Last Updated : 22 Apr, 2017 11:26 AM

 

Published : 22 Apr 2017 11:26 AM
Last Updated : 22 Apr 2017 11:26 AM

தொழில் ரகசியம்: நீங்கள் பிஸியாக இருக்கிறீர்களா...?

அக்கால பிளாக் அண்ட் ஒயிட் படங்களில் பார்த்திருப்பீர்கள். பணக்கார கதாபாத்திரம் ஈஸ்ட் மென் கலரில் நீண்ட நைட் கவுன் அணிந்து கொண்டு மாடியிலிருந்து வீட்டின் ஹாலுக்கு ‘Y’ வடிவ படிக்கட்டில் இறங்கிக்கொண்டே `மேனேஜர்’ என்று அதிகாரத் தோரணையுடன் அழைத்து சோபாவில் அமர்ந்து வாயில் பைப் பற்றவைத்து செய்தித்தாளை பிரிப்பார். பிறகு `இம்பாலா’ காரிலிருந்து இறங்கி ஆபீஸில் நுழைய அனைவரும் எழுந்து குட் மார்னிங் என்று கூற லேட்டாய் வந்ததுமில்லாமல் மிடுக்காக ரூமிற்கு நடந்து செல்வார். வேலை செய்து கிழித்தாரோ இல்லையோ, சாயந்திரம் வெள்ளை டிஷர்ட் ஷார்ட்ஸ் அணிந்து டென்னிஸ் பேட்டை சுழற்றியவாரே `சாவித்திரி நான் கிளப்புக்கு போயிட்டு வரேன்’ என்பார்.

நிற்க.

இக்கட்டுரை அக்கால பிளாக் & ஒயிட் படங்களை பற்றியதல்ல. சமுதாய அந்தஸ்து, ஸ்டேட்டஸ் போன்ற வற்றை மக்கள் பார்க்கும் விதம் எப்படி மாறியிருக்கிறது என்பதைப் பற்றியது!

அக்காலத்தில் அதிகம் வேலை செய்யாமல், வேலை செய்தாலும் அதை பெரியதாகக் காட்டிக்கொள்ளாமல், பார்க், பீச், கிளப் என்று சென்றால் அவர் பெரிய மனிதர். `எனக்கொரு சோஷி யல் என்கேஜ்மெண்ட் இருக்கு’ என்று வேலை நேரத்தில் சொந்த வேலைக்கு செல்வது ஒரு பெருமையாகவே கருதப் பட்டது. `அதிக வேலை செய்யாமல் ஓய்வாக வாழ்வது சமுதாயத்தில் ஒருவர் அந்தஸ்தை பறைசாற்றுவதாகும்’ என்றார் சோஷியாலஜிஸ்ட் பொருளதார நிபுணர் ‘தார்ஸ்டீன் வெம்லென்’. என்ன, அவர் கூறியது 1899ல்!

பிளாக் & ஒயிட் படம் இன்று கலராக மாறியதை விடுங்கள். அந்தஸ்த்தின் அடையாளம் மாறியிருப்பதை கவனித் தீர்களா? இன்று சொந்த வேலைக்கு நேரம் இல்லாது ஓய்வில்லாமல் உழைப்பதே பெரிய மனிதருக்கு அழகு என்று சமூகம் நினைக்கிறது. அதற்காக அனைவரும் மாடாய் உழைக்கிறார்கள் என்றில்லை. பிசியாய் இருப்பது போல் பாவ்லா காட்டுவது கூட ஒருவித ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகிவிட்டது!

கூப்பிடும் போதெல்லாம் ஒருவர் தன் செல்ஃபோனை எடுத்தால் அவர் வேலை வெட்டி இல்லாதவர் என்று நினைக்கிறோம். இதனாலேயே பலர் சும்மா இருந்தாலும் அடிக்கும் ஃபோனை எடுப்பதில்லை. சில மணி நேரம் கழித்து அழைத்தவரை கூப்பிட்டு ‘ஒரு மீட்டிங்க்ல இருந்தேன்’ என்று வாய் கூச பொய் சொல்கிறோம். ‘நைட் வீட்டுக்கு போகவே பத்தாகிறது, அவ்வளோ வேலை’ என்கிறோம். மாலை முழுவதும் ஆபீஸ் கம்ப்யூட்டரில் சாலிடேர் ஆடிவிட்டு. `வேலையாய் இருக்கிறேன், டோண்ட் டிஸ்டர்ப்’ என்று வெட்டியாய் இருப்பவர்கள் கூட வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மெசேஜ் வைக்கிறார்கள்!

‘எப்படி இருக்கிறீர்கள்’ என்று கேட்டால் ‘சௌக்கியம்’ என்று பதில் வந்தது போய் இன்று ‘பிஸியாக’ என்று பதில் வருகிறது. `24 மணி நேரம் பத்தமாட்டேன் என்கிறது’ என்கிறோம். ‘வேலை எல்லாத்தையும் உதறிட்டு வெகேஷன் போகணும்னு ரொம்ப நாளா பிளான் பண்றேன், எங்க முடியுது, வொர்க் லோட் ஹெவியா இருக்கு’ என்று அங்கலாய்க்கிறோம். ஓய்வில்லாத உழைப்பு, பிஸியான தன்மை போன்றவை ஊடகங்களில், படங்களில், விளம்பரங்களிலும் கூட பெருமைக்குரிய விஷயமாகவே காட்டப்படுகிறது.

பிஸியாக இருப்பது போல் காட்டு வது சமுதாயத்தில் அந்தஸ்த்தின் அடை யாளமாக இருப்பதை தெரிந்து கொள்ள அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் கலந்து கொண்டவர்களில் ஒரு பிரிவினரிடம் `35 வயதான ஜெஃப் என்ற நபர் தினம் அதிக நேரம் உழைக்கிறார். அவருக்கு ஓய்வென்பதே கிடையாது’ என்று கூறப்பட்டது. இன்னொரு பிரிவினரிடம் ‘ஜெஃப் அதிகம் வேலை செய்வதில்லை, அவருக்கு ஓய்வு நேரம் அதிகம்’ என்று கூறப்பட்டது. இரண்டு பிரிவினரிடமும் ‘ஜெஃப் எப்பேற்பட்டவராக இருப்பார் என்று நினைக்கிறீர்கள்’ என்று கேட்கப்பட்டது.

ஓய்வில்லாமல் உழைப்பவர் என்று கூறப்பட்டவர்கள் ‘ஜெஃப் சமுதாயத்தில் பெரிய அந்தஸ்த்தில் இருப்பார், அவரை அனைவரும் பெரிய மனிதராக மதிப்பார்கள்’ என்றனர். உழைக்காமல் இருப்பவர் என்று கூறப்பட்ட பிரிவினர் ‘ஜெஃப் வாழ்க்கையில் தோற்றவர், பூட்ட கேஸ்’ என்றனர்!

தார்ஸ்டீன் வெம்லென் சொன்ன காலத்திலிருந்து ஒரு நூற்றாண்டில் மனிதர்கள் பார்க்கும் கோணத்தில் ஏன், எப்படி, எதற்கு இத்தனை மாற்றம்?

அதிக ஓய்வு நேரம் உள்ளவரே பெரிய மனிதர் என்பது போய் சதா பிஸியாய் இருப்பவரே ஜெண்டில்மேன் என்று மக்கள் கருதத் தொடங்க முக்கிய காரணம் உலகம் அறிவு சார்ந்த பொரு ளாதாரமாய் மாறி வருவதால். உழைப்பு என்பது மூளை, அறிவு சார்ந்தவை என்று மக்கள் நினைக்க தொடங்கிவிட் டார்கள். திறன், லட்சியம், குறிக்கோள் என்ற மனித மூலதனத்தை குறிக்கும் தன்மைகள் கொண்டவர்களே தங்கள் ஊழியர்களாக ஆவதற்கு தேவையான குணங்கள் என்று கம்பெனிகள் கருதத் தொடங்கிவிட்டன.

`நாம் ரொம்ப பிஸி, ஓய்வில்லாமல் உழைக்கிறேன்’ என்று கூறும்போது `நான் பலரால் விரும்பப்படுகிறவன், நான் கிடைக்க மாட்டேனா என்று அனைவரும் ஏங்குகிறார்கள்’ என்று கூறாமல் கூறுகிறோம். `சமுதாயத்தில் ஸ்பெஷல் அந்தஸ்து உள்ளவன் நான்’ என்று கழுத்தில் போர்டு மாட்டிக்கொண்டு அலைவதற்கு பதில் இப்படி கூறிக்கொண்டு திரிகிறோம்!

சமூகத்தின் பார்வை மாறியிருப்பதால் விற்கப்படும் பிராண்டுகளிலும் விளம் பரங்களிலும் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்று அறியவும் உலகின் பல நாடுகளில் பல ஆய்வுகள் நடத்தப் பட்டிருக்கின்றன. ஆன்லைனில் வாங்கு பவர்கள் ரொம்பவே பிஸியானவர்கள், கடைகளுக்கு சென்று நின்று நிதானமாக வாங்க நேரம் இல்லாதவர்கள் என்று பலர் நினைக்கின்றனர் என்று கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இதுவாவது பரவாயில்லை, சில மேலை நாடுகளில் சூப்பர் மார்க்கெட்டில் சென்று பொருள் வாங்குபவர்கள் அதிகம் ஓய்வில்லாதவர்கள், நேரத்தை மிச்சம் செய்ய இது போன்ற கடைகளுக்கு வந்து மொத்தமாய் வாங்கிச் செல்கிறார்கள் என்று நினைக்கிறார்களாம்.

இவ்வளவு ஏன், காதில் ஹேண்ட்ஸ் ஃப்ரீ ப்ளூடூத் செட் உபயோகித்து செல்ஃபோன் பேசுவர்கள் பிஸியானவர் கள், ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யக்கூடியவர்கள், நின்று பேச கூட நேரமில்லாத உழைப்பாளிகள் என்று பலர் நினைக்கின்றனர். அதுவே காதில் ஹெட்ஃபோன் மாட்டிக்கொண்டு செல் பவர்களை அப்படி நினைப்பதில்லை. உண்மையிலேயே அதை காதில் மாட்டிக் கொண்டு செல்ஃபோனில் ஆபீஸ் வேலையாய் பேசிக்கொண்டிருந்தால் கூட ‘அதோ பார், வேலை வெட்டி இல்லாமல் ஜாலியாய் பாட்டு கேட்டுக் கொண்டு போகிறான்’ என்று நினைக்க மக்கள் ரெடி!

இந்த விஷயங்கள் கலாசாரங்கள், நாடுகளுக்கிடையே மாறுபடுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டுபிடித் திருக்கிறார்கள். பிஸியானவன் தான் சமுதாயத்தில் பெரிய மனிதன் என்று அமெரிக்காவில் கருதப்பட, இத்தாலி நாடு அதற்கு நேர் எதிர். இன்றும் ‘Y’ மாடியிலிருந்து இறங்கி, லேட்டாய் ஆபீஸ் சென்று, மாலை கிளப்புக்கு செல்பவரே பெரிய மனிதராம்!

இதைப் பற்றி பேச இன்னமும் கூட நிறைய விஷயம் இருக்கிறது. ஆனால் பாருங்கள், எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கிறது. உங்களிடம் பேசுவதற்குள் நிறைய ஈமெயில் வந்திருக்கிறது. எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் மெசேஜ்கள் எக்கச்செக்கமாய் சேர்ந்துவிட்டன. இதெல்லாம் போதாதென்று ஏகப்பட்ட மிஸ்ட் கால்ஸ் வேறு. ஸோ, அப்புறம் பேசுவோமே!

தொடர்புக்கு: satheeshkrishnamurthy@gmail.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x