Last Updated : 24 May, 2016 05:56 PM

 

Published : 24 May 2016 05:56 PM
Last Updated : 24 May 2016 05:56 PM

பிகினி விளம்பரத்தை வெளியிட மறுத்ததற்கு மன்னிப்பு கோரிய ஃபேஸ்புக்

உடல் பருமனான பெண் மாடலின் பிகினி விளம்பரத்தை வெளியிட மறுத்ததற்காக, ஃபேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

டெஸ் ஹாலிடே என்னும் உடல் பருமனான பெண், பெண்ணிய விளம்பரம் ஒன்றில் மாடலாக நடித்திருந்தார். ஆஸ்திரேலிய குழுமம் ஒன்று பெண்ணியக் கருத்துக்களையும் உடல் பருமனையும் விளக்க, கருத்தரங்கம் ஒன்றை ஜூனில் ஏற்பாடு செய்திருந்தது.

அதை ஃபேஸ்புக் வாயிலாக தெரியப்படுத்த முயன்றபோது, 'இந்த விளம்பரம் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தின் மீறலாக இருக்கும்' என்று கூறி விளம்பரத்தை வெளியிட ஃபேஸ்புக் மறுத்தது.

கருத்தரங்குகளை விளம்பரப்படுத்தும் நோக்கில், அக்குழு பணம் செலுத்தவும் முன்வந்தது. ஆனால் ஃபேஸ்புக் அந்தப் படத்தை வெளியிட மறுத்துவிட்டது. ''இதுபோன்ற படங்கள், பார்வையாளர்களை மோசமாக எண்ண வைக்கும். இதில் உடல் பாகங்கள் ஒழுங்கற்ற முறையில் இருக்கின்றன. இதற்குப் பதிலாக ஓடுவது போலவோ, பைக் ஓட்டுவது போன்ற படங்களையோ பயன்படுத்தலாம்'' என்றும் ஃபேஸ்புக் தெரிவித்தது.

இச்சம்பவத்துக்கு பல்வேறு பக்கங்களில் இருந்தும் கண்டனங்கள் குவிந்த நிலையில் ஃபேஸ்புக், ''எங்களின் குழுவினர், தினந்தோறும் லட்சக்கணக்கான விளம்பரப் படங்களை கையாள்கின்றனர். சில நேரங்களில் இது போன்ற தவறுகள் நிகழ்ந்து விளம்பரங்கள் தடுக்கப்படும். அதைப் போன்ற சம்பவம்தான் இது. அதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்.

இந்த புகைப்படம் எங்களின் விளம்பரக் கொள்கைகளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. தவறு ஏற்பட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். விளம்பரதாரர்களுக்கு இந்த விளம்பரம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x