியில்லை’ என்று நம் வீட்டு பெண் மணிகள் ஓவென்று ஒப்பாரி வைத்து ஒரு பாடு புலம்புவதைப் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப் பீர்கள்.

மூச்சுக்கு முப்பது தரம் முழு நேர தொழிலாகப் புலம்பினாலும் அவர்கள் வேலைக்காரியை மட்டும் மாற்றுவதே இல்லை. புலம்புவதை நிறுத்தி புது வேலைக்காரியை அமர்த்தலாமே. ஏன் தயங்குகிறார்கள்? மாற்று வழி இருந்தும் ஸ்டேடஸ் கோ போதும் என்று ஏன் முடிவெடுக்கிறார்கள்?

அவர்கள் அறியாத, ஆனால் ஆழ்மனதில் உள்ள ஈகோ தான் காரணம். வேலைக்காரி வேண்டும் என்று முடிவெடுத்தவர்கள் அவர்கள். வேலைக்காரியை தேர்வு செய்தது அவர்கள். தங்களுக்கு தேவை என்று நினைத்த வேலைக்காரி, தாங்கள் தேர்ந்தெடுத்த வேலைக்காரியை வேலையை விட்டு நீக்கவேண்டும் என்றால் தாங்கள் முதலில் செய்த தேர்வு தவறு என்றாகிவிடும். தவறு செய்துவிட்டோம் என்று பொதுவாகவே மனம் ஒப்புக்கொள்ளாது. அதனால் புலம்புவதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார்கள். ஸ்டேடஸ் கோ இருந்துவிட்டு போகட்டும் என்று இருந்து விடுகிறார்கள்.

புது முடிவு வெற்றியை கொடுக்குமா?

அவர்கள் மனதில் இன்னொரு பயமும் முடிவெடுப்பதை தடுக்கும். வேலைக்காரியை நீக்கி, புது வேலைக்காரியை தேடிப் பிடித்து விடலாம். நம் போதாத காலம், ஒரு வேளை அவளும் சரியில்லை என்றால் என்ன செய்வது? தலைவலி போய் திருகுவலியும் வந்து சேருமே. தங்கள் ஈகோவிற்கு இரட்டிப்பு அடி ஆகிவிடுமே என்ற பயம் பிடித்தாட்டும்.

இதே போன்ற தவறுகளை நிர்வாகங்கள் செய்வதையும் நிறு வனங்களில் பரவலாகப் பார்க்க லாம். விற்பனை தொய்விற்கு தவறான விற்பனை உத்தியே காரணம் என்று தெரிந்தும் நிர்வாகம் உத்தியை மாற்றுவதில்லை. உத்தியை மாற்றினால் முதல் உத்தி தவறு என்று அர்த்தமாகி விடும்.

இதனால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் நாங்கள் தவறு செய்துவிட்டோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் தருவது போலாகிவிடும். எல்லோரிடமும் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டும். பழைய உத்தியே இருந்துவிட்டால் விற்பனை தொய்விற்கு வேறு ஏதாவது காரணம் சொல்லி தப்பித்து விடலாமே. இருக்கவே இருக்கிறது சேல்ஸ் டிபார்ட்மெண்ட். பழியை அவர்கள் மீது போட்டு எஸ்கேப் ஆகிவிடலாமே.

அது மட்டுமல்ல, இருக்கும் உத்தியை மாற்றி புதிய உத்தியை பிரயோகித்தால் அதற்கும் பொறுப் பேற்க வேண்டும். ஒரு வேளை அஷ்டமத்தில் சனி அஷ்டகோண லாய் அமர்ந்திருந்து அதனால் புதிய உத்தியும் சரியில்லாமல் போய் தொலைத்தால் விற்பனை மேலும் தொய்வடையும்; கெட்டப் பெயரோடு செருப்படியும் கிடைக்கும்.

இதற்கு பேசாமல் ஸ்டேடஸ் கோவே இருந்து தொலையட்டும் என்று நிர்வாகம் விட்டுவிடும். பழைய உத்தியே தொடரும். விற்பனை மேலும் தொய்வு காணும். நிறுவனம் தேய்ந்து, காய்ந்து, ஓய்ந்து போகும். முடிவெடுக்கையில் விழுந்த படுகுழி போதாதென்று அதே படுகுழியில் தொபுகடீர் என்று விழும்.

ஸ்டேடஸ் கோ ட்ராப்பில் விழாதிருக்க பல வழிகள் உண்டு. முடிவெடுக்கையில் அப்போதைய நிலையை தொடர்வதே ஒரு முடிவாக இருக்கலாம். சௌகரியமாக இருக்கிறது, இதையே செய்வோம் என்ற காரணத்தால் மட்டுமே அதை தேர்ந்தெடுக்காமல் சரியான முடிவாக இருக்கிறதா என்று ஒரு முறைக்கு இரு முறை ஆராய்வது உசிதம்.

கம்பெனி குறிக்கோளை, இலக்கை அடைய தற்போதைய நிலையை தொடர்வது சரியா; இல்லை புதிய மார்க்கம் தேவையா என்பதை ஆராய்ந்து முடிவெடுங்கள். தற்போதைய நிலை இல்லாதிருந்தால் அதையே முடிவாய் தேர்ந்தெடுத்திருப்பீர்களா என்று சிந்தியுங்கள். இன்றிருக்கும் நிலை நாளை மாறலாம். முடிவெடுக்கும் போது இருக்கும் ஸ்டேடஸ் கோ வருங்காலத்தில் எப்படி மாறும் என்று கணித்து முடிவெடுங்கள். தவறுகள் மறையவில்லை என்றாலும் வெகுவாகக் குறையும்.

புதியதை செய்ய தயக்கம் வேண்டாம்

தொழிலில் முடிவெடுப்பதில் எதையாவது செய்து தவறாகிப் போவதை விட எதையும் செய்யாது தவறாகிப் போவதற்கு அவப்பெயர் குறைவு. இதனாலேயே பல நிர்வாகங்கள் புதியதாக எதையாவது செய்யத் தயங்குகின்றன. அறிவுபூர்வமாய் சிந்தித்து, ஆக்கபூர்வமாய் செயல் புரிந்து, புதியதை புகுத்தும் போது சில தவறுகள் நடக்கலாம். அப்படி நடக்கும் போது முடிவெடுத்தவர்கள் கதையை முடித்து வீட்டிற்கு அனுப்பாமல் அவர்களை தட்டிக் கொடுத்து புதியதை வெற்றிகரமாக செயல் படவைக்கும் கலாச்சாரத்தை வளர்க்க முயலுங்கள்.

புதியதை புகுத்தினால் தவறில்லை, புதியதை புகுத்தும் போது தவறுகள் நேர்ந்தால் நிறுவனம் நம்மை கடிந்து கொள்ளாது, கடித்துத் துப்பாது என்கிற மன தைரியம் நிறுவனத்தின் முக்கிய முடிவெடுப்பவர்கள் அனை வரிடத்திலும் மலரவேண்டும். அவ்வகை மலர்ச்சி ஏற்படும் வகையில் கார்ப்பரேட் கலாச்சாரம் உருவாக்கப்படவேண்டும்.

பல சமயங்களில் ஸ்டேடஸ் கோ-வை விட புதிய வழிகள் சரியாக இருக்கும். அதில் எதை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் கூட வரும். எந்த வழியை தேர்வு செய்வது என்று முடிவெடுக்க கஷ்டமாய் இருக்கிறது என்பதற்காக ஸ்டேடஸ் கோ இருந்து தொலைக்கட்டும் என்று முடிவெடுக்காதீர்கள். முடிவெடுக்கத் தான் நிர்வாகம், சரியாக முடிவெடுப்பதே உங்கள் வேலை என்பதை மறக்காதீர்கள். இது போன்ற சமயங்களில் தேர்ந்த நிபுணர்களின் உதவியை நாடுங்கள். தப்பில்லை.

முடிவெடுப்பதில் இன்னமும் கூட படுகுழிகள் உண்டு. அதில் சிலவற்றை அடுத்த வாரம் தொடர்வோம். என்னடா இது முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகிறதே என்று நினைக்காதீர்கள். அடுத்த வாரம் இந்த டாபிக் முடியும்.

முடிவாய் இன்னொரு விஷயம். தொழிலில் முடிவெடுக்கும் தருணங்களில் முக்கியமாக வேலைக்காரியை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள். அட அதற்கில்லை சார். ஸ்டேடஸ் கோ ட்ராப்பை நினைவில் கொள்ள, அதில் விழாமல் பார்த்துச் செல்ல!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x