Last Updated : 28 Jan, 2015 04:08 PM

 

Published : 28 Jan 2015 04:08 PM
Last Updated : 28 Jan 2015 04:08 PM

மிஷேல் ஒபாமாவுக்கு நெருடலை ஏற்படுத்திய சவுதி அதிகாரிகள் அணுகுமுறை

சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் சென்ற மிஷேல் ஒபாமா, அந்நாட்டில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிகளை தவிர்த்துக் கொண்டார். இதை சவுதி அதிகாரிகள் அணுகிய விதம், மிஷேல் ஒபாமாவுக்கு நெருடலை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் முதன்மை பெண்மணியான மிஷேல் ஒபாமா, சவுதி அரேபியாவுக்குச் சென்று இறங்கிய சில மணி நேரங்களில் அந்நாட்டு பெண்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்த தெளிவு அவருக்கு வந்திருக்கக்கூடும். அதன் வெளிப்பாடு அவரது முகத்தில் தென்பட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்திகளில் குறிப்பிடப்பட்டது.

3 நாட்கள் பயணமாக இந்தியா வந்திருந்த ஒபாமா - மிஷேல், சவுதி மன்னர் அப்துல்லாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க தங்களது தாஜ்மஹால் பார்வைத் திட்டத்தை மாற்றி அமைத்து செவ்வாய்க்கிழமை சவுதி அரேபிய சென்றனர்.

சவுதி அரேபியாவுக்கு ஏர் ஃபோர்ஸ் விமானத்தில் சென்ற மிஷேல் வழக்கமாக அவர் அணியும் மேற்கத்திய ஆடை போல இல்லாமல், நீண்ட பேன்ட் மற்றும் பளீர் நிறத்திலான ஆடையுடன் மேல் அங்கி போன்றவையையும் அணிந்திருந்தார். ஆனால், சவுதி அரேபியா சட்டத்தின்படி தலையை மறைக்கும் துணியை மட்டும் அணியவில்லை.

ஏர் ஃபோர்ஸ் விமான நிலையத்தில் இறங்கிய ஒபாமா மற்றும் மிஷேலை வரவேற்க அந்நாட்டு அதிகாரிகள் வந்திருந்தனர். அவர்கள் ஒபாமாவை கை குலுக்கி வரவேற்றனர். சிலர் மிஷேலையும் கை குலுக்கி வரவேற்றனர். ஆனால், பலர் அதனைத் தவிர்த்து, தலை அசைத்து மட்டும் மிஷேலை வரவேற்று பார்வையை திருப்பிக் கொண்டனர்.

இந்த நிலையில், மிஷேல் ஒபாமாவுக்கு சவுதியில் கிடைத்த வரேவேற்பு சொல்லத் தகுந்த அளவில் இருக்கவில்லை என்று பிரிட்டனின் 'டெய்லி டைம்ஸ்' பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. ஏர் ஃபோர்ஸ் விமான நிலையத்திலும் சவுதி ஏக்ரா மாளிகையிலும் மிஷேல் ஒபாமாவின் முகத்தில் புன்னகை காணப்படவில்லை என்றும், அங்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு முகச் சுருக்கத்துடனே அவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் என்றும் அந்த பத்திரிகை படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் இஸ்லாமிய மதத்தின் ஷரியத் சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி அங்கு பெண்கள் வாகனம் ஓட்ட, உறவினர்கள் அல்லாத மற்ற ஆண்களுடன் வெளியே செல்ல, சுயமாக மாப்பிள்ளையை தேர்வு செய்து திருமணம் செய்துகொள்வது, உயர் படிப்புகளை மேற்கொள்வது, சில அறுவை சிகிச்சைகள் செய்துகொள்வது போன்றவற்றில் கடுமையான கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது.

சமீப காலமாக பெண்கள் வாகனம் ஓட்டக்கூடாது என்ற தடைக்கு எதிராக சில பெண்கள் அமைப்பினர் போராட்டங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x