Published : 23 Jul 2014 12:00 PM
Last Updated : 23 Jul 2014 12:00 PM

மூன்றில் ஒரு குழந்தைத் திருமணம் இந்தியாவில் நடக்கிறது: யுனிசெப் அறிக்கையில் தகவல்

உலக அளவில் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் நாடுகளின் வரிசையில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. உலகில் நடைபெறும் குழந்தைத் திருமணங்களில் மூன்றில் ஒன்று இந்தியாவில் நடைபெறுகிறது என ஐ.நா. அமைப்பின் யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குழந்தைத் திருமணம் தொடர்பாக யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தெற்காசியா, சஹாரா துணைக்கண்ட ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைத் திருமணம் வெகுசாதாரணமாக நடைபெறுகிறது. குழந்தைத் திருமணம் அதிகம் நடைபெறும் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

குழந்தைத் திருமணங்களில் 42 சதவீதம் தெற்காசியாவில் நடைபெறுகிறது. 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்ட 70 கோடி பெண்கள் தற்போது வாழ்ந்து வருகின்றனர். இதில், 25 கோடி பெண்கள் 15 வயதுக்கு முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டவர்கள்.

நைஜர், வங்கதேசம், சாத், மாலி, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, இந்தியா, கினியா, எத்தியோப்பியா, பர்கினா பாஸோ, நேபாளம் ஆகிய நாடுகள் குழந்தைத் திருமணம் அதிகம் நடக்கும் நாடுகளில் முறையே முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகளாகும்.

இந்தியா

இந்தியாவிலுள்ள 20 முதல் 49 வயது வரையுள்ள பெண்களில் 27 சதவீதம் பேர் 15 வயதுக்கு முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டவர்களாவர். இதே வயதுக்கு உட்பட்டவர்களில், 31 சதவீத பெண்கள் 15 முதல் 18 வயதுக்குள் திருமணம் செய்துவைக்கப்பட்டவர்கள்.

இந்தியாவில் பெண்களின் சராசரி திருமண வயது 19 ஆக உள்ளது. பொருளாதாரமும் திருமணத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

டொமினிகன் குடியரசு மற்றும் இந்தியாவில், செல்வாக்கான குடும்பத்தில் பிறந்த பெண் ஏழைப் பெண்ணை விட 4 ஆண்டுகளுக்குப் பிறகே திருமணம் செய்து கொள்கிறார்.

குழந்தைத் திருமணம் மற்றும் பெண் உறுப்பின் கந்து முனையை அகற்றுதல் (எப்ஜிஎம்), ஆகிய இரண்டு பிரச்சினைகள், பெண் குழந்தைகளைப் பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினைகள் என யுனிசெப் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நடைமுறைகள் கடந்த 30 ஆண்டுகளில் சிறிது அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, யுனிசெப் செயல் இயக்குநர் அந்தோனி லேக் கூறியதாவது:

பெண் உறுப்பின் கந்து முனையை அகற்றுதல் மற்றும் குழந்தைத் திருமணம் ஆகிய இரண்டுமே, பெண்களை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ கடுமையாகப் பாதிக்கின்றன. அதுசார்ந்த அவர்களின் முடிவை எடுக்கும் உரிமையை அவை பறிக்கின்றன.

இதுபோன்ற சடங்குகள், அந்தப் பெண்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் ஊறு விளைவிக்கின்றன.

பெண்கள் வெறும் சொத்துகள் அல்ல. முடிவெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது. அவர்கள் சொந்த முடிவை எடுக்கும்போது அதனால் அனைவருக்கும் பயன் உண்டு.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

18 வயதுக்கு முன் திருமணம் செய்துவைக்கப்படும் சிறுமிகள் பெரும்பாலும் கல்வியைத் தொடர்வதில்லை. அவர்கள் சமூக வன்முறையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மிக இளம் வயதில் திருமணம் செய்துவைக்கப்படும் பெண்கள், பேறுகால இடையூறுகளை அதிகம் எதிர்கொள்கின்றனர். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் இறந்து பிறக்கின்றன அல்லது ஒரு மாதத்துக்குள் இறந்து விடுகின்றன.

கந்துமுனை அகற்றம்

உலகில் 13 கோடிப் பெண்கள் பிறப்புறுப்பின் கந்துமுனை அகற்றப்படுவது போன்ற பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கைச் சேர்ந்த 29 நாடுகளில் இந்தக் கொடூரமான வழக்கம் நடைமுறையில் உள்ளது.

கந்து முனை அகற்றப்படும் சிறுமிகளுக்கு உடல் மற்றும் மனரீதியான வலி தவிர, நீடித்த ரத்தப் போக்கு, நோய்த்தொற்று, குழந்தைப்பேறின்மை மற்றும் இறப்புக்கு ஆளாகின்றனர்.

இந்த வழக்கம், கென்யா, தான்ஸானியா பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததோடு ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்திருக்கிறது. மத்திய ஆப்பிரிக்க குடியரசு, இராக், லைபீரியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பாதியாகக் குறைந்திருக்கிறது.

குழந்தைத் திருமணம் குறையும் வீதத்தைக் கணக்கிட்டால் வரும் 2050 வரை குழந்தைத் திருமணத்தை முற்றிலும் ஒழிக்கமுடியாது எனத் தெரிய வருகிறது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x