Last Updated : 23 May, 2017 10:16 AM

 

Published : 23 May 2017 10:16 AM
Last Updated : 23 May 2017 10:16 AM

தொழில் முன்னோடிகள்: ஆன்ட்ரூ குரோவ் (1936 - 2016)

ஹங்கேரி நாட்டின் தேசிய கீதம் இது.

கடவுள் ஹங்கேரி மக்களை ஆசீர்வதிக்கட்டும்.

அவர்களுக்குச் சந்தோஷத்தையும் செழிப்பையும் தரட்டும்.

எதிரிகளோடு போராடும்போது அவர்களைக் காக்கட்டும்.

நெடுங்காலமாகத் துரதிர்ஷ்டத்தால் அவதிப்பட்டிருக்கும் அவர்களுக்குச் சந்தோஷ நாட்களைத் தரட்டும்.

கடந்த காலத்தின், வருங்காலத்தின் பாவங்களுக்கான தண்டனைகளை அவர்கள் அனுபவித்திருக்கிறார்கள்.

மக்களின் ஆதங்கங்களை, ஆசைகளைப் பிரதிபலிப்பது தேசீய கீதம். இந்தப் பாடலில் ஏன் இத்தனை சோகம், வலி? அவர்கள் அனுபவம் அப்படி.

அந்நியப் படையெடுப்புகள், உள் நாட்டுச் சண்டைகள்; கிறிஸ்தவ மத ஆதரவாளர்கள்-ராணுவம்-கம்யூனிஸ்ட் கட்சி என ரத்தக் களறிகளோடு ஆட்சி மாற்றங்கள்; யூதர்கள், ரோமன் கத்தோலிக்கர்கள், பிராட்டஸ்டான்ட்கள் எனப் பலருக்குள்ளும் மதக் கலவரங்கள். யூதர்களை ஒழித்துக் கட்ட நடந்த சித்திரவதைகள்…... இதனால், ஒவ்வொரு ஹங்கேரியக் குடிமகனின் வாழ்க்கையும் கண்ணீராலும், ரத்தத்தாலும் எழுதப்பட்டது.

இவர்களுள் ஒருவரை உங்களுக்குத் தெரியும். உங்கள் கம்ப்யூட்டர்களையும், லாப்டாப்களையும் திறக்கும்போது Intel Inside என்று காட்டும். அதாவது, இன்டெல் கம்பெனியின் சிப்கள் அதில் செயலாற்றுகின்றன என்னும் அறிவிப்பு. இந்த வளர்ச்சியின் சூத்திரதாரி, 1968 முதல் 2005 வரை இன்டெலை வழிநடத்திய ஆன்ட்ரூ குரோவ்.

ஹங்கேரி நாட்டின் தலைநகரம் புடாபெஸ்ட். இங்கே வசித்தார்கள் ஜார்ஜ் குரோ, மனைவி மரியா, ஒரே மகன் ஆன்ட்ரூ. யூத இனத்தைச் சேர்ந்தவர்கள். ஜார்ஜ் வெண்ணைய், பாலாடை தயாரித்து வியாபாரம் செய்து வந்தார். சுமார் வருமானம். ஆன்ட்ரூவின் நான்காம் வயதில் அவனுக்கு ஸ்கார்லெட் ஃபீவர் என்னும் செம்புள்ளிக் காய்ச்சல். கேட்கும் சக்தி பாதிக்கப்பட்டது. வாழ்நாள் முழுக்க ஹீயரிங் எய்ட் அணியும் கட்டாயம்.

1944. ஆன்ட்ரூவுக்கு எட்டு வயது. ஹங்கேரி ஹிட்லர் வசம் வந்தது. ஜார்ஜ் போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டார். சேதியே இல்லாமல் பல வருடங்கள். ஒரு நாள் திரும்பி வந்தார். அவரை அடையாளம் கண்டுகொள்ள ஆன்ட்ரூவுக்குப் பல நாட்களாயிற்று.

இரண்டாம் உலகப் போர். ஜெர்மனி ரஷ்யாவிடம் தோல்வி காணத் தொடங்கியது. ரஷ்ய ராணுவம் புடாபெஸ்ட் நகருக்குள். மிதப்பில் இருந்த ரஷ்யர்கள் ஜெர்மனியர்களைவிடக் கொடூரர்களாக இருந்தார்கள். ஒரு நாள். ஆன்ட்ரூவோடு நண்பர்கள் வீட்டில் மரியா தங்கியிருந்தார். ரஷ்ய ராணுவ ஓநாய் வீட்டுக்குள் புகுந்தது. ஆன்ட்ரூவை வெளியே துரத்தினார்கள். ஓநாயின் உடல்வெறிக்கு மரியா பலி. அம்மாவின் இழப்பு என்னவென்று அந்த ஒன்பது வயதுச் சிறுவனுக்கு அப்போது புரியவில்லை.

இத்தனை சோதனைகளுக்கு நடுவிலும், ஆன்ட்ரூ பள்ளிப் படிப்பில் நல்ல மதிப்பெண்கள் வாங்கினான். கெமிஸ்ட்ரியில் அதிக ஆர்வம். புடாபெஸ்ட் பல்கலைக் கழகத்தில் கெமிஸ்ட்ரியில் பட்டம் வாங்க விரும்பினான்.

இப்போது அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மேற்படிப்புக்கு நல்ல மதிப்பெண்கள் மட்டுமே தேவை என்று நம்பியிருந்த அவனுக்கு நாட்டு நடப்பு புரிந்தது. அரசின் ஆணைப்படி, அட்மிஷன் முன்னுரிமை வரிசை;

1. தொழிலாளர்கள், கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் குடும்பங்கள்

2. விவசாயிகள் குழந்தைகள்

3. அலுவலக ஊழியர்கள் குடும்பங்கள்

4. சொந்த பிசினஸ் நடத்தும் வியாபாரிகளின் வாரிசுகள்

5. மற்றவர்கள்

ஐந்தாம் பிரிவில் இருந்த அவனைப் போன்றவர்களுக்கு அட்மிஷன் வாய்ப்பே கிடையாது. கிடைக்கவில்லை. ஆன்ட்ரூ நொறுங் கிப்போனான். ஜார்ஜ் ஒரு பேராசிரியரைச் சந்தித்தார். அவன் மதிப்பெண்களைப் பார்த்த அவர் தன் வகுப்பில் சேர்த்துக்கொண்டார்.

முதல் வருடத் தேர்வு. ஆன்ட்ரூ முதலிடம் பிடித்தான். இரண்டாம் வருடம். ரஷ்ய ஆட்சி இளைஞர்களைக் கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கத் தொடங்கியது. ஹங்கேரியிலேயே தொடர்ந்தால் ஆன்ட்ரூவுக்கு வருங்காலமே இல்லையென்று மரியாவுக்கும், ஜார்ஜூக்கும் தெரிந்தது. அமெரிக்கா திறமைகளுக்கு மதிப்பும் வாய்ப்புகளும் தரும் தேசம். ஆன்ட்ரூவை அங்கே அனுப்ப முடிவு செய்தார்கள்.

ஆன்ட்ரூ வயது இருபது. குடும்பத்தை விட்டுப் பிரியவேண்டும், போகும் வழியெங்கும் ராணுவம், கண்ணில் பட்டால் சுட்டுப் பொசுக் கிவிடுவார்கள். தப்பி அமெரிக்கா போய்விட்டால் வாழ்க்கை எப்படியிருக்கும், அப்பாவைப் பார்க்க முடியுமா என்றே தெரியாது.

அப்போது ஏராளமான யூதர்கள் அமெரிக்கா வுக்குத் தப்பியோடி கொண்டிருந்தார்கள். ஆன்ட்ரூவும் அந்தக் குழுவில் சேர்ந்தான். ராணு வத்தினர் கண்களில் எப்படியோ மண்ணைத் தூவிவிட்டு அமெரிக்கா வந்து சேர்ந்துவிட்டார் கள். வாய்ப்புக் கதவுகள் திறக்கத் தொடங்கின. நியூயார்க் அரசுக் கல்லூரியில் கெமிக்கல் இன்ஜினீயரிங் படிப்பில் இடம். மூன்றரை வருடங்கள் ஓடின.

ஜூன் 15, 1960

அமெரிக்காவின் மிகப் பிரபலமான நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில்ஒரு பெட்டிச் செய்தி.

பொறியியல் கல்லூரியில் அகதி முதலிடம்!

காது கேட்காத குறை, ஆங்கிலமொழி அறிவுக் குறைவு, குடும்பத்தைப் பிரிந்து வாழும் அகதி வாழ்க்கை ஆகிய அத்தனை தடைகளையும் தூளாக்கிச் சாதனை படைத்துவிட்டான்.

அடுத்து பெர்க்லி பல்கலைக் கழகத்தில் சேர்ந்தான். கெமிக்கல் இன்ஜினீயரிங்கில் டாக்டர் பட்டம் வாங்கினான். ஃபேர்சைல்ட் செமி கண்டக்டர்ஸ் என்னும் எலெக்ட்ரானிக் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆன்ட்ரூவுக்கு இரு கரம் நீட்டி வரவேற்றது. அங்கே அவன் உயர் அதிகாரிகளாக இருந்தார்கள் கார்டன் மூர், ராபர்ட் நாய்ஸ் ஆகிய இருவர். ஆண்ட்ரூவின் கற்பூர புத்தி, கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவை கண்டு பிரமித்தார்கள். 1968. சிப் தயாரிக்கும் இன்டெல் கார்ப்பரேஷன் தொடங்கினார்கள். கம்பெனியின் மூன்றாம் தூணாக வேலைக்குச் சேர்ந்தார் ஆன்ட்ரூ.

இன்டெலின் வளர்ச்சியையும் வெற்றியையும் தீர்மானிக்கப் போவது தொழில் நுட்பத்தைவிட ஊழியர்களின் திறமைதான் என்று ஆன்ட்ரூவுக்கு அசையாத நம்பிக்கை. முன்னணிப் பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்களைத் தொடர்புகொண்டு, அதிபுத்திசாலி மாணவர்களைப் பரிந்துரைக்கச் சொன்னார். கடுமையான நுழைவுத் தேர்வுகளில் வடிகட்டி இவர்களை வேலைகளில் அமர்த்தினார்.

மாறிக்கொண்டேயிருக்கும் தொழில்நுட்பத் துறையில் அறிவுத் தேடல் அத்தியாவசியம் என்பது ஆன்ட்ரூ கொள்கை. தானே உதாரண மாக இருந்தார். ஏராளமான தொழில்நுட்பக் கட்டுரைகள் எழுதினார். குறைகடத்திக் கருவிகளின் பெளதீகமும் தொழில் நுணுக்கமும் (Physics and Technology of Semiconductor Devices) என்னும் அவர் புத்தகம், பிரபல பல்கலைக் கழகங்களின் பாடநூலாகத் தேர்ந்தெடுக்கப்படும் உயர்தரத்தில் இருந்தது.

அறிவியல், தொழில் நுட்ப அறிவைக் கொண்டு மட்டும் ஒரு நிறுவனத்தை வளரவைக்க முடியாது என்பது ஆன்ட்ரூவுக்குத் தெரியும். வாரம் ஒரு மேனேஜ்மெண்ட் புத்தகம் படிப்பதைக் கட்டாயமாக்கிக்கொண்டார். படிப்பதோடு நிற்காமல், அந்தக் கொள்கைகளைப் பரிசோதனை செய்து பார்த்தார்.

ஊழியர்களின் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்துவதில் ஆன்ட்ரூ கில்லாடி. ஊழியர் கள் அத்தனை பேரும் (அவர் உட்பட), ஒவ்வொரு வருடமும் தங்கள் இலக்குகளைப் பட்டியலிட வேண்டும். இலக்கை எட்டியவர்களுக்குப் பரிசுமழைகள்; பிறருக்கு ஆன்ட்ரூ நெற்றிக் கண்ணைத் திறப்பார்.

அதிகாரிகள் மட்டுமே கூட்டங்களில் பங்கெடுப்பார்கள் என்னும் நடைமுறையை மாற்றி, அனைத்து ஊழியர்கள் கூட்டம் நடத்தினார். கடைநிலை ஊழியர்களுக்கும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு.

ஆன்ட்ரூ துணிச்சலோடு முடிவெடுப்பவர். 1984 வரை இன்டெல் மெமரி என்னும் நினைவாற்றல் கருவிகளை (Memory Devices) தயாரித்தார்கள். ஜப்பானியப் போட்டியால் இந்த விற்பனை சரிந்தது. கம்பெனி நஷ்டத்தில். இந்தத் தயாரிப்பிலிருந்து வெளியேறி, கம்ப்யூட்டர் சிப்கள் தயாரிப்பில் இறங்க ஆன்ட்ரூ தீர்மானித்தார். ஏராள மில்லியன்கள் முதலீடு, கம்பெனியில் இருந்த 25,400 ஊழியர்களில் 7,200 பேரை வீட்டுக்கு அனுப்பவேண்டிய கட்டாயம். கம்ப்யூட்டர் யுகத்தின் கதவுகளை இன்டெலுக்கு அகலத் திறந்த திருப்புமுனை இது.

2005. ஆன்ட்ரூவுக்குப் பார்க்கின்சன்ஸ் நோய் வந்தது. உடல் நடுக்கம், வாய் குழறல். இன்டெலிலிருந்து ஓய்வு பெற்றார். 2016. வாழ்க்கையிலிருந்தே ஓய்வு கிடைத்தது.

பயந்து நடுங்குபவர்கள் மட்டுமே தொடர்ந்து வாழ்கிறார்கள் (Only the paranoid survive) என்பது ஆன்ட்ரூவின் வாழ்க்கைத் தத்துவம். “பிசினஸில் வெற்றிகள் வர வர, தோல்விகள் வரும் வாய்ப்புகள் அதிகம். நான் இன்டெலின் தற்போதைய தயாரிப்புகள் தரம் கெட்டுவிடுமோ என்று பயப்படுகிறேன். புதுத் தயாரிப்புகளை அவசர அவசரமாக மார்க்கெட்டுக்குக் கொண்டு வந்துவிடுவோமோ என்று பயப்படுகிறேன். தொழிற்சாலைகளின் உற்பத்தி குறைந்துவிடுமோ என்று பயப்படுகிறேன். புதிய தொழிற்சாலைகள் தொடங்க பயப்படுகிறேன்.”

பயமும் கவலைகளும் சாதா மனிதர்களை முடக்கிப் போடும். ஆனால், பயம் ஆன்ட்ரூ வுக்குப் புது சக்தி கொடுத்தது, எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலைக் கொடுத்தது, முயற்சிகளை ஒருமுகப்படுத்தும் குணத்தைக் கொடுத்தது. காரணம்? அவர் பிறவிப் போராளி.

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x