Published : 05 Oct 2015 03:54 PM
Last Updated : 05 Oct 2015 03:54 PM

புதிய சிகிச்சை கண்டுபிடிப்புகளுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் அறிவிப்பு

2015-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை வில்லியம் சி.கேம்பல், சதோஷி ஒமுரா மற்றும் யூயூ டு ஆகியோர் வென்றனர்.

வில்லியம் சி.கேம்பல் அயர்லாந்தைச் சேர்ந்தவர். சதோஷி ஒமுரா ஜப்பானையும், யூயூ டு சீனாவையும் சேர்ந்தவர்களாவர்.

வில்லியம் சி.கேம்பல் மற்றும் சதோஷி ஆகியோர் உருளைப்புழு (ரவுண்ட் வோர்ம்) ஒட்டுண்ணிகளை முறியடிக்கும் புதிய முறை சிகிச்சையைக் கண்டுபிடித்ததற்காகவும், யூயூ டு என்பவருக்கு மலேரியா நோய்க்கான புதிய சிகிச்சையைக் கண்டுபிடித்ததற்காகவும் நோபல் பரிசுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

கேம்பல் மற்றும் ஒமுரா Avermectin என்ற புதிய மருந்தைக் கண்டுபிடித்தனர். இதனையொத்த விளைமருந்துகள் ரிவர் பிளைண்ட்னெஸ் என்ற கடுமையான சரும நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை பெருமளவு குறைக்கிறது. ஒட்டுண்ணி கண்களைத் தாக்கினால் பார்வை பறிபோகும் அபாயமும் இருப்பதால் இதனை ரிவர் பிளைண்ட்னெஸ் என்று அழைக்கின்றனர். மேலும் பல ஒட்டுண்ணிகள் விளைவுக்கும் நோய்களுக்கு எதிராகவும் இந்த மருந்து செயல்படுகிறது என்று நோபல் அகாடமியின் செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

யூயூ டு என்பவர் Artemisinin என்ற சாதனை மருந்தைக் கண்டுபிடித்தார். மலேரியா நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறிப்பிடத்தகுந்த அளவில் இந்த மருந்து குறைத்துள்ளது.

ஒட்டுண்ணிகளை பொறுத்தவரை helminths என்ற ஒட்டுண்ணிப் புழுக்கள் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களைத் தாக்குகிறது. குறிப்பாக சப்-சஹாரா ஆப்பிரிக்கா, தெற்காசியா, மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் இந்த ஒட்டுண்ணிப் புழுக்களின் தாக்கம் அதிகம். இத்தகைய ஒட்டுண்ணிகளால் ரிவர் பிளைண்ட்னெஸ் மற்றும் நிணநீர் ஃபிலாரியாசிஸ் என்ற யானைக்கால் நோய் போன்ற அபாயகரமான சரும நோய்களை உருவாக்கும் சக்தி கொண்டது.

இதற்கான ‘அவர்மெக்டின்’ என்ற மருந்தை கேம்பல் மற்றும் ஒமுரா கண்டுபிடித்தது சாதனை கண்டுபிடிப்பாகக் கருதப்பட்டு நோபல் வழங்பப்பட்டுள்ளது.

அதே போல் உலகின் 3.4 பில்லியன் மக்கள் மலேரியா நோய் தொற்று ஏற்படும் அபாயத்தில் இருந்து வருகின்றனர். ஒற்றை-செல் ஒட்டுண்ணிகளால் உருவாகும் மலேரியா நோய் காய்ச்சல் மேலும் தீவிரமடையும் போது மூளைச் சேதத்தை விளைவிப்பதோடு மரணமும் ஏற்படக்கூடிய அபாயம் மிக்கது. இதனைத் தடுக்கும் ஆர்டெமிசினின் என்ற மருந்தை யூயூ டு என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x