Published : 28 Sep 2016 11:23 AM
Last Updated : 28 Sep 2016 11:23 AM

பாகிஸ்தானில் சார்க் மாநாடு: இந்தியாவை அடுத்து வங்கதேசம், பூடான், ஆப்கன் புறக்கணிப்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் சார்க் மாநாட்டில் பங்கேற்பதில்லை என இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவைத் தொடர்ந்து வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

காரணம் என்ன?

தங்கள் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதாக தெரிவித்துள்ள வங்கதேசம், இதன் காரணமாக இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

பூடான் நாடோ, தெற்காசிய பிராந்தியத்தில் அண்மைக்காலங்களில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த மாநாட்டை புறக்கணிப்பதாகக் கூறியுள்ளது.

இந்த முடிவை இருநாடுகளும் சார்க் அமைப்புக்கு தற்போது தலைமை வகிக்கும் நேபாள நாட்டிடம் முறைப்படி அறிவித்துள்ளன.

இந்தியா சொல்வது என்ன?

சார்க் மாநாட்டை புறக்கணிப்பதற்கு இந்திய தரப்பில் வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நமது பிராந்தியத்தில் எல்லை தாண்டி வரும் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்திருப்பது, சார்க் உறுப்பு நாடுகளின் உள் விவகாரங்களில் ஒரு நாட்டின் தலையீடு அதிகரித்திருப்பது போன்றவை, 19-வது சார்க் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு சாதகமாக இல்லை.

இந்தச் சூழலில் இஸ்லாமாபாத்தில் வரும் நவம்பரில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் இந்தியாவால் பங்கேற்க இயலாது. இத்தக வலை சார்க் அமைப்புக்கு தற்போது தலைமை வகிக்கும் நேபாள நாட்டிடம் தெரிவித்துள்ளோம்" என்று கூறப்பட்டுள்ளது. சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித் திருப்பது துரதிருஷ்டவசமானது என பாகிஸ்தான் கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானும் புறக்கணிப்பு:

இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் கடந்த வாரம் கூறும்போது, "இந்தியா மற்றும் பிற உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து சார்க் மாநாட்டை புறக்கணிப்பது குறித்து ஆப்கானிஸ்தான் ஆராய உள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.

அதன்படி ஆப்கானிஸ்தானும் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை புறக்கணித்துள்ளது.

இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "ஆப்கானிஸ்தானில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள தீவிரவாதத்தால் அங்கு வன்முறை அதிகரித்துள்ளது. இதனால் அதிபர் முகமது அஷ்ரப் கனி உள்நாட்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முழு கவனத்துடன் ஈடுபட்டிருப்பதால் அவர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது" எனத் தெரிவித்துள்ளது.

மாநாட்டுக்கு வாய்ப்பில்லை:

சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக 8 உறுப்பு நாடுகளில் இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான் ஆகிய 4 நாடுகள் அறிவித்துள்ளதால் வரும் நவம்பரில் இஸ்லாமாபாத்தில் சார்க் மாநாடு நடைபெற வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x