Last Updated : 02 May, 2016 03:14 PM

 

Published : 02 May 2016 03:14 PM
Last Updated : 02 May 2016 03:14 PM

மின் உற்பத்திக்காக நிலக்கரி எரிக்கப்படுவதால் சீனா, இந்தியாவில் மழை குறையும்: ஆய்வில் எச்சரிக்கை

வேகப் பொருளாதார வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் மின் உற்பத்திக்காக நிலக்கரியை அதிக அளவில் எரிப்பது அப்பகுதியில் மட்டுமல்லாது உலக அளவில் கூட மழையின் அளவைக் கடுமையாக குறைத்து வருகிறது, மேலும் குறைக்கவும் செய்யும் என்று அமெரிக்க தொழில்நுட்பப் பல்கலைக் கழக ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.

அனல் மின்சாரம் என்பது சீனாவின் பிரதான மின் உற்பத்தியாகும். ஆசியாவிலேயே அனல் மின் உற்பத்திதான் பிரதானமாக விளங்குகிறது. இதனால் சல்ஃபர் டையாக்சைடு என்ற புவி வெப்பமடைதல் வாயு அதிகமாக வெளியேற்றப்படுகிறது. இந்த தூசிவாயு வெளியேற்றம் பொது ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தல் என்பதோடு உள்நாட்டு மற்றும் உலக அளவிலான பருவ நிலை மாற்றத்துக்கு பெரிய அளவில் பங்களிப்பு செய்து வருவதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

எனவே வரும் காலங்களில் ஆசிய நாடுகளின், குறிப்பாக இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் எரிசக்தி உற்பத்தி தெரிவைப் பொறுத்துதான் பருவ நிலை தீர்மானிக்கப்படும் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொருளாதார வளர்ச்சியை குறிவைத்து உற்பத்தியைப் பெருக்கி வரும் இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் நிலக்கரி எரிப்பு அதிகமாகியுள்ளதே தவிர குறையவில்லை என்று கூறும் இந்த ஆய்வு இதனால் எதிர்கால பருவநிலையில் கடும் தாக்கங்கள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது. எனவே கரியமில வாயுவை குறைவாக வெளிப்படுத்தும் எரிசக்தி உற்பத்தி தொழில்நுட்பத்தை இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தெரிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்கிறது.

அதாவது சல்ஃபர் டையாக்சைடின் அதிக வெளியேற்றம் விண்வெளியின் கீழடுக்கு, மேலடுக்கு ஆகியவற்றின் மீது இரு தீவிர எதிர்நிலைகளில் தாக்கம் ஏற்படுத்தும். அதாவது தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் ஒரு புறம் குளிரையும் அதிகமாக உணர முடியும் என்று கூறும் இந்த ஆய்வு. ஒரு புறம் மழையைக் குறைக்கும், கடலின் மேல்புற வெப்பநிலையை அதிகரிக்கும் மறுபுறம் சில பகுதிகளில் குளிரையும் அதிகப்படுத்தும் இப்படியாக கணிக்க முடியாத ஒரு பரிமாணத்தில் இதன் விளைவுகள் இருக்கும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

“அதிக அளவில் வெப்ப வாயுக்கள் வெளியேற்றத்தினால், தூசிவாயுக்கள் ஆசிய பகுதிகளில் பல முக்கிய பருவநிலைகளில் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால் சீனா, இந்தியாவில் மழை குறைந்து ஆஸ்திரேலியாவில் மழை அதிகரிக்கும் என்பதோடு ஆப்பிரிக்காவின் சாஹெல் பகுதியில் மழையின் அளவை கடுமையாகக் குறைத்து விடும். ஏற்கெனவே நீரின்றி வறண்டு கிடக்கும் பகுதிகளில் மேலும் மழை குறையவே செய்யும் என்று இந்த ஆய்வின் உறுப்பினர் பெஞ்சமின் கிராண்டி எச்சரித்துள்ளார்.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் கிளைமேட் என்ற இதழில் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x