Last Updated : 28 Jan, 2015 01:02 PM

 

Published : 28 Jan 2015 01:02 PM
Last Updated : 28 Jan 2015 01:02 PM

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் 10

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி மீண்டும் பிரான்ஸை ஆக்கிரமித்தது. இம்முறை ஜெர்மனி தரப்பில் ஜப்பான் சேர்ந்து கொண்டது. கூட்டு நாடுகள் அணியில் அமெரிக்கா வெளிப்படையாகவே இடம் பிடித்தது.

இரண்டாம் உலகப் போரின் தொடக்கமே ‘’பிரான்ஸுடன் போர்’’ என்று ஜெர்மனி அறிவித்ததுதான். இம்முறை ஜெர்மனியின் தாக்குதல் பலமாகவே தொடங்கியது. நெதர்லாந்து, வடக்கு பெல்ஜியம் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தி பிறகு பிரான்ஸின் மையப் பகுதியை நோக்கி முன்னேறியது.

இம்முறை பிரிட்டிஷ் ராணுவம் ஜெர்மனியின் இரண்டு ராணுவப் பிரிவுகளுக்கிடையே மாட்டிக் கொண்டது. தனிமைப்பட்ட பிரான்ஸ் ராணுவத்தை ஜெர்மனி எதிர்கொண்டது. பாரீஸ் - அதுதான் ஜெர்மனி ராணுவத்தின் முக்கிய இலக்கு.

பிரிட்டிஷ் புதிய பிரதமர் வின்சன்ட் சர்ச்சில் தன் முழு ஆதரவை பிரான்ஸுக்கு அளித்தார். நேரடியாகவே பாரீஸுக்கு ஒரு விசிட் செய்தார். ஆனால் தொடர்ந்து தனது ராணுவத்தை பிரான்ஸுக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டினார். தனது எல்லைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமே என்ற எண்ணம்.

இதற்குள் பிரெஞ்சு ராணுவம் பலத்த அடி வாங்கியிருந்தது. சரணடையத் தயாரானது. பாரீஸை அடைந்தார் ஹிட்லர். பிரபல ஈஃபில் டவருக்கு முன்னால் நின்று கொண்டு வெற்றிக் களிப்புடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

ஜூன் 13, 1940 அன்று பாரீஸ், பிரான்ஸின் கையிலிருந்து முழுமை யாக நழுவியது. அன்று பிரான்ஸ் அரசு அதை தன் பிடியிலிருந்து விடுவித்துவிட்டதாக அறிவித்தது. சமாதான உடன் படிக்கைக்கு அவசரமாக ஒத்துக் கொண்டது பிரான்ஸ். ஆனால் ஹிட்லர் அந்த ஒப்பந்தம் எந்த இடத்தில் கையெழுத்தாக வேண்டும் என்ப தில் உறுதியாக இருந்தார். எந்த ரயிலில் ஜெர்மனி முதலாம் உலகப் போரில் சரண் அடைந்ததை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டதோ, அதே ரயிலில்தான் இப்பொழுது பிரான்ஸ் கையெழுத்திட வேண் டும்.

ஆக பிரான்ஸ் ஒட்டுமொத்தமான அவமானத்தை சந்தித்தது. பிரான்ஸின் படு தோல்வி கூட்டு நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சி. அடுத்த நான்கு வருடங்களுக்கு பிரிட்டன் கிட்டத் தட்ட தனியாகவே தனது எல்லைப் பகுதிகளில் ஜெர்மனியுடன் போராட வேண்டிய கட்டாயம். இந்த இடத்தில் சார்லஸ் டி காலே குறித்து குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.

பிரான்ஸின் ராணுவத் தளபதியாக விளங்கிய அவர் அந்த நாட்டின் அதிபதியும் ஆனார். ஆனால் பாரீஸ் ஜெர்மனியின் வசமான 1940-லிருந்து அவர் பிரான்ஸின் 'சட்ட பூர்வமற்ற' அதிபரானார். அதாவது ஜெர்மனியின் வசப் பட்ட பிறகு, பிரெஞ்சு அரசாங்கம் டி காலேவிடமிருந்து ஃபிலிப் பெடென் என்பவர் கைக்குச் சென்றது. மத்திய பிரான்ஸிலிருந்த விச்சி என்பதைத் தலை நகரமாகக் கொண்டு, ஜெர் மனியின் ஆலோசனைப் படி அரசு நடத்தினார் இவர்.

ஜெர்மனியிலிருந்து நாஜிக்கள் பாரீஸைப் பரவலாகவே ஆக்கிர மித்தனர். அதேசமயம் புரட்சி ஆட்சி ஒன்றை டி காலே பிரிட்டனிலிருந்து கொண்டே நடத்தத் தொடங்கினார். அங்கிருந்தே பிரெஞ்சு ராணுவம் ஒன்றை உருவாக்கினார். ஒரு வழியாக மேலும் பல அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு பாரீஸ் விடுதலை பெற்றது. பிரிட்டனிலிருந்து இயங்கிய பிரெஞ்சு ராணுவமும் அமெரிக்க ராணுவமும் கூட்டு சேர்ந்து பாரீஸை நாஜிக்களிடமிருந்து விடுவித்தனர்.

இதற்குள் காலத்தின் கோலமாக ஹிட்லரின் ராணுவத்திலேயே சில கருத்து வேறுபாடுகள் தோன்றின. “பாரீஸைவிட்டுக் கிளம்புவதற்கு முன்பாக அந்த நகரின் முக்கிய அடையாளங்களை அழித்துவிட்டு, நகரைத் தீக்கிரையாக்கி விட்டு பிறகு ஜெர்மனிக்கு வந்து சேருங் கள்” என்ற ஹிட்லரின் ஆணையை, அவரது தளபதி ஏற்க மறுத்து விட்டார்.

பிரான்ஸுக்கும் ஜெர்மனிக்கும் உள்ள உறவு இன்றுகூட அவ் வளவு சிறப்பாக இருக்கிறது என்று கூறிவிட முடியாது. இன்றைய பிரான்ஸ் அதிபர் ஹொலந்தோ வும், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெலும் பல விஷயங்களில் எதிரும் புதிருமாகத்தான் ஐரோப் பிய யூனியனில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்கு மற்றும் கிழக்கு ஜெர் மனிகள் இணைந்ததை பிரான்ஸ் ரசிக்கவில்லை. சொல்லப் போனால் அதற்கு இந்த நிகழ்வு அதிர்ச்சிதான்.

1981-ல் பிரான்ஸ் அதிபர் மிட்டர் ரன்ட் பல தொழில்களையும் வங்கி களையும் தேசியமயமாக்கினார். ஐரோப்பிய யூனியனின் பொருளா தாரத்துக்கு இது ஏற்றதல்ல என்று குரல் கொடுத்தது ஜெர்மனி.

ஐரோப்பிய யூனியனில் பல கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது பிரான்ஸ். பட்ஜெட் பற்றாக்குறை குறைக்கப் பட வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் கூறுவதை தள்ளிப்போட வேண்டும் என்கிறது பிரான்ஸ். மத்திய தரைப்பகுதியைச் சுற்றி யுள்ள ஐரோப்பிய நாடுகளும் வடஅமெரிக்க நாடுகளும் இணைந்து ஓர் அமைப்பை உரு வாக்க வேண்டுமென்றும் பிரான்ஸ் கூறி வருகிறது. லிபியாவுடன் ஓர் அணு ஆயுத ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது பிரான்ஸ்.

இந்த ஒவ்வொரு கட்டத்திலும் ஜெர்மனியின் பிரதமர் மெர்கெல் பிரான்ஸுக்கு எதிராகத்தான் பேசி வருகிறார் அல்லது வாக்களித்திருக் கிறார். அதாவது இந்த இரு நாடு களுக்கிடையே உள்ள சரித்திரப் பகைமை பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பிரான்ஸ் அதிபர் பொதுவாக ‘முதலில் செயல்படுவோம். பிறகு ஆலோசனையைக் கேட்போம் என்கிற வகையைச் சேர்ந்தவர். ஜெர்மனி பிரதமரோ திறமையான வாதங்களை முன்வைத்துவிட்டு பிறகு தன் முடிவை செயல்படுத்த வேண்டும் என்பதுபோல் நடந்து கொள்கிறார்.

பிற ஐரோப்பிய நாடுகள் இரு தரப்பிலும் நியாயமும் அநியாய மும் உள்ளன என்பதுபோல் நடந்து கொள்கின்றன.ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரான்ஸ் குடியரசு ஆனபின் அதிபராக பதவியேற்ற இருவரின் செயல்பாடுகள் ஜெர்மனியை மட்டுமல்ல, பல உலக நாடுகளின் அதிருப்தியை சம்பாதித்தது.

(இன்னும் வரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x