Published : 09 Feb 2016 10:00 AM
Last Updated : 09 Feb 2016 10:00 AM

வேகமாகப் பரவும் ஜிகா வைரஸ்: கருக்கலைப்பு தடையால் கர்ப்பிணிகள் பரிதவிப்பு

தென்அமெரிக்காவில் ஜிகா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் கருக்கலைப்பு தடை சட்டத்தால் கர்ப்பிணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரும்பாலான நாடுகள் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடுகள் ஆகும். அந்த நாடுகளில் கருக் கலைப்புக்கு தடை விதிக்கப்பட் டுள்ளது. சில நாடுகளில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டுள்ளன.

நிகாரகுவா, டொமினிகன் குடியரசு, எல் சல்வடார் உள்ளிட்ட நாடுகள் கருக்கலைப்புக்கு முழுமையாக தடை விதித்துள்ளன. பிரேசில், பராகுவா, கவுதமாலா, வெனிசூலா உள்ளிட்ட நாடுகளில் தாயின் உயிருக்கு ஆபத்து என்றால் மட்டும் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது தென்அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரீபியன் நாடுகளில் ஜிகா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு சிறிய தலை, மூளை, நரம்பு மண்டல பாதிப்புடன் குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தைகளின் குறைபாட்டுக்கும் ஜிகா வைரஸுக்குமான தொடர்பு அறிவியல்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

எனினும் ஜிகா வைரஸ் பரவிய பிறகு பிரேசிலில் மட்டும் 4 ஆயிரம் குழந்தைகள் பிறவிக் குறைபாட்டுடன் பிறந்துள்ளன. எனவே குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் கருத்தரிப்பை தவிர்க்குமாறு பிரேசில் உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. இது நடை முறையில் சாத்தியம் இல்லை என்பதால் கருக்கலைப்பு தடையை ரத்து செய்ய வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது.

பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் இந்த விவகாரம் குறித்து கத்தோலிக்க மதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆனால் இப்பிரச்சினையில் வாடிகன் தொடர்ந்து மவுனம் காப்ப தாகக் கூறப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரத்தின்படி தென் அமெரிக்க நாடுகளில் போதிய மருத்துவ வசதி இன்றி நடைபெறும் சட்டவிரோத கருக்கலைப்புகளால் ஆண்டுக்கு சுமார் 900 பெண்கள் உயிரிழப்பதாக சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஜிகா வைரஸும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. தென்அமெரிக் காவில் தற்போது 11 ஆயிரம் கர்ப்பிணிகள் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே அந்த நாடுகளில் கருக்கலைப்புக்கு தற்காலிகமாக அனுமதி அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x