Published : 14 Jun 2016 09:53 AM
Last Updated : 14 Jun 2016 09:53 AM

தொழில் முன்னோடிகள்: பெஞ்சமின் பிராங்ளின் (1706 - 1790)

மரணத்துக்குப் பின்னும் மக்கள் உங்களை மறக்காமலிருக்க வேண்டுமா? படிக்கத் தகுதியான புத்தகங்கள் எழுதுங்கள். அல்லது, புத்தகங்களில் எழுதப்படத் தகுதியான காரியங்கள் செய்யுங்கள்.

- பெஞ்சமின் பிராங்ளின்

பதினேழாம் நூற்றாண்டு. அமெரிக் காவின் பாஸ்டன் நகரம். ஜோசையா என்பவர் தன் வீட்டில் குடிசைத் தொழிலாக சோப், மெழுகுவர்த்திகள் தயாரித்து விற்று வாழ்க்கையை ஓட்டி வந்தார். வருமானம் குறைவானாலும், வாரிசுகளுக்குப் பஞ்சமில்லை. இரண்டு மனைவிகள், பதினேழு குழந்தைகள். பெஞ்சமின் பதினைந்தாவது குழந்தை. எட்டு வயதில் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினார்கள். பையனுக்குக் கற்பூர புத்தி. எழுதப் படிக்க உடனேயே கற்றுக்கொண்டான். படிப்பில் அபார ஆர்வம். துண்டுக் காகிதம் கிடைத்தாலும், படித்து முடிக்காமல் விடமாட்டான். ஆனால், இத்தனை சூட்டிகையான சிறுவனுக்கு ஏனோ, கணிதம் மட்டும் மூளையில் ஏறவேயில்லை.

பையன் படித்து என்ன கிழித்து விடப்போகிறான்?” அப்பா படிப்பை நிறுத்தினார். தன் சோப், மெழுகுவர்த்தி தயாரிப்பில் உதவியாளாக வைத்துக் கொண்டார்.

பெஞ்சமினுக்கு பனிரெண்டு வயதானது. அண்ணன் ஜேம்ஸ் நடத்திய அச்சகத்தில் எடுபிடி வேலைக்குச் சேர்க்கப்பட்டான். அச்சகத்தில் பிரசுரமா கும் துண்டுப் பிரசுரங்கள், நோட்டீஸ்கள் அத்தனையையும் படிப்பான். அடுத்தபடி யாக வீட்டில் இருந்த புத்தகங்கள். அறிவுத்தாகம் தீரவில்லை. ஊரில் இருந்த துறைமுகத்துக்கு அடிக்கடி போவான். அங்கே வரும் பயணிகள், மாலுமிகளிடம் அவர்கள் படித்து முடித்த பழைய புத்தகங்களைக் கெஞ்சிக் கேட்டு வாங்குவான். புரிந்தாலும், புரியாவிட்டாலும், தவம்போல் படித்து முடிப்பான். அச்சுக்கோர்க்கும், கட்டுரை கள் எழுதும் அளவுக்கு அவன் திறமை வளர்ந்தது. வீட்டில் அவனைப்பற்றி யாருமே கவலைப்படவில்லை. ஆகவே, பெஞ்சமினின் திறமைகள் பற்றி யாருக்குமே தெரியாது.

1721. பெஞ்சமினுக்கு வயது 15. பாஸ்டன் நகரிலிருந்து அப்போது இரண்டு நாளிதழ்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. அவை வெளிநாட்டுப் பத்திரிகைகளில் வந்த செய்திகளை மறுவெளியீடு மட்டுமே செய்துகொண்டிருந்தன. பெஞ்சமினின் அண்ணன் படா சாமர்த்தியசாலி. உள்ளூர்ச் செய்திகளை வெளியிடும் செய்தித்தாள் தொடங்கினார். விற்பனை சூடு பிடித்தது.

பெஞ்சமின், அண்ணனின் இதழில் கட்டுரைகள் எழுத விரும்பினார். அண்ணனுக்கோ, தம்பி பள்ளிக்கூடமே போகாத அடிமுட்டாள் என்று நினைப்பு. ஆகவே, தன் படைப்புகளைப் படிக்காமலேயே, குப்பைக் கூடைக்குக் கடாசி விடுவார் என்று பெஞ்சமினுக்கு பயம். ஆகவே, Silence DoGood என்னும் புனைபெயரில் எழுதத் தொடங்கினார். கட்டுரையை எழுதி, இரவில் அச்சகத்தின் கதவுக்கு வெளியே வைத்துவிடுவார். அண்ணன் படித்தார், ரசித்தார். யார் எழுதினால் அவருக்கென்ன? நல்ல கட்டுரை ஓசிக்குக் கிடைக்கிறது. தொடர்ந்து வெளியிட்டார். பெண்ணுரிமைக்காக ஒரு பெண் வாதாடும் பாணியில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகளுக்கு வாசகர்களிடம் எக்கச்செக்க வரவேற்பு.

ஒரு நாள். பெஞ்சமினின் குட்டு வெளிப்பட்டது. அண்ணன் என்ன செய்தார்? கட்டிப் பிடித்து, உச்சி மோர்ந்தாரா? இல்லை. இல்லை. பொறாமையால் கொதித்தார். திட்டினார், அடித்தார், உதைத்தார். உடலிலும், மனதிலும் தாங்கமுடியாத வலிகள்.

பெஞ்சமினுக்குப் பதினேழு வயதானது. அண்ணன் எப்போதுமே தன்னை அடிமையாகத்தான் நடத்துவார், சிறகு விரிக்க அனுமதிக்கமாட்டார் என்று தெளிவாகத் தெரிந்தது. அப்பாவிடம் முறையிட்டார். அவர் தலையிட மறுத்துவிட்டார். தன் தலைவிதியைத் தானேதான் நிர்ணயித்துக்கொள்ளவேண்டும் என்று பெஞ்சமினுக்குத் தெரிந்தது. பாஸ்டன் நகரில் இருந்த பிற அச்சகங்களில் வேலை தேடினார். பலர் வேலை கொடுக்க தயாராக இருந்தாலும், அண்ணன் அந்த வேலைகளை கிடைக்க விடாமல் செய்தார்.

வீட்டிலேயே இருந்தால் தன் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும் என்று பெஞ்சமினுக்குத் தெரிந்தது. வீட்டைவிட்டு ஓடிப்போக முடிவு செய்தார். எங்கே போவது? என்ன செய்வது? குடும்பம் தவிர அவருக்கு யாரையும் தெரியாது, படிப்பு கிடையாது, அச்சுப்பணி தவிர வேறு தொழில் தெரியாது.

பிலடெல்பியா நகரம் வந்து சேர்ந்தார். ஒரு அச்சகத்தில் உதவியாளர் வேலை கிடைத்தது. சில வருடங்களில் சொந்த அச்சகம் தொடங்கத் திட்டமிட்டார். ஊருக்குப் போய், அப்பாவிடம் மூலதனத்துக்குப் பணம் கடனாகக் கேட்டார். அப்பா மறுத்துவிட்டார்.

பெஞ்சமினுக்கு வயது இருபது. நெஞ்சில் இப்போது ஒரு வெறி தன் அண்ணன் முன்னால், அப்பா முன்னால் வாழ்ந்து காட்டவேண்டும், ஏறும் இடமெல்லாம் எவரெஸ்ட் ஆக்கவேண் டும். என்ன செய்யலாம்? அதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்குப் 13 நற்குணங்கள் தேவை என்று பட்டியலிட்டார். (பெட்டி)

பலர் திட்டம் போடுவதில் கெட்டிக்காரர்கள். ஆனால், கனவுகளை நனவாக்க அர்ப்பணிப்பு வேண்டும், கட்டுப்பாடு வேண்டும், கடும் உழைப்பு வேண்டும். பெஞ்சமின் என்ன செய்தார் தெரியுமா? ஒரு கையளவு நோட்டுப் புத்தகம். அதில் ஒவ்வொரு “நற்குணத்துக்கும்” ஒவ்வொரு பக்கம். அதில் வாரத்தின் ஒவ்வொரு நாளும், குறிக்கோளை எட்டுவதில் செய்த சாதனைகள், சறுக்கல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்வார். இவற்றை அடிக்கடி படித்துப் பார்த்துத் தன் பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் கொண்டுவருவார். இந்தக் கடும் முயற்சியால் விரைவில் இந்தப் பதின்மூன்று நற்குணங்களும், பெஞ்சமின் ஆளுமையின் அம்சங்களாயின, அவருடைய . ஒவ்வொரு செயலிலும் பிரதிபலித்தன.

பெஞ்சமின் கடன் வாங்கினார். சொந்த அச்சகம் தொடங்கினார். தொழில் நேர்த்தி, சகாய விலை. குறித்த நேரத்தில் பணிகளை முடிக்கும் வாக்குத் தவறாமை ஆகியவற்றால் ஆர்டர்கள் குவிந்தன.

1732. புதிதாக என்ன செய்யலாம் என்று பெஞ்சமினுக்கு எப்போதும் ஒரு துடிப்பு. வருடாந்தர பஞ்சாங்கம் வெளியிட முடிவு செய்தார். அன்றைய பஞ்சாங்கங்களில் நாள்காட்டி, விவசாயிகள் விதை விதைக்க ஏற்ற நாட்கள், பருவநிலை விவரங்கள் ஆகிய சமாச்சாரங்கள் இருந்தன. இவற்றைத் தாண்டி, சுய முன்னேற்ற அம்சங்கள், பழமொழிகள், கவிதைகள், கணித விடுகதைகள், சமையல் குறிப்புகள், ராசிபலன் எனப் பல புதுமைகளைச் சேர்த்தார். அடுத்த 27 வருடங்களுக்கு, பைபிளுக்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் விற்பனையான புத்தகம், பெஞ்சமினின்Poor Richard's Almanac.

1748. பெஞ்சமினுக்கு 42 வயது. தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தார். பணம் கொட்டும் தொழில். வசதிகள். அன்பான மனைவி, குழந்தைகள், சமுதாயத்தில் மதிப்பு. மாபெரும் சபையினில் நடந்தால் மலையென வந்து குவியும் மாலைகள்.......சாதாரண மனிதனுக்குத் திருப்தி வரும். இந்தச் சகலகலா வல்லவர் மனதிலோ, தன்னலம் தாண்டிப் பொதுநலச் சேவையில் முத்திரை பதிக்கும் ஆசைகள், பேராசைகள்.

வெற்றிகரமான தொழிலிலிருந்து விலகினார். பிலடெல்பியா நகரத்தில் நூலகம், பொது மருத்துவமனை, தீயணைப்புத் துறை, ஆயுட்காப்பீட்டு நிறுவனம், கல்வி நிறுவனம் ஆகியவற்றை மக்கள் ஆதரவைத் திரட்டி உருவாக்கினார்.

இந்தப் படிக்காத மேதைக்கு அறிவியல் ஆராய்ச்சிகளில் மிகுந்த ஈடுபாடு. சோதனைகள் பல நடத்தினார். எரிபொருள் சிக்கனமான ஸ்டவ், இடிதாங்கி, கருவி, பைஃபோக்கல் மூக்குக் கண்ணாடி ஆகிய கருவிகளைக் கண்டுபிடித்தார். ``தன் சுயநலத்துக்கு அல்ல, சமுதாய நன்மைக்கே” என்னும் உறுதியோடு, இந்தக் கருவிகளுக்குக் காப்புரிமை வாங்க மறுத்தார். இவற்றைத் தயாரிக்கும் உரிமையை அனைவரும் பயன்படுத்தும் இலவசச் சொத்தாக்கினார்.

1750 காலகட்டத்தில் அமெரிக்கா பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. விடுதலைப் போராட்டம் முளைவிடத் தொடங்கியிருந்தது. பெஞ்சமின் இதன் முன்னணி வீரர்களில் ஒருவரானார். இங்கிலாந்துடன் நடந்த பல பேச்சு வார்த்தைகளில் பங்கேற்றுச் சுதந்திர முழக்கமிட்டார். சுதந்திரப் பிரகடன வரைவுக் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார். பிரான்ஸ் நாட்டுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி, அமெரிக்க விடுதலைப் போருக்கு அவர்களிடம் ஆதரவும், நிதியுதவியும் வாங்கி வந்தார்.

அமெரிக்கா, தேசத் தந்தையராக எழுவரைக் கொண்டாடுகிறது. அவர்கள் பெஞ்சமின் பிராங்ளின், ஜார்ஜ் வாஷிங்டன், ஜான் ஆடம்ஸ், தாமஸ் ஜெஃபர்ஸன், ஜேம்ஸ் மாடிசன், அலெக்சாண்டர் ஹாமில்ட்டன், ஜேம்ஸ் மன்றோ. இந்த நன்றியின் அடையாளமாக, 1914 இல், 100 டாலர் கரென்சி நோட்டில் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் உருவப்படத்தோடு வெளியிட்டார்கள். 102 ஆண்டுகளாகத் தொடர்ந்து, இன்றைய 100 டாலர் நோட்டுகளிலும் பெஞ்சமின் உலா வருகிறார்.

பெஞ்சமின் அச்சக, பதிப்புத் தொழில்களில் மாபெரும் வெற்றிகள் கண்ட மாபெரும் பிசினஸ்மேன். ஆனால், இதையும் தாண்டி, ஒரு கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர், அயல் நாட்டுத் தூதர், அரசியல் சட்டத்தை உருவாக்கிய சிற்பி, அமெரிக்காவின் தேசத் தந்தையர் எழுவரில் ஒருவர்.

பிசினஸ் தொடங்குபவர்கள் மட்டுமல்ல, வாழ்க்கையில் முன்னேற விரும்பும் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம் பெஞ்சமின் பிராங்ளின் சுய சரிதம். தமிழ் மொழிபெயர்ப்பிலும் கிடைக்கிறது.

முன்னேற்றத்துக்குத் தேவையான 13 நற்குணங்கள்

* உணவில் கட்டுப்பாடு

* தேவைப்படும்போது மட்டுமே பேசுதல்

* செய்யும் காரியங்களில் ஒழுங்குமுறை

* மன உறுதி முடிவெடுத்தல், அந்தத் தீர்மானங்களைச் செயல்படுத்துதல்

* சிக்கனம்

* கடும் உழைப்பு

* சொல்லிலும் செயலிலும் நேர்மை

* பாரபட்சமின்மை

* கருத்துகளில் மிதவாதம்

* சுத்தம்

* பதட்டமில்லா மனநிலை

* கற்பு

* தன்னடக்கம்

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x