Published : 24 Jan 2015 12:33 PM
Last Updated : 24 Jan 2015 12:33 PM

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 8

ஜோஸபின் என்பவரை நெப்போலியன் திருமணம் செய்து கொண்டபோது பலரும் வியப்படைந்தனர். ஜோஸபின் ஏற்கனவே திருமணம் நடந்து கணவரை இழந்தவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாய். நெப்போலியனைவிட ஆறு வயது மூத்தவர். என்றாலும் ஸ்டைல் ராணி.

பத்து வருடங்கள் கடந்தும் நெப்போலியனுக்கு வாரிசு உருவாகவில்லை. ஜோஸபினை விவாகரத்து செய்தார். ஆஸ்திரிய சக்ரவர்த்தியின் மகளான மேரி லூசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆண் குழந்தை பிறந்தது (பின்னாளில் இரண்டாம் நெப்போலியன்).

1803ல் அடுத்த அதிரடி. மேலும் பல யுத்தங்கள் செய்ய வேண்டும். அதற்கு நிதி வேண்டாமா? இப்படி ஒரு கேள்வியை எழுப்பியபடி பிரான்ஸின் எல்லையிலிருந்த லூசியானா என்ற பகுதியை அமெரிக்காவுக்கு விற்றார். ஒன்றரை கோடி டாலரைப் பெற்றார்.

1812ல் ரஷ்யா மீது பெரும் படையுடன் இவர் முற்றுகையிட்ட கதை தனித்துவமானது. பிரெஞ்சுப் படை முன்னேற முன்னேற, ரஷ்யப் படை கொஞ்சம் கொஞ்ச மாக பின்வாங்கியபடி இருந்தது. இதன் பின்னணியை உணராமல் நெப்போலியனின் படைகள் மேலும் மேலும் ரஷ்யாவுக்குள் ஊடுருவின. திடீரென வெளியே, உள்ளே ஆகிய இரு திசைகளிலி ருந்தும் தாக்கின ரஷ்யப் படைகள். இதையும் மீறி மாஸ்கோவை அடைந்தது பிரெஞ்சு ராணுவம்.

இதற்குள் மாஸ்கோவின் மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறி இருந்தனர். போகிற போக்கில் வயல்களுக்கெல்லாம் தீ வைத்திருந்தனர். உணவுப் பொருள்கள் இல்லாமல் தவித்தது நெப்போலியனின் ராணுவம். போதாக்குறைக்கு ரஷ்யாவின் கடுங்குளிர் காலம் வேறு நெருங் கிக் கொண்டிருந்தது. வேறு வழி யில்லாமல் பிரெஞ்சு ராணுவம் பின்வாங்கியது. அப்போது எதிர்பாராத வகையில் ரஷ்ய ராணுவம் அவர்களைத் தாக்கியது. ஆறு லட்சம் பேருடன் ரஷ்யாவில் நுழைந்த பிரெஞ்சு படை வெறும் ஒரு லட்சம் பேரோடு மீண்டது.

‘இழந்த மானத்தை’ மீட்க நினைத்து வேறெந்த நாட்டின்மீது படையெடுக்கலாம் என்று நெப்போலியன் யோசித்துக் கொண்டிருந்தபோது பிரான் ஸுக்கு எதிராகவே போர்முரசு கொட்டப்பட்டது. பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகி யவை இணைந்து இபெரியா தீபகற்பத்திலிருந்து பிரான்ஸ் மக்களை விரட்டியது. ஆஸ் திரியா, ஜெர்மனி, ரஷ்யா, ஸ்வீடன் ஆகிய அத்தனை நாடு களின் ராணுவங்களும் ஒன்றி ணைந்து போரிட்டு பாரீஸை தங்கள் பிடிக்குள் கொண்டு வந்தன. நெப்போலியனின் மகுடம் பறிக்கப்பட்டது. இத்தாலியிலி ருந்து சற்று தள்ளி அமைந்திருந்த எல்பா என்ற தீவுக்கு அவர் நாடு கடத்தப்பட்டார். அவர் மனைவியும் மகனும் ஆஸ்திரியாவுக்குச் சென்றனர்.

சுமார் ஒரு வருடம் அந்தத் தீவில் வாழ்ந்த நெப்போலியன் அங்கிருந்து தப்பி பிரான்ஸுக் குள் நுழைந்தார். உள்ளூர் மக்கள் உற்சாகமாக அவரை வர வேற்றனர். புதிய மன்னனாக அமர்த்தப்பட்ட மன்னன் பதி னெட்டாம் லூயி சத்தம்போடாமல் மறைந்துவிட்டார்.

கொதித்த எதிரணி நாடுகள் போருக்குத் தயாராயின. அவர் களை ஒவ்வொருவராக வெற்றி கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார் நெப்போலியன். முதலில் அவர் தேர்ந்தெடுத்தது பெல்ஜியத்தை. தொடக்கத்தில் வெற்றி கிடைத்தது. ஆனால் ஜெர்மன் ராணுவத்தின் உதவி யுடன் பிரிட்டன் நெப்போலியனின் ராணுவத்தை சிதறடித்தது. வாட்டர்லூ என்ற இடத்தில் நெப் போலியன் மோசமான தோல்வி யைத் தழுவினார். பிரிட்டனைச் சேர்ந்த தீவான செயின்ட் ஹெலெனா என்ற பகுதிக்கு கடத் தப்பட்டார் நெப்போலியன். அங்கு இறந்தார். வயிற்றுப் புற்றுநோயால் இறந்தார் என்கிறார்கள். ‘’நான் இறந்தால் என்னை மிகவும் விரும்பிய பிரெஞ்சு மக்களின் நடுவே சியென் நதிக்கரையில் என்னைப் புதைக்க வேண்டும்’’ என்று அவர் கூறியது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இறந்த தீவிலேயே புதைக்கப்பட்டார்.

நெப்போலியனின் மறைவிற் குப் பிறகு ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியாளர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். ‘இனி யாருமே ஐரோப்பா முழுவதையும் தன் வசம் கொண்டுவரக் கூடாது. அதற்கு முயற்சிகளும் எடுக்கக் கூடாது’. இப்படியொரு தீர்மானத் துடன் அனைத்து முக்கிய நாடுகளின் பிரதிநிதிகளும் 1814-ல் வியன்னாவில் கூடிப் பேசினர். ஐரோப்பிய நாடுகளின் எல்லைகள் வரையறுக்கப்பட்டன. இனி எந்த ஒரு நாடாவது பிற நாடுகளை முற்றுகையிட்டால் மீதி அத்தனை நாடுகளும் ஒன்று சேர்ந்து அதை எதிர்க்க வேண்டும் என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். கூடவே எந்த நாட்டிலும் புரட்சி வெடிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் கருத்து பரிமாறிக் கொண்டனர்.

மிகவும் சீரியஸான ஒரு மாநாடாகத்தான் அது இருந்தது. ஆனால் பிரான்ஸ் தொடர்பான வேறொரு சீரியஸான விஷயம் விளையாட்டில் பதிந்து அது உலக அங்கீகாரம் பெற்றது அந்த நாட்டின் சரித்திரத்தில் மற்றொரு மைல்கல்.

2013-ம் ஆண்டில் பிரான்ஸில் நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டது 1903-ல் அங்கு தொடங் கப்பட்ட, பின்னர் உலகப் புகழ் பெற்ற டூர் டே பிரான்ஸ் எனப்படும் சைக்ளிங் பந்தயம் தொடர்பாகத்தான் அந்த விழா.

(இரண்டு உலகப் போர்களின் போதும் இந்தப் போட்டிகள் நடைபெறவில்லை. எனவே அந்த ஆண்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை). வேடிக்கை என்னவென்றால் இந்தப் போட்டி தொடங்கப்பட்டது ஒர் அரசியல் காரணத்துக்காக.

பிரெஞ்சு ராணுவத்தில் அதிகாரி யாக விளங்கியவர் கேப்டன் ஆஃல்ப்ரட் ட்ரேஃபாஸ். இவர் யூத இனத்தைச் சேர்ந்தவர். துரோகம் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு கடும் தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு அவர் குற்றம் செய்யவில்லை என்று தெரிய வந்தது.

இதற்கான ஆதாரங்கள் முன்னமே ராணுவ உயர் அதிகாரிகளிடம் இருந்தன என்றும், வேண்டுமென்றே அவற்றை வெளியிடவில்லை என்றும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இதுபற்றி பட்டி மன்றம். கூடவே யூதர்களுக்கு எதிரான போக்கு பிரான்ஸில் நிலவுகிறது என்பதைப் பற்றியும் இருவேறு கருத்துகள். கிட்டத்தட்ட பிரான்ஸ் தேசமே இரண்டுபட்டு நின்றது.

(இன்னும் வரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x